Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

ராஜ்நாத் சிங் வருகை: பாஜக சின்னம் கொண்ட அடையாள அட்டையில் ஊட்டி டி.எஸ்.பி கையெழுத்தால் சர்ச்சை!

பா.ஜ.க-வும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதும் ஊட்டி தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஊட்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு களப்பணியாற்றி வருகின்றனர்.

bjp

பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகியுமான ராஜ்நாத்சிங் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்திருந்தார். இந்த பரப்புரை நிகழ்வில் பங்கேற்கும் செய்தியாளர்களின் விவரம் அனைத்தும் உடனடியாக வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நேற்று முன் தினம் இரவு அவசரகதியில் பெற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கான அடையாள அட்டையை ஊட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

செய்தியாளர்கள் நேற்று காலை அந்த அடையாள அட்டையைப் பெற்று பார்க்கும்போது, அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க-வின் சின்னமான தாமரையும் பதிக்கப்பட்டிருந்தது. அந்த அட்டையில் ஊட்டி டவுன் டி.எஸ்.பி-யின் முத்திரையும், கையொப்பமும் இடம்பெற்றிருந்தது.

bjp id card

கட்சி தொண்டர்களுக்கான அடையாள அட்டையை செய்தியாளர்களுக்கு வழங்கியது மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரி ஒருவர் அதில் கையொப்பமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் இதை மறைக்கும் வகையில் உடனடியாக டோக்கன் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் டி.எஸ்.பி கையொப்பமிட்டும் கொடுத்திருக்கிறார். எந்த தகவலும் இல்லாத வெற்று டோக்கனாக இருந்தது. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தேர்தல் அதிகாரி ஒருவர்,``செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே உண்டு.

id card

மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியின் செயலால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.பியின் இந்த செயல் தேர்தல் அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அவரிடம் விளக்கம் பெறப்படும்"என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajnath-singh-visit-bjp-id-card-signed-by-ooty-dsp-stirs-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக