Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

பட்டாசு உற்பத்தியின் முதுகெலும்பும் இவர்களே; சுரண்டப்படுவதும் இவர்களே! - பெண் தொழிலாளர்களின் துயரம்

பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை பாலின விகித அடிப்படையில் கணக்கிட்டால் 70% தொழிலாளர்கள் பெண்களே. ஆனால், அவர்கள் பெறும் ஊதியமோ ஆண்கள் பெறுவதில் பாதிதான்.

இந்திய மாநிலங்களில், பணிபுரியும் பெண்களின் சதவிகிதம் அதிகபட்சமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு (30%) உள்ளது. இது இந்திய சராசரியைடவிட (19%) அதிகம். இதில் 75% பெண் பணியாளர்கள் பணிபுரிவது பட்டாசு தொழிற்சாலை, கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகளில்தான். ஆனால், இங்கு பணிபுரியும் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களோ, சமூக பாதுகாப்போ, தொழிலார்கள் உரிமை என்பதோ துளியும் இல்லை.

Cracker Manufacturing

இதற்கு சான்றாக, அடிக்கடி வெடிவிபத்து ஏற்படும் பட்டாசு தொழிற்சாலைகளை நாம் சொல்லலாம். பிப்ரவரி 13-ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு அருகில் உள்ள அச்சங்குளத்தில் அமைந்திருந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் வரை உயிரிழந்தனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தாம்.

இந்தத் தீ விபத்திலிருந்து தப்பித்தவரும், விபத்து நடந்த தொழிற்சாலையில் பணிபுரிவருமான ரத்தினம் கூறுகையில், ``நாங்கள் வெடி சத்தம் கேட்டவுடன் வேகமாக ஓட ஆரம்பித்தோம். ஆனாலும் என்னுடன் பணிபுரிந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைத்தேன். ஆனால், இதுபோன்ற வெடிவிபத்துகளை என் அருகிலேயே பார்ப்பது இது முதன்முறை அல்ல, கடைசி முறையாகவும் இது இருக்காது'' என்றார்.

பட்டாசு தொழிற்சாலை முதலாளிகள், அரசியல்வாதிகள் என யாருமே பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பொறுப்பேற்கவில்லை. மத்திய தொழிலாளர் அமைச்சகம் 2014-2015-ம் ஆண்டு வெளியிட்டுள்ள `தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் சமூக பொருளாதார நிலை' என்னும் அறிக்கையில், ``பெண்கள்தாம் தமிழ்நாட்டின் சிவகாசி மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையின் முதுகெலும்பாக உள்ளனர். அங்கிருக்கும் பட்டாசு ஆலைகளில் 95% பணிகள் மனிதர்களால்தாம் செய்யப்படுகின்றன. அவற்றில், வெடிமருந்தை நேரடியாகக் கையாள்வது, அதை நிரப்புவது, ஒன்று சேர்ப்பது, லேபிள் இடுவது மற்றும் பாக்கெட் செய்வது வரையிலான 77% வேலைகளை பெண்கள்தாம் செய்கிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெடி விபத்து சம்பவம் நடந்ததால், பிரசார உரைகளில் இது தவறாமல் இடம்பெற்றது.

Diwali Celebrations

சிவகாசி மாவட்டத்தின் அபாயகரமான பட்டாசு தொழில்துறையின் நீண்டகாலப் பிரச்னைகளை ஆளும் அ.தி.மு.க அரசின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசாங்கம் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் குறைந்தது நான்கு வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட அரசின் அறிக்கைப்படி கடந்த பத்தாண்டுகளில் 204 வெடிவிபத்து சம்பவங்களின் விளைவாக 298 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 236 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியோ தனது தேர்தல் உரைகளில், தனது கட்சியான அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அந்தத் துறையை முறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள், கல்வி முறை மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள் மூலமாக பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் பெண் தொழிலாளர்களின் சராசரி (30%), இந்தியாவின் சராசரியைவிட (19%) அதிக பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை உறுதி செய்துள்ளதாக, சமீபத்திய தரவுகளான 2018-19 கால தொழிலாளர் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கிராமப்புற பெண்கள் (35%), நகர்ப்புறத்தைவிட (24%) அதிகமாகத் தொழிலாளர்களாக ஈடுபட்டுள்ளனர். இந்த புள்ளி விவரங்களின்படியும், தேசிய சராசரியைவிட நம் மாநில கிராமப்புறம் (20%) மற்றும் நகர்புற (16%) சராசரி அதிகமாகவே உள்ளது.

இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் நூற்பாலை, எலெக்ட்ரானிக்ஸ், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் சதவிகிதமும் அதிகம் (சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி 75% - 80% பெண்கள்). ஆனால், ஆண்களைவிட குறைந்த சம்பளம், அதிக வேலைப்பளு, தொழிலார்களின் அடிப்படை உரிமை பறிப்பு என இவர்களின் துயரமும் அதிகம்.

பட்டாசு

எடுத்துக்காட்டாக, சென்னையைச் சுற்றியுள்ள தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள், குறைந்த சம்பளம் மற்றும் எளிதில் பணியமர்த்தல் போன்றவற்றை அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் பெண்களைப் பயன்படுத்துகின்றன. மேற்கு தமிழ்நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகளும் இதுபோன்ற வரலாற்றையே கொண்டுள்ளன.

பொதுவாகப் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் இதுபோன்ற சுரண்டல்கள், அவர்களுக்கு முறையான சம்பளம், பொருளாதார, சமூக மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலே நிகழ்கின்றன.

சிவகாசியில் ஆண்களின் ஊதியத்தில் பாதி மட்டுமே பெறும் பெண்கள்!

சிவகாசியில் விவசாயம்தான் ஆரம்ப காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் வேலையிழந்த மக்கள் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியத் தொடங்கியுள்ளனர். முதன்முதலில் இத்தகைய தொழிற்சாலையைத் தொடங்கியவர்கள் பி.அய்யநாடார், அவரின் உறவினர் சண்முகநாடார் ஆவார். 1920-களில் கல்கத்தா சென்று தீப்பெட்டி தொழிற்சாலைகளை பற்றிக் கற்றுக்கொண்டு சிவகாசியில் தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர் இவர்கள். அதன்பின் விரைவில் அச்சிடுதல், லேபிள் செய்வது போன்ற தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. விரைவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆரம்பித்தனர்.

Fire Cracker

இன்று சிவகாசியில் 1,070 வெடிமருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் 90% வெடிபொருள் தேவை இந்தத் தொழிற்சாலைகளின் மூலமே தீர்க்கப்படுகிறது. இதில் நேரடியாக 3 லட்சம் பேரும், இதனுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளின் மூலம் 5 லட்சம் பேரும் பணிபுரிகின்றனர்.

குழந்தை தொழிலாளர்கள் சட்டம் கடுமையாக்கப்பட்ட பின் இந்தத் தொழிற்சாலைகள் அதிகமாக பெண்களை பணியில் அமர்த்தின. 2014 - 2015 தொழிலாளர்கள் அறிக்கையின் படி இந்தியாவின் பணிபுரியும் பெண்கள் விகிதத்தில் 74 சதவிகிதத்தை, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களே நிரப்புகின்றனர். இதில் தமிழ்நாடு மட்டுமே 75 சதவிகிதம் பங்களிக்கிறது.

ஆனால், இங்கு ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாள் ஊதியமாக அதிகபட்சம் ரூ. 300 வழங்கப்படுகிறது. அரிதினும் அரிதாக என்றாவது ரூபாய் 500 வரை தரப்படும். மொத்த குடும்பமும் பணிபுரிந்தாலும் ஆண்களுக்கு மட்டும் தினக்கூலியாக 600 முதல் 800 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

சிவகாசியின் தொழிற்சாலைகளில் பணிபுரிவது அவ்வளவு எளிதல்ல, அத்தனை வேலைகளும் ஆபத்து நிறைந்தவை. பல்வேறு சட்டங்களை மீறியே இங்கு வேலை வாங்கப்படுகிறது. இங்கிருக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு உரிமம் தருவது மாவட்ட வருவாய் அலுவலகம்தான். மேலும், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பு, ஆபத்தான பொருள்களைக் கையாள்வது, வாயு மற்றும் பெட்ரோலை மாற்றுவது, குறிப்பிட்ட அளவை நிர்ணயிப்பது போன்ற செயல்களை முறைப்படுத்துகிறது.

பட்டாசு

தொழிற்சாலைகள் உரிமம் பெறுவதற்கு பல்வேறான படிநிலைகள் உள்ளன. என்ன வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் தன்மை, பட்டாசுகளின் தன்மை, குறிப்பாக இத்தனை அறைகள் இருக்க வேண்டும், அதில் இவ்வளவு நபர்கள்தாம் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை. பட்டாசின் தேவை அதிகமாக இருக்கும் நாள்களில் 4 பேர் மட்டுமே இருக்கக்கூடிய அறைகளில் 8 பேர் வரை பணிபுரிகின்றனர்.

மேலும் சல்ஃபர் பயன்படுத்தும் வெடி மருந்துகளை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு நிழலில் அல்லது காலை 8.30 மணிக்குள் உலர்த்த வேண்டும். ஆனால், இவை வெயிலில்தான் காயவைக்கப் படுகின்றன.

மேலும் உற்பத்தி அதிகரிக்கும் நாள்களில் உரிமம் இல்லாத சிறிய தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பணிகள் குத்தகைக்கு விடப்படுகின்றன. தற்போது நடந்த வெடி விபத்தின்போது ஐந்து சிறிய தொழிற்சாலைகள் இவ்வாறு சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கமத்தின் (டிஃப்மா) பொதுச் செயலாளர் டி.கண்ணன், சில பகுதிகளில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதைக் கூறுகிறார். ``விபத்துகளுக்கு மிகப் பெரிய காரணம் நிச்சயமாக உற்பத்தியாளர்களால் விடப்படும் நேர்மையற்ற குத்தகை மற்றும் சப்ளிங்தான். ஒரு சங்கமாக, இதுபோன்ற உற்பத்தியாளர்களை எச்சரிப்பதே எங்களால் செய்ய முடிந்தது. மேலும் சீரமைக்க அரசாங்கம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறார். பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக விருதுநகரில் கடந்த இரண்டு மாதங்களில் 90 பட்டாசு பிரிவுகளின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஃப்மா உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தி

சர்வதேச சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் மேலாண்மை இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, மாங்கனீசை அதிக அளவில் பயன்படுத்தும் சூழலில் இருப்பதால் தொழிலாளர்களுக்கு நாள்பட்ட தலைவலி, தலைசுற்றல் மற்றும் புண்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு, மாங்கனீசு, குரோமியம், ஈயம் போன்றவற்றின் வாயுக்களை நீண்ட காலமாக சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய் உண்டாகக்கூடிய வாய்ப்பு அதிகமாகவும் உள்ளது என்கிறது.

சிவகாசிக்கு அருகிலுள்ள கிலியம்பட்டியைச் சேர்ந்த 28 வயதான தொழிற்சாலையில் பணிபுரியும் ஜே.கனகலட்சுமி கூறுகையில், ``நான் ஒரு நாளைக்கு ரூபாய் 500-க்கு வேலை செய்கிறேன். எனக்கு வயிற்றில் வலி மற்றும் ஒழுங்கற்ற உடல்நிலை இருக்கிறது. இது எனது பணியிடத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ரசாயனங்களுடன் பணியாற்றியதால்தான்'' என்று கூறினார்.

``40 வயதுகளில் இருக்கும் பல பெண்கள் இதன் காரணமாக கருப்பையை அகற்ற வேண்டியிருக்கிறது. எங்கள் தொழிற்சாலையில் மருத்துவப் பரிசோதனைகளின்போது பழங்கள் மற்றும் வெல்லம் சாப்பிடுமாறு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறோம். அதையெல்லாம் வாங்க எங்களால் முடியாது. தொழிற்சாலைகள்தாம் வழங்க வேண்டும்'' எனக் கூறினார்.

இதுபோல பலர் பல்வேறு சூழ்நிலையால், குடும்ப பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற காரணிகளால் இப்படியான தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் அங்கு நிகழ்ந்த வெடி விபத்துகளில் சிக்கியவர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள்.

Worker

இத்தனை பிரச்னைகள் இருந்தும் இவர்களால் இந்த தொழிற்சாலைகளைத் தவிர்க்க முடியவில்லை. ``ஏனெனில், நிலங்கள் அற்ற விவசாயக் கூலிகளான இவர்கள் தங்கள் வேலைகளை இழந்தபோது இங்கு வந்தனர். பின் இதிலேயே பழகி வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்'' என்கிறார் அங்கு பணிபுரிந்து தன் குடும்பத்தில் இருவரை இழந்த முனிராஜ்.

``இவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, பணிபுரியும் இடங்களில் எந்த வித பாதுகாப்பும் இல்லை. ஆனாலும் இரண்டு முதல் மூன்று தலைமுறைகளாக இங்கு பணி புரிகின்றனர்'' என்கிறார் முனிராஜ்.

பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான ஒழுங்கமைக்கப்படாத பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு எனத் தமிழக அரசு ஒரு தனி நலவாரியத்தை 2020 டிசம்பரில் அமைத்தது. ஆரம்பகட்டமாக, மாநிலத்தில் 12% இருக்கும் 62,661 தொழிலாளர்கள் ஏற்கெனவே `தொழிலாளர் நல வாரியத்தில் (manual workers welfare)' உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான நன்மைகளை உறுதி செய்தது. மேலும், பணியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இந்த அமைப்பில் இலவசமாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

டிஃப்மாவின் பொதுச் செயலாளர் கண்ணன் கூறுகையில், ``மத்திய அரசோ மாநில அரசோ இவற்றில் தலையிட்டு இவர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஏனெனில், இங்கு பணிபுரியும் 75% பெண்கள் மூலமாக மட்டுமே ரூபாய் 2,500 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கிறது'' என்கிறார்.

இதுபோன்று தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன, பெண்களின் உழைப்பு சுரண்டலை சுட்டிக் காட்டுவதற்கு. அவற்றில் வெடி மருந்து தொழிற்சாலைக்கு அடுத்த நிலையில் இருப்பவை உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மேற்கு தமிழ்நாட்டில் இயங்கும் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளும்.

உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இடைத்தரகர் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் பெண்கள். இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 75% பெண்கள் மூன்றாவது இடைத்தரகர்கள் மூலமாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.

பட்டாசு ஆலை விபத்து

இதன் மூலம் பெண்களில் உழைப்பு சுரண்டப்பட்டு, அவர்களின் வருமானம் குறைக்கப்படுகிறது; தொழிற்சாலைகள் மிகப் பெரும் லாபம் ஈட்டுகின்றன.

அடுத்து மேற்கு தமிழ்நாட்டை பார்க்கையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகமான ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவை பல்வேறு தொழிலாளர் வரலாற்றைக் கொண்டுள்ளன. குறைந்த ஊதியம், அதிக பணிச்சுமை, உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல், நடவடிக்கை தடை மற்றும் யூனியன் அமைப்பதற்கான தடை போன்றவைதான் அந்த வரலாறு.

ஒரு காலத்தில் இந்தத் தொழிற்சாலைகள் சுமங்கலி திட்டத்துக்காக பரவலாக அறியப்பட்டன. அங்கு திருமணமாகாத இளம் பெண்கள், திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மொத்தமாகக் கிடைக்கும் தொகைக்காக வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். திருமண செலவினங்களுக்காக 30,000 முதல் ரூ .1 லட்சம் வரை அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு ஊதியம் அல்லது வருங்கால வைப்பு நிதி அல்லது ஊழியர்களின் மாநில காப்பீடு போன்ற வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இந்த நடைமுறைகள், அடுத்து கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்களால் மாற்றப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்கள் இவர்களின் சுரண்டலின் தன்மையை மட்டும் மாற்றிவிட்டன.

`திறன் இந்தியா' முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் `பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா' மற்றும் `தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா' போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்துக்குள்ளும் ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற பிற இடங்களிலிருந்தும் பல இளம் பெண்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி

``இதுபோன்ற (சுமங்கலி) நடைமுறைகள் எல்லாம் 1980-90-களில் இருந்தன. ஆனால், பின்பு அவையெல்லாம் மாற்றப்பட்டுவிட்டன. பெண்களை பணியமர்த்துவதில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தன. 16 முதல் 18 வரையிலான பெண்களை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே பணியில் வைத்திருக்கவேண்டும் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன" என்கிறார் தமிழ்நாடு ஜவுளி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலர் எஸ்.திவ்யா.

ஜவுளித் துறையில் உள்ள தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காகச் செயல்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகளின் தமிழ்நாடு கூட்டணியில் பணியாற்றும் களப்பணியாளரான சீனிவாசன், ``இளம்பெண்கள் பலரும் பயிற்சி பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டு எந்தவித கூடுதல் சம்பளமும் இன்றி, அதிக நேரத்திற்கு வேலைசெய்ய பணிக்கப்படுகின்றனர். பல இடங்களில் இவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் வார்டன்களே பெண்களுடைய சம்பளம் போடப்படும் வங்கிக் கணக்குகளின் ஏ.டி.எம் கார்டுகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்" என்கிறார்.

IndiaSpend

Source:

- Dharani Thangavelu / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.

தமிழில்: கௌசல்யா


source https://www.vikatan.com/social-affairs/women/the-plight-of-women-workers-in-the-cracker-manufacturing-industries

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக