இந்தியத்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்துக்கு கலைத்துறையில் இந்திய அரசின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை இந்த விருது அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். 50 ஆண்டுகால திரைத்திரையில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாகவும், நடிகர் மோகன்லால், பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் சுபாஷ் கை, பிஸ்வஜித் சாட்டர்ஜி ஆகியோர் கொண்ட 5 பேர் குழு ரஜினிகாந்த்தை இவ்விருதுக்கு பரிந்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட அடுத்தநொடியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில்தான் ரஜினிகாந்த்தின் நீண்டகால நண்பரும், திரைத்துரையில் ரஜினிகாந்த்துக்கு இணையான உச்சநட்சத்திரமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். "உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்" என ட்விட்டர் மூலமாக வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
ஆனால், இந்த வாழ்த்து செய்தி வந்ததிலிருந்து சமூகவலைதளங்களில், "திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும்" என்று கமல்ஹாசன் குறிப்பிட்டிருப்பது உள்குத்தாக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. சிறப்பாக நடிக்காமல், திரையில் தோன்றுவதன் மூலம் மட்டுமே ரஜினி விருதை வென்றுவிட்டார் என்கிற உள்அர்த்தம் கமல்ஹாசன் வாழ்த்தில் இருப்பதாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்தோம். "திரையில் தோன்றுவதன் மூலமே என கமல் சார் குறிப்பிட்டிருப்பது, 'திரைக்குப் பின்னால் இயக்குநர், கதாசிரியர், பாடகர் என மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் இல்லாமல் நடிப்புக்காக மட்டுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்து, இப்போது இவ்விருதும் வென்றிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது' என்கிற அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள் அர்த்தமோ, தவறான அர்த்தமோ எதுவும் இல்லை'' என்றார்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/kamal-hassan-wishes-rajnikath-for-dadasaheb-palke-award
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக