Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

பழங்குடி மாணவர்களின் கொரோனா கால உணவு உதவித் தொகையை சுருட்டியதாகப் புகார் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலை தனது கோர முகத்தை தற்போதுதான் காட்டத்துவங்கியுள்ளது. இரண்டாம் அலையில் மக்களை அல்லாடச் செய்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் முடக்கக் கட்டுப்பாடுகள் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

பள்ளி மாணவர்கள்

அதில் மிக முக்கிய ஒன்றாக கல்வித்துறை பார்க்கப்படுகிறது. கல்வியைப் பொறுத்தவரை ஒரு கல்வியாண்டை முழுவதுமாக விழுங்கிய கொரோனா, அடுத்த கல்வியாண்டையும் கபளீகரம் செய்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வியாளர்களும் வேதனையில் உள்ளனர்.

இப்படி ஒரு சூழலில், பட்டியலின பள்ளி மாணவ மாணவிகளின் சாப்பாட்டுக்காக அரசு வழங்கிய தொகையை, ஈவு இரக்கமற்ற சில தலைமை ஆசிரியர்கள் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜி.டி.ஆர் எனப்படும் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குபவை. ஆரம்பக் கல்வியே இன்றளவும் எட்டாக்கனியாக உள்ள விளிம்பு நிலை மாணவ மாணவிகளுக்கு, கல்வி கிடைக்க அரசால் உருவாக்கப்பட்ட மிக உன்னதமான பள்ளிகள்தாம் இவை. மூன்று வேளை உணவு, உறைவிடம்,கல்வி என சகலமும் இவர்களுக்கு கிடைக்க அரசு செலவிடுகிறது.

ஆனால், அரசு ஒதுக்கும் தொகைகளில் சரிபாதிகூட முறையாக மாணவர்களுக்குச் சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. இதற்கு ஒரு உதாரணமாகவிட்டது நீலகிரி அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் செயல்.

தலைமை ஆசிரியர்கள் பாக்கியசேனன்&சேகர்

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 22 அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1,074 மாணவர்கள் 1,016 மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் உணவுக்கான செலவுத் தொகையாக தலா ரூ.6,300 மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 என மொத்தம் 7,300 ரூபாயை ஒதுக்கீடு செய்தது அரசு.

இந்தத் தொகையை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கிக் கணக்கிலோ பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கிக்கணக்கிலோ செலுத்தி, அதற்கான ஒப்புகைச் சீட்டில் கையெழுத்தைப் பெற்று அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஆனால் நீலகிரி மாவட்டத்தில், குற்றம் சாட்டப்படும் இரண்டு தலைமை ஆசிரியர்கள், தங்களின் உறவினர், விடுதி சமையலர், சமையலரின் மனைவி என பலரின் வங்கிக்கணக்கில் பணத்தைப் போட்டு கையாடல் செயந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடந்து வருகிறது. மற்ற பள்ளிகளிலும் முறைகேடு நடைந்திருக்கிறதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறியதாவது, ``பொதுவா பல ஜி.டி.ஆர் பள்ளி ஹாஸ்டல் பசங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியுதவி எந்த கூச்சமும் இல்லாம பள்ளி நிர்வாகத்தால கொள்ளயடிக்கப்பட்டு தான் இருக்கு.

சம்பந்தப்பட்ட இந்த ரெண்டு வாத்தியார்களும் அப்படித்தான். தேவாலா பள்ளி‌ ஹெச்.எம்.பாக்கியசேனன, கரிக்கையூர் பள்ளியில் இருந்தப்ப இவர் மேல ஏகப்பட்ட பாலியல் புகார் இருந்துச்சு. இப்போ ரெண்டு ஸ்கூலுக்கு இவர் இன்சார்ஜ். 69 பசங்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகைய வெறும் 24 பேருக்குத்தான் கொடுத்திருக்கார்.

பொன்னானி ஸ்கூல் ஹெச்.எம் சேகருக்கு ரெண்டு பங்களா, கார்னு நல்ல வசதியான வாழ்க்கை. அவர் பள்ளியில 86 பசங்க இருகாங்க. ஆனால் வெறும் 26 பேருக்கு மட்டும் தான் உதவித் தொகை போய் சேந்திருக்கு. இப்ப ரெண்டு பேருமே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காங்க. \

இப்பவும், `எங்களுக்கு தலைமைச் செயலகம் வரை ஆள் இருக்கு. யாரும் எங்கள ஒன்னும் பண்ண முடியாது. அடி மட்டத்துல இருந்து மேல வரைக்கும் எல்லாருக்கும் கொடுக்க வேண்டியத கொடுத்துட்டு தான் இருக்கோம்'னு மிரட்டுறாங்க. இன்னும் வேற எந்தெந்த ஸ்கூல்ல இதேமாதிரி நடந்திருக்கோ தெரியல. இது பழங்குடியினர் நலத்துறையில் இருக்கும் ஆட்களும் துணை போறாங்க" என ஆதங்கப்பட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

இந்த முறைகோடு குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட பழுங்குடியின மேம்பாட்டு மன்ற உறுப்பினர் ஷோபா மாதன், ``எங்க மக்களுக்கு அரசாங்கம் எதற்கெல்லாம் எவ்வளவு உதவித் தொகை கொடுக்குறாங்கன்னு விழுப்புணர்வு குறைவு. எங்களோட அறியாமைய சாதகமாக்கிக்கிட்ட அதிகாரிங்க, எங்க மாணவர்களுக்கு சேர வேண்டியத் தொகையை கிடைக்க விடாம காலங்காலமா இதத்தான் செய்றாங்க.

லட்சத்துக்கும் குறைவில்லாம சம்பளம் வாங்குற ஹெட்மாஸ்டர்கள், பழங்குடி மாணவர்களோட சாப்பாட்டுக் காசைக்கூட புடுங்குறாங்க. பாதி மாணவர்களுக்கு, அரசாங்கம் இப்படி உதவித் தொகை கொடுக்கிறதே தெரியாது. இது எங்களுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. இதுக்கு தனிய விசாரணை கமிஷன் போட்டு நடவடிக்கை எடுக்கணும்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மக்கள் சட்டமைய நிறுவனர் வழக்கறிஞர் விஜயன் பேசுகையில், ` இது தலைமை ஆசிரியர்கள் மட்டும் செய்த முறைகேடாக தோன்றவில்லை. அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பழங்குடியின மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய உரிமையை கிடைக்காவிடாமல் தடுத்த இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகை சென்றுசேராத மாணவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். முறைகேடு செய்த இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்தாவது மாணவர்களுக்கு தொகையைக் கொடுக்க வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

Also Read: நீலகிரி: `ஒரு வருஷமா ஒரு பொழப்பும் இல்லை..!’ - சுற்றுலாப்பயணிகள் வரத் தடையால் கலங்கும் வணிகர்கள்

.நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியான பரிமளாவிடம் இந்த விவகாரம் குறித்து பேசினோம்,`` விடுதியில் தங்கிப் பயிலும் 1,532 மாணவ மாணவிகளுக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 8 ஆயிரத்து 600 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. இதில் எந்த முறைகேடும் நடக்கலைங்க. சில பசங்களுக்கு அக்கவுண்ட் இல்ல. அதனால வேற அக்கவுண்ட்ல பணத்த போட்டிருக்காங்க. இப்படி செய்யக் கூடாதுன்னு ரூல் இருக்கு. மூணு லட்சம் ரூபாய் வரை குளறுபடியா இருக்கு. 90 சதவிகித பணத்த மீட்டுட்டோம். அந்தந்த தாசில்தார் தலைமயில விசாரணை நடத்திக்கிட்டு இருக்கோம். ஹெட் மாஸ்டர்ஸை தொடர்பு கொள்ள முடியல" என்றார் சிம்பிளாக.

சஸ்பெண்டில் இருக்கும் தலைமை ஆசிரியர் சேகர் விதியை மீறி பள்ளிக்குச் சென்றதோடு மட்டுமல்லாமல்,மாணவ மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து, ` பணத்தை பெற்றுக் கொண்டோம்' என வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்துப்போட்டு கொடுக்குமாறு எழுதி வாங்கியிருப்பதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.

`` பாதி மாணவர்களுக்கு பணத்தை கொடுக்கல. ரெண்டு நாள் பள்ளிக்கூடத்துல முகாம் போட்டு பெற்றோர்கள வரவச்சு மிரட்டி கையெழுத்தும், கைநாட்டும் வாங்கிக்கிட்டார்" என சக ஆசிரியர்கள் புலம்புவதையும் கேட்க முடிகிறது.

வேலியே பயிரை மேயும் கதையாக ஆசிரயர்களே மாணவர்களின் உதவித் தொகையை கொள்ளையடித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.



source https://www.vikatan.com/government-and-politics/education/nilgiri-tribal-school-fund-alligation-2-head-masters-suspended

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக