Ad

திங்கள், 26 ஏப்ரல், 2021

`தடுப்பூசி போட்ட பிறகு ரத்த தானம் செய்யலாமா... கூடாதா?!’ - நிபுணரின் விளக்கம்

கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து, அதைச் சார்ந்த பல்வேறு சந்தேகங்களும் அச்சங்களும் தற்போதுவரை துணைக் கேள்விகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசிகள் வந்த பிறகு, இன்னும் ஏராளமான கேள்விகள் சமூக வலைதளங்களில் வட்டமிடுகின்றன.

Vaccination

`தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?, இரண்டில் எந்தத் தடுப்பூசி சிறந்தது, தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராதா, யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அசைவம் சாப்பிடலாமா, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு லேசான காய்ச்சலோ, உடல்வலியோ வந்தால்தான் மருந்து வேலை செய்கிறது என அர்த்தமா’ - இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் தற்போது வரை பலராலும் முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில், ரத்த தானம் குறித்த ஒரு தகவலும், அது குறித்த சந்தேகமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு சராசரியாக நான்கு வாரங்களுக்குப் பிறகும், கோவிஷீல்டாக இருந்தால் 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். `வரும் மே 1-ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசத் தடுப்பூசி போடப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், `இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நான்கு வாரங்கள் கழித்துதான் ஒருவரால் ரத்த தானம் செய்ய முடியும். எனவே, மே 1-ம் தேதிக்கு முன்பே ரத்த தானம் செய்ய முன்வருவது நல்லது. இதனால், அடுத்த 2 - 3 மாதங்களுக்கு ரத்த தானம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கலாம்’ என்ற செய்தி சமூக வலைதளங்களில் உலவுகிறது.

Blood

இது குறித்து ரத்த மாற்று சிகிச்சை மருத்துவர் செல்வராஜிடம் பேசினோம். ``கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட நாள்கள் இடைவெளிக்குப் பிறகுதான் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற செய்தி உண்மைதான். இது கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமல்ல, எல்லா தடுப்பூசிகளுக்கும் பொருந்தும். தடுப்பூசிகளைப் பொறுத்து, அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட காலத்தில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகுதான் ஒருவரால் ரத்த தானம் செய்ய முடியும். இது குறித்து ரத்த தானத்தின்போது தரப்படும் படிவத்திலும் கேட்கப்பட்டிருக்கும்.

அதன்படி ரத்த தானம் செய்ய வருவோரிடம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கால அளவு குறித்து கேட்கப்படுகிறது. கொரோனாவுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 28 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்வதுதான் சிறந்தது. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தற்போது ரத்த தானம் செய்தால் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பிறகு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகுதான் ரத்த தானம் செய்ய முடியும்.

Blood (Representational Image)

Also Read: கோவிஷீல்டு: இந்தியாவுக்கு ரூ.600, அமெரிக்காவுக்கு ரூ.300 - ஓரே தடுப்பூசி வெவ்வேறு விலைகளா?!

இந்தக் கால அளவு சில நாடுகளில் வேறுபடும். ஆனால், இந்தியாவில் 56 நாள்கள் இடைவெளிதான் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 18 - 60 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே முதல்முறையாக ரத்த தானம் செய்ய வலியுறுத்தப்படுகின்றனர். 60 வயதைக் கடந்தோர் முதல் முறையாக ரத்த தானம் செய்யக் கூடாது. அதேபோல ஏற்கெனவே ரத்த தானம் செய்துவந்தோர் 65 வயது வரை மட்டுமே தானம் செய்ய வேண்டும். நம் நாட்டில் சராசரியாக 20 - 45 வயதுக்கு உட்பட்டோர்தான் அதிகளவில் ரத்த தானம் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை அதிகம் இருந்தபோது ரத்த தான முகாம்கள் நடத்தப்படுவது கணிசமாகக் குறைந்தது. தற்போதைய இரண்டாம் அலை பாதிப்பிலும் அதுபோன்ற நிலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். அத்துடன், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுவதால் கணிசமான இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். அவர்களில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களால் 56 நாள்களுக்கு தானம் செய்ய முடியாமல் போகலாம். எனவே, ரத்த தேவைக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். எனவேதான், தடுப்பூசி போடும் முன்பாக ரத்த தானம் செய்துவிடுங்கள் என்று சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்படுவதாக நினைக்கிறேன்” என்பவர், 56 நாள்கள் கால அளவுக்கான காரணத்தையும் விளக்குகிறார்.

covid vaccine

Also Read: `பெண்கள் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் 5 நாள்கள் கோவிட் தடுப்பூசி போடக் கூடாதா?' - அரசு விளக்கம்

``தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 28 நாள்களுக்குப் பிறகுதான், கோவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் அதிகரிக்கும். அந்த வகையில், இரண்டு தவணைகளும் போட்டுக்கொண்டால் மொத்தமாக 56 நாள்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு வழக்கம்போல ரத்த தானம் செய்யலாம்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்துக்குள் நமக்கு கொரோனா உள்ளிட்ட ஏதாவதொரு பாதிப்பு வந்தால், நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறையலாம். எனவேதான், நமது உடலில் எதிர்ப்பு சக்தி ஓரளவுக்காவது கிடைக்கப் பெற்ற பிறகு ரத்த தானம் செய்வது சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை கோவிஷீல்டு, கோவாக்ஸின் உள்ளிட்ட இரண்டில் எந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்போட்டோர்தான் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மற்ற நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறையும் என்றாலும்கூட, அவர்களுக்கான ரத்த தேவையும் நிச்சயம் இருக்கும். எனவே, தடுப்பூசி போடும் முன்பாக ரத்த தானம் செய்ய முன்வருவோர் தாராளமாகத் தானம் செய்வது நல்லது” என்று முடித்தார்.



source https://www.vikatan.com/health/healthy/why-covid-19-vaccinated-people-should-wait-28-days-to-donate-blood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக