காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரிய தடபுடலாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பழைய முறையிலேயே திறந்த வெளி கால்வாய் மூலம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படித் திறந்தவெளி கால்வாய் வழியாகக் கொண்டு செல்லும் திட்டம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. அதனால், திறந்தவெளி கால்வாய் இல்லாமல் பெரிய கான்கிரீட் குழாய் வழியாக எடுத்துச் சென்றால் தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்கிறார் மூத்த பொறியாளர் முனைவர் அ.வீரப்பன். இதுகுறித்து அவர் விரிவாகப் பேசியபோது...
இணைப்புக் கால்வாய் எதற்காக?
``தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறையுள்ள உள்ள மாநிலம். இருப்பினும் தமிழ்நாட்டில் ஓடும் காவிரியிலும் தாமிரபரணியிலும் இரண்டாண்டு அல்லது நான்காண்டுகளுக்கொருமுறை பெருமழை பெய்து மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இக்கூடுதல் மிகை வெள்ளப் பெருக்கு ஏறக்குறைய 260 டி.எம்.சி அளவுக்கு ஏற்பட்டு, கடலில் கலக்கிறது. காவிரியில் மட்டும் இந்தக் கூடுதல் வெள்ளப் பெருக்கு நான்காண்டுகளுக்கொருமுறை 100 டி.எம்.சி-க்கு மேலிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்வள வல்லுநர்களும் தமிழ்நாட்டின் ஆறுகளில் கிடைக்கும் மிகை வெள்ள நீரை கடலுக்குள் விடாமல், அவற்றைத் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர்.
இப்போதைய பொதுப்பணித்துறையின் திட்ட அறிக்கை தெரிவிப்பது என்ன?
தமிழ்நாட்டிலுள்ள காவிரி - வைகை மற்றும் குண்டாறு நதிகளை - இணைத்து இவற்றில் பெருமழையின்போது கிடைக்கும் கூடுதல் மிகை வெள்ளநீரை தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பலாம் எனத் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தது. இதன்படி 256 கி.மீ நீளமுள்ள இணைப்புக் கால்வாய் வெட்டி இணைக்கலாம் என்றும் அதன் முதற்கட்டமாகக் காவிரியின் கட்டளை நீரொழுங்கியிலிருந்து புதுக்கோட்டைக்குத் தெற்கே உள்ள தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ தொலைவுக்கு ரூ.7,677 கோடி (2019-2020 விலை), ரூ.8,277 கோடி (2020-2021 விலை) திட்டச்செலவில் காவிரியில் இரண்டாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் 8.59 டி.எம்.சி வெள்ள மிகை நீரைத் திருப்பலாம் என விரிவான திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இதில் வெள்ள மிகை நீர் 8.59 டி.எம்.சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் எவை?
இந்த விரிவான திட்ட அறிக்கையில் பல குறைபாடுகள் உள்ளன. திட்டத்தைச் செயற்படுத்தும்போது சில சங்கடங்களும் ஏற்படும். 6,000 கன அடி நீரைத் திறந்த கால்வாயாகக் கொண்டுசெல்ல 20.40 மீட்டர் அகலம் (படுகை மட்டத்தில்) 38.40 மீட்டர் (மேல் மட்டத்தில்) 5 மீட்டர் ஆழமும் இருக்குமாறும் இதில் 1:13000 வாட்டத்தில் 1.18 மீட்டர்/ விநாடி வேகத்துடன் 16 நாள்களில் 8.59 டி.எம்.சி தண்ணீர் செல்லுமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தெற்கு வெள்ளாறு வரையுள்ள கால்வாயின் நீளம் 118.45 கிலோ மீட்டர்.
இவ்வாறு நீண்ட தொலைவுக்குத் திறந்த கால்வாயின் வழியாகச் செல்லும் நீர் கடைசியிலுள்ள பகுதிகளுக்கு நீர் ஆவியாதல் மற்றும் செல்லும் வழியில் முறையற்ற வகையில் திருடப்படுதல் இவற்றால் போய்ச்சேராது. நீரிழப்பு மிகுதி. அரசு திட்ட அறிக்கை சொல்வது போன்று 16 நாள்களில் ஏரிகள் - கண்மாய்கள் - ஊருணிகளை நிரப்பி நிலத்தடி நீரைச் செறிவூட்டவும் இயலாது. நிலத்தடி நீரைச் செறிவூட்ட 60-100 நாள்கள் தேவைப்படும்.
மேலும் கால்வாயை உருவாக்க சில இடங்களில் 30 மீட்டர் முதல் 37.95 மீட்டர் (124.50 அடி) வரை ஆழமாகத் தோண்ட வேண்டியிருக்கிறது. அத்துடன் வேறுசில பகுதிகளில் 10 மீட்டர் உயரம் (32.88 அடி) வரை மண்ணைக் கொட்டி நிரப்பிக் கால்வாய்க் கரையை அமைக்க வேண்டி உள்ளது. இதனன்றி இரண்டு இடங்களில் 10 கி.மீ நீளமுள்ள சுரங்களையும் வெட்ட வேண்டி வருகிறது. இதனால் திட்டச் செலவு கூடுகிறது.
இவற்றைத் தவிர 4,122.54 ஏக்கர் நிலங்களை (பட்டா 3,265.87 ஏக்கர் + புறம்போக்கு 856.67 ஏக்கர்) கையகப்படுத்திட ரூ.1,486.90 கோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த 118.45 கி.மீ நீளமுள்ள கால்வாய், செல்லும் வழியில் இடையில் குறுக்கிடும் சிற்றாறுகள், பாலங்கள், மாநிலச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை இவற்றைக் கடந்த செல்ல 117 குறுக்கு கட்டுமானங்கள் மற்றும் 134 குறுக்கு வடிநிலக் கட்டுமானங்கள் (ரயில்வே பாலங்கள் உட்பட) தேவைப்படுகின்றன. இவற்றின் கட்டுமானச் செலவு மட்டும் ரூ.983.34 கோடியாகும். 10 கி.மீ நீளமுள்ள இரண்டு சுரங்கங்களை ஏற்படுத்த செலவு ரூ.1,585.50 கோடி. திட்டச் செலவு ரூ.7,677 கோடி. திட்டப்பயன் (வரவு) ரூ.208.10 கோடி. திட்ட நிறைவேற்றக்காலம் 8 ஆண்டுகள். இந்த இணைப்புக் கால்வாய் திட்டம் 25,011 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறையை நீக்கும். மேலும் 1,04,303 ஏக்கர் நிலங்களின் பாசனத்தை நிலைப்படுத்தும். மொத்த வருவாயாக (செலவுபோக) ரூ.208.10 கோடி கிடைக்கும்.
திறந்த வெளிக் கால்வாய் முழுமையும் (118.45 கி.மீ) 1:2:4 என்ற கான்கிரீட் கலவையால் 100 மி.மீ கனத்திற்கு மேலுறை செய்யப்படும். ஓடும் தண்ணீரில் இந்த மேலுறை பாதிப்படைய வாய்ப்புகள் மிகுதி. 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துழைக்க இந்தக் கான்கிரீட் மேலுறையை 12 மி.மீ கனத்தில் செய்ய வேண்டும். எனவே, திட்டச் செலவைக் குறைக்கும் வழிவகைகளைக் கண்டாக வேண்டும்.
மாற்றுத் திட்டத்தின் நன்மையான கூறுகள்
இந்த வெள்ள மிகை நீரை (8.59 டி.எம்.சி) திறந்த கால்வாய்க்குப் பதிலாக மூடிய பெரிய உறுதிபெறு கான்கிரீட் குழாய்கள் மூலமாக, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட பெருஞ்சாலைகளின் ஒரு ஓரமாக எடுத்துச் செல்லலாம். இதிலும் தேவைப்படுமிடங்களில் இறைவை நிலையங்கள் அமைத்து தண்ணீரை ஏற்றவும் செய்யலாம். அதன்படி வழியிலுள்ள ஏரிகள், கண்மாய்கள் மற்றும் ஊருணிகளை நிரப்ப வேண்டும்.
Also Read: `இவர்தான் காவிரி காப்பாளரா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் டெல்டா விவசாயிகள்... ஏன்?
இந்த மாற்று வழி முறையின் திட்டப் பணியில் தனியார் நிலங்களைக் கையப்படுத்த வேண்டியிருக்காது. இடையில் வரும் குறுக்குக் கட்டுமானங்கள் பெருமளவில் குறையும். மிக ஆழமாகத் தோண்டவும் மிக உயரமாகக் கரைகளை அமைக்கவும் தேவையில்லை. சாலை மட்டத்திலிருந்து 2 மீட்டர் - 4 மீட்டர் வரை தோண்டிக் குழாய்களைப் பதித்து எளிதாகக் கொண்டு செல்லலாம். இறைவை இயந்திரங்களின் மூலமாக நீரை இறைத்தனுப்புவதால் - நீரின் வேகம் 1.18 மீ/விநாடிக்குப் பதிலாக 2 முதல் 3 மீ / விநாடிக்கு இருக்குமாறு எடுத்துச் செல்லலாம்.
இதனால் குறையும் திட்டச் செலவுகள்
நிலம் கையகப்படுத்தல் - ரூ.1486.90 கோடி
குறுக்கு நீர்க் கட்டுமானங்கள் - ரூ.983.34 கோடி
10 கி.மீ தொலைவுள்ள 2 சுரங்கங்கள் - ரூ.1,585.50 கோடி
மொத்தமாக ரூ.4,055.74 கோடியை எளிதாகக் குறைக்கலாம்.
மூடிய உறுதிபெறு கான்கிரீட் குழாய்களின் வழியாக நீரைக் கொண்டு செல்வதால் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நீர் நிலைகட்கு (கடைசிப் பகுதியில் உள்ளவற்றிருக்கும்) தண்ணீர் கொண்டு செல்வது உறுதிப்படுத்தப்படும். ஆவியாதல் மற்றும் இடைவெளித் தண்ணீர் திருட்டு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, நீர் வீணாவதும் தடுக்கப்படும். எனவே, கூடுதல் செலவு பிடிக்கும் (ரூ.8,277 கோடி) அரசுத் திட்டத்தைக் கைவிட்டு 2, 3 ஆண்டுகளில் நிறைவேற்றத்தக்க மாற்று வழித் திட்டத்தைச் (ரூ.2,500 கோடிக்குள்) செயற்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் (திட்ட உருவாக்கம்) விரிவான திட்ட அறிக்கையில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்துமாறு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாற்றுத் திட்டம் சங்கடங்கள் இல்லாததும் செலவு மிகக் குறைவானதும் ஆகும். எனவே, இப்போது இருக்கும் தமிழக முதல்வராகட்டும், அடுத்து தேர்தலில் வென்று வருகிற முதல்வராகட்டும்; மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில் காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதன் வாயிலாக பொது மக்களின் வரிப்பணம் ரூ.5,000 கோடியை மிச்சப்படுத்தலாம்” என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/sr-engineer-shares-how-govt-can-save-5000-cr-rupees-in-cauvery-gundar-linking-project
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக