Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

தபால் வாக்குகள் ; முதலில் எண்ண வேண்டும் என திமுக; முதல்நாள் கூடாது என அதிமுக - காரணம் என்ன?

``தபால் வாக்கு முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும்'' என தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள மனுவில்,``தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்க, வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்த பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், கையேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக அறிகிறோம்'' என்பதைக் கோடிட்டுக் காட்டி, மேலும், ``500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை அமைக்க வேண்டும்'' எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

இதேபோல, கடந்த வாரம் தபால் வாக்குகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சில மாவட்டங்களில் மே 1-ம் தேதியன்றே தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தபால் வாக்கு தொடர்பாக அ.தி.மு.க தலைமைக்குக் கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1-ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

தபால் வாக்குகள் குறித்து இரண்டு கட்சிகளுமே அக்கறைப் படுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. கடந்தகால தேர்தல் வரலாறுகள் தான் இரண்டு திராவிடக் கட்சிகளையும் இந்தளவுக்கு அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

குறிப்பாக, 2006 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட சின்னச்சாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் சவுந்தரராஜனை வெறும் 14 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சின்னச்சாமி பெற்ற வாக்குகள் 100,283. சவுந்தரராஜன் பெற்ற வாக்குகள் 100,269.

நன்மாறன்

அதேபோல, மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நன்மாறன், 51 ஓட்டுகள் வித்தியாசத்திலும், தொட்டியம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், பொங்கலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் மணி, அணைக்கட்டு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டுரங்கன் ஆகியோர் வெறும், 53 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிவாகை சூடினர்.

சிங்காநல்லூர் தொகுதியில் 14 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த சி.பி.எம் வேட்பாளர் சவுந்தரராஜன் தபால் வாக்குகள் கடைசியாக எண்ணப்பட்டதாகவும் சரியாக பதிவு செய்யப்படவில்லை எனவும் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, மதுரை கிழக்குத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் நன்மாறனிடம் 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த ம.தி.மு.கவின் பூமிநாதன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடிகள் நிகழ்ந்ததாக வழக்குத் தொடர்ந்தார். ஆனால், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் குளறுபடிகள் எதுவும் நடைபெறவில்லை, கடைசியாகத்தான் எண்ணப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேபோல கடந்த தேர்தலில், காட்டுமன்னார்கோவிலில் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறன், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை 87 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என திருமாவளவன் வழக்குத் தொடர்ந்தார். அது இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதேபோல, ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வெற்றிபெற்றார். இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். அதில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 19,20,21 ஆம் சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. இதன்படி எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அப்பாவு

இப்படி தபால் வாக்குகளையொட்டி கடந்த காலங்களில் பல சர்ச்சைகள் நிகழ்ந்திருக்கிறது. இந்தநிலையில்தான், தற்போது, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதி உள்ளிட்ட சில தொகுதிகளில் தபால் வாக்குகளை வைத்து பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. அதாவது, தி.மு.கவுக்கு விழுந்த வாக்குகள் செல்லாது எனவும் அ.தி.மு.கவுக்கு விழுந்த வாக்குகள் செல்லும் எனவும் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. உதாரணமாக, ராதாபுரம் தொகுதியில் அப்பாவுக்கு விழுந்த தபால் வாக்குகளை எண்ணவே இல்லை. ஆனால், அ.தி.மு.கவுக்கு விழுந்த வாக்குகளை மட்டும் எண்ணிவிட்டு, அப்பாவுக்கு விழுந்த வாக்குகளை செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். வாக்கு இயந்திரங்களில் எண்ணப்பட்ட வாக்குகளில், அப்பாவுதான் முன்னிலையில் இருந்தார். ஆனால், தபால் வாக்குகளில் தங்களுக்கு ஏற்றவாறு அ.தி.மு.கவினர் அட்ஜஸ்ட் செய்து வெற்றி பெற்றார்கள். அதனால்தான் அவர் வழக்குத் தொடர்ந்தார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றம் 240 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இனிமேல் அதைச் சொல்லி எந்த பயனும் இல்லையே. அதனால்தான் இந்தமுறை முன்கூட்டியே கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டத்தில் தபால் வாக்குகளை கடைசியாகத்தான் எண்ணுவோம் என கவுண்டிங் ஏஜென்ட்களிடம் அதிகாரிகள் சொன்னதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால்தான் தமிழகம் முழுவதும், எது சரியான வழிமுறை என்பதை வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தெரிவித்து விடுங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறோம். போஸ்டல் வாக்குகளை முதலிலேயே எண்ணிவிட்டால், மறு எண்ணிக்கை செய்தாலும் குளறுபடி ஏதும் செய்யமுடியாது''என்றவர் தொடர்ந்து ``ஜெயக்குமார் சொல்வது போல் இதுவரை முந்தின நாள் எல்லாம் வாக்கு எண்ணப்பட்டதே இல்லை. கண்டெய்னர்கள் நின்றது குறித்து எதிர்க்கட்சிகள் நியாயமாக முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பவே அப்போது ஜெயக்குமார் அப்படியொரு மனுவைக் கொடுத்தார்'' என்கிறார்.

Also Read: முதியோருக்கு தபால் வாக்கு : எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்... என்ன காரணம்?

தொடர்ந்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,

``அனைத்துத் தேர்தல்களிலும் வாக்கு எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளைத்தான் எண்ணுவார்கள். அதில் யார் எவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை முதலில் அறிவித்துவிடுவார்கள். அதுதான் நடைமுறை. மக்கள் மத்தியில் ஏதாவதொரு குழப்பத்தை ஏற்படுத்தவே தி.மு.க தற்போது இப்படியொரு மனுவை அளித்திருக்கிறது. ஆனால், முந்தின நாளே தபால் வாக்குகளை எண்ணப் போகிறார்கள் என்று வந்த வதந்தி குறித்துத்தான் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்திருக்கிறார். கடந்த தேர்தலிலும் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதே உண்மை. போனமுறையும் தபால் வாக்குகளை முதலிலேயே எண்ணி விட்டார்கள். ஆனால் சில தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு சொற்ப வித்தியாசத்தில் இருந்ததால், மீண்டும் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தார்கள். அதைத்தான் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தார்கள். தவிர, தற்போது ஆர்.எஸ்.பாரதி கூறுவது போல் எந்த விஷயமும் நடைபெறவில்லை'' என்கிறார் அவர்.

கோவை செல்வராஜ்

முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

``வாக்கு எண்ணிக்கைக்கு முந்தின நாள் எல்லாம் தபால் வாக்குகளை எண்ணும் வழிமுறையே இல்லை. வாக்கு எண்ணும் தேதியில்தான் அனைத்தையும் ஓபன் செய்வார்கள். அதேபோல, முதலில் தபால் வாக்குகளையும், அடுத்ததாக மற்றவற்றை எண்ண வேண்டும் என்கிற விதிமுறைகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. தபால் வாக்குகளை முதலில் எண்ணுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மட்டும் சூழலுக்கேற்ற முடிவை எடுப்பார்கள். மற்றபடி இதில் மாற்றத்துக்கு வேலை இல்லை'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/postal-votes-counting-issue-raised-by-dmk-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக