Ad

புதன், 28 ஏப்ரல், 2021

ஸ்டெர்லைட்: ``எதிர்க்கட்சிகளை உடன்படவைக்கவே ஆலோசனைக் கூட்டம்?!” - தொல்.திருமாவளவன்

தீவிரமாகப் பரவிவரும் வைரஸ் பாதிப்பால், தொற்றாளர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பாகப் பிரச்னைகள் போய்க்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், விழுப்புரத்தில் நேற்று (27.04.2021) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

அப்போது பேசிய அவர், "கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ஒட்டுமொத்த இந்திய தேசமே திணறும் நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் மருந்துப் பற்றாகுறை, போதிய கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த இரண்டாவது அலையில் கடுமையான உயிர்ச் சேதம் ஏற்பட்டுவருகிறது. இதற்கு மோடி அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசியை இந்திய மக்களுக்கு கட்டணமின்றி வழங்க வேண்டும். அதற்காக ஆகும் அனைத்துச் செலவையும் மைய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

திருமாவளவன்

கொரோனா வைரஸ், கடுமையான ஓர் இயற்கைப் பேரிடர். தடுப்பூசி, அரசு மருத்துவமனைக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைக்கு ஒரு விலையாக உள்ளது. இதனால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்பவரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசியை கட்டணமின்றியோ அல்லது மலிவு விலையிலேயோ வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் ஒரே மாதிரியான விலையாக அமைய வேண்டும். 'ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை' என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுவருகிறது. `50,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சேமிப்பில் உள்ளது. 7,000 மெட்ரிக் டன் அளவிலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவில் உள்ளது' என நீதிமன்றத்தில் வாதிடும் மத்திய அரசு, ஸ்டெர்லைட் தொடுத்த வழக்கின் விசாரணையின்போது, 'ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மூலமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்' என வாதிடுகிறது. இதில் எது உண்மை எனப் புரியவில்லை. இதை மத்திய அரசே விளக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி தளத்தை மட்டுமே திறப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில்... தமிழக அரசு சார்பிலும் வாதிடப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த முடிவும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், நலன்களுக்கும் எதிராக அமைந்துள்ளது. தமிழகத்திலுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தமிழக அரசு முறையாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடவில்லை என இதிலிருந்து தெரிகிறது. 'தமிழகத்தில் ஒரு நாளைக்கு 450 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால், 400 மெட்ரிக் டன் அளவிலேயே கையிருப்பு உள்ளது. 50 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் பற்றாக்குறையாக உள்ளது' என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதில் பதிவு செய்துள்ளார் தமிழக முதலமைச்சர். இந்தப் பற்றாக்குறையை உச்ச நீதிமன்றத்தில் ஏன் சுட்டிக்காட்டவில்லை எனும் கேள்வி எழுகிறது. தமிழகத்துக்கே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கான ஆக்ஸிஜனை இங்கிருந்து அனுப்பும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

'ஸ்டெர்லைடில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன், மத்திய அரசிடமே ஒப்படைக்கப்படும். மாநில அரசிடம் ஒப்படைக்கப்படாது. தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படாது' என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'தமிழகத்துக்கு இப்போது கூடுதல் தேவைகள் இல்லை. தேவைப்படும்போது சுட்டிக்காட்டுங்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே தமிழக அரசு இயங்கிவருகிறது.

அதுபோலத்தான், மத்திய அரசின் போக்குக்கு ஏற்ப அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று பெயருக்குக் கூட்டி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்று புதிய நடைமுறையை கொண்டுவந்து, விசிக, மதிமுக போன்ற கட்சிகளைத் திட்டமிட்டு தவிர்த்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அந்தத் தளத்தைத் திறப்பதற்கான சட்டபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது மட்டும்தான் மத்திய அரசின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு மாநில அரசும் இணங்கியுள்ளது. அந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான திமுக-வையும் உடன்படவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக யூகிக்கத் தோன்றுகிறது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படவுள்ள இந்த நான்கு மாத காலத்துக்கு ஆலையைக் கண்காணிப்பதற்காக, குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தக் குழு என்பது மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல அமைக்கப்படுகின்ற குழுவாகவே அமைய இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இது ஏமாற்றத்தைத் தருகிறது. பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாவும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். அரசு அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனத்திடம் வட மாநிலங்களில் இது போன்ற ஆலைகள் இருந்தும், அங்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு முனைப்பு காட்டாத அந்த நிறுவனம்... தமிழகத்தில் சட்டப்படி மூடப்பட்டுள்ள ஆலைக்குள்ளாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யப் போவதாக விரும்புவதும்... அதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பதும்; இவர்கள் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளை உடன்பட வைப்பதும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த கொரோனாகால பாதிப்புகளையும், மக்களின்நலனையும் கருத்தில்கொண்டு இவை 'முரண்பாடான முடிவுகள்' என்றாலும் அதை வரவேற்கிறது விசிக என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் தமிழகத்துக்குத் தேவைப்படும் என வழக்காட வேண்டும். ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து உதவுவதில் விசிக-வுக்கு மாற்று கருத்தில்லை. அதே சமயம், மத்திய அரசின் சதி முயற்சிக்கு துணைபோவதை தமிழக அரசு கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்குப் பயனின்றி ஏமாற்றத்தை அளிக்கிறது எனும் அடிப்படையில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும். ஸ்டெர்லைட் மூலம் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனுக்கு தமிழகத்துக்கே முன்னுரிமை வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavan-attacks-state-and-central-governments-in-villupuram-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக