Ad

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

வாகனங்களில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பினால் ஆபத்தா? - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

சில நாள்களுக்கு முன்பு, `பாரத் பெட்ரோலியம் எச்சரிக்கிறது' என்ற ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வலம் வந்தது. அதில், ``வரும் நாள்களில் வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்புக்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும், தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி நிரப்பி காற்று வருவதற்கு இடம் அளிக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் ஐந்து வெடி விபத்துகள் நடந்துள்ளன. தயவுசெய்து பெட்ரோல் டேங்க்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியேற்றுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தது.

பாரத் பெட்ரோலியம் பெயரில் பேனர்...

இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகள் வாட்ஸ்அப்பில் வலம் வருவது வாடிக்கை என்றாலும், இந்த முறை பாரத் பெட்ரோலியம் பெயரில் பேனர் இருந்தது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இப்படி சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்...

``வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம். டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும் என பரவும் செய்தியில் உண்மையில்லை" எனத் தெரிவித்துள்ளது.

``வாகனங்களின் செயல்திறன் தேவைகள், பாதுகாப்பு காரணிகளுடன் சுற்றுச்சூழல் நிலைமைகளை கவனத்தில் கொண்டே ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வாகனங்களை வடிவமைக்கின்றனர். எனவே, குளிர்காலம் அல்லது கோடைக்காலம் எதுவாக இருந்தாலும், உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட முழு வரம்புக்குள் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது" என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த கோடைக்காலத்திலும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/fill-gasoline-in-the-vehicle-dont-be-afraid-in-summer-iocl-description

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக