Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

எ.வ.வேலு: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர், கட்சியின் கஜானாவுக்கு கைகொடுப்பவர் எனச் சொல்லப்படும் எ.வ.வேலு, இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் இருந்த எ.வ.வேலு, அவரது மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கட்சியில் கிடுகிடு வளர்ச்சியை எட்டியவர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். மாவட்டத்தில் தன்னைத் தாண்டி யாரையும் வளரவிடாமல், கட்சிக்காரர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ-வாக இருப்பதும் இவருக்கு ப்ளஸ் பாயின்ட் என்றால், அதுவே கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதும் அவருக்கு மைனஸ் பாயின்ட்டாகவும் பார்க்கப்பட்டது.

ஸ்டாலினுடன் எ.வ.வேலு

வளமான பொருளாதாரத்தைக் கொண்டவரான வேலு, சொந்தக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் செலவு செய்வதில் தாராளம்காட்டுபவர் எனச் சொல்லப்படுவதுண்டு. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே வாக்காளர்கள் கணக்கெடுப்பு, பூத் கமிட்டிகள், தெருவாரியாகத் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது எனத் தேர்தல் வெற்றிக்கான அனைத்து வேலைகளையும் பக்காவாக செய்து முடித்து வைத்திருந்தார். திமுகவில் இரண்டாம் மட்டத் தலைவர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் வேலுவுக்குச் சொந்தமான இடங்களில், வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற வருமான வரித் துறை ரெய்டும் சேர்ந்து திருவண்ணாமலை தொகுதியைக் கவனம் ஈர்க்க வைத்தது.

திமுகவின் கோட்டையாக கருதப்படும் திருவண்ணாமலை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 9 முறையும் மற்றும் காங்கிரஸ் கட்சி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை 50,400 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் எ.வ.வேலு. இந்தத் தேர்தலில், வேலுவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வின் வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவர் தணிகைவேலும், அ.ம.மு.க சார்பில் திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரமும் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனர். எதிர்தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லாதது, வேலுவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/e-v-velu-a-short-analysis-on-tamilnadu-assembly-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக