Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

`சர்ச்சை போஸ்டர், ஸ்டாலினுக்கு வணக்கம், சினிமாவுக்கு பிரேக்!’ - நடிகை விந்தியா ஷேரிங்ஸ்

அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை விந்தியா, அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக இருக்கிறார். அரசியல் ரீதியாக அதிரடியாகவும் தைரியமாகவும் தன் கருத்துகளை முன்வைப்பவர். அதற்கு எதிர்வினையாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசார தருணத்தில் இருந்தே, `கண்ணீர் அஞ்சலி’ என்ற வாசகத்துடன் விந்தியாவின் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர். இது தற்போதுவரை தொடரவே, `உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கிற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி’ என்று அரசியல் ரீதியான கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பிரசாரத்தில் விந்தியா

இது குறித்து விந்தியாவிடம் பேசினோம். அரசியல் தாக்குதல்கள் முதல் பர்சனல் பக்கங்கள் வரை பலவற்றையும் வெளிப்படையாகப் பகிர்ந்தார்.

``சட்டமன்றத் தேர்தல் பிரசார நேரத்துலயே இந்த அஞ்சலி போஸ்டர் சமூக வலைதளங்கள்ல அதிகளவுல பகிரப்பட்டிருக்கு. அப்போ அதைப் பத்தி நான் பெரிசா கண்டுக்கல. அதன் பிறகு இப்போவரை அந்த போஸ்டர் உலவிகிட்டே இருக்க, அதை என்னோட உறவினர்கள் சிலர் பார்த்திருக்காங்க. அழுதுகிட்டே என்கிட்ட இது பத்தி கேட்டாங்க. அரசியல், சினிமா நண்பர்கள் பலரும் என்கிட்ட பேசினாங்க. அந்த போஸ்டரைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. `இப்படியெல்லாம் செய்றாங்களே’ன்னு என்னோட அம்மாதான் ரொம்பவே வருத்தப்பட்டாங்க.

எடப்பாடி பழனிசாமியுடன் விந்தியா

`இப்படிப் பண்றதால ஆயிசு கூடும்மா. இதை பாசிட்டிவ்வா எடுத்துப்போம்’னு சொன்னேன். இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்னுதான், என்னோட ஸ்டைல்ல நக்கலா ட்விட்டர்ல கருத்து தெரிவிச்சிருந்தேன். என்னை தி.மு.க-வினர் தவிர வேறு யாரு எதிர்க்கப் போறாங்க. பெண்களை அவமானப்படுத்துறது அவங்களுக்கு கைவந்த கலை. விமர்சன ரீதியா இல்லாம, வயித்தெரிச்சல் படுற மாதிரியா இப்படியான காரியத்தைப் பண்றாங்க. யாருக்கு என்ன வருமோ, தெரியுமோ அதைத்தானே செய்வாங்க. அதனால இதுல கவலைப்பட ஒண்ணுமில்ல” என்று சிரித்தவர், அரசியல் பயணம் குறித்துப் பேசினார்.

``திருட்டு வி.சி.டி பிரச்னை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நேரம். அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதா அம்மா, அந்தப் பெரும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்து திரைத்துறையினருக்குப் புது விடியலை ஏற்படுத்தினாங்க. அதுக்காக, தமிழ் சினிமா சார்புல அவங்களுக்குப் பாராட்டு விழா நடந்துச்சு. அதுல, சண்டைக் கலைஞர்கள் யூனியன் சார்புல சிலம்பம் சுத்தி, சண்டைக்காட்சிலயும் நடிச்சுக்காட்டினேன். ஜெயலலிதா அம்மா பார்த்து ரசிச்சாங்க. அதை ஞாபகம் வெச்சு, 2006 தேர்தல் சமயத்துல என்னை அழைச்சு, அரசியலுக்கு வரணும்னு அழைப்பு விடுத்தாங்க.

விந்தியா

அவங்க பேச்சை மீற முடியாம, என் கடைசி மூச்சு உள்ள வரைக்கும் அ.தி.மு.க-வில் இருப்பேன்னு வாக்குறுதி கொடுத்தேன். அந்தத் தேர்தல்ல இருந்து எல்லாத் தேர்தல்லயும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவா பிரசாரம் செஞ்சேன். ஆரம்பகாலத்துல எனக்குத் தமிழ் சரளமா தெரியாது. பிரசாரத்துக்காகவும் அரசியல் பயணத்துக்காகவும் தமிழ்ல சரளமா பேசவும் எழுதவும் கத்துக்கிட்டேன். எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில, என்னோட பேச்சாற்றலை வளர்த்துகிட்டேன். பொது மேடையில தைரியமா பேசிப் பழக்கமில்லாத எனக்கு, இப்போ பேசுற அனுபவம் ஆச்சர்யமாதான் இருக்கு.

அதேசமயம், இயல்பாவே தைரிய குணம் எனக்கு அதிகம். அதனால, அரசியல் ரீதியான காரசாரமான விமர்சனம், எதிர்வினைகளைப் பார்த்து எனக்கு எந்தச் சூழல்லயும் பயம் வந்ததில்ல. `உண்மையைப் பேசும்போது பயப்பட வேண்டிய அவசியமில்லை’னு ஜெயலலிதா அம்மா சொல்லுவாங்க. அதனால, தைரிய குணத்தையும் அவங்ககிட்ட இருந்துதான் கத்துகிட்டேன். முதல்வர் பத்தி உதயநிதி ஸ்டாலினும், ஆ.ராசாவும் பேசியதைப்போல தரம் தாழ்ந்து யாரும் பேசிட முடியாது.

ஓ.பன்னீர்செல்வத் துடன் விந்தியா

அவங்களைப் போல காழ்ப்புணர்ச்சியுடனும் முகம் சுழிக்கும் வகையிலயும் நான் ஒருபோதும் பேசினதில்ல. தி.மு.க-வினர் செய்யுற தவறுகளைச் சுட்டிக்காட்டி உண்மையை உரக்கச் சொல்றேன். அதேசமயம், தனிப்பட்ட முறையில் அவங்களை நாங்க யாருமே எதிர்க்க மாட்டோம். ஜெயலலிதா அம்மா மறைந்தபோது ராஜாஜி ஹால்ல நின்னுட்டிருந்தேன். அங்கு வந்த ஸ்டாலின் என்னைப் பார்த்ததும் வணக்கம் தெரிவிச்சார். பதிலுக்கு நானும் வணக்கம் தெரிவிச்சேன். கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் அ.தி.மு.க-வுக்கு தி.மு.க எப்போதும் எதிர்க்கட்சிதான். அந்த நிலைப்பாட்டில் இருந்து எப்போதும் விலகமாட்டோம்.

இதுக்கிடையே, ஜெயலலலிதா அம்மா மேல அளவுகடந்த அன்பு வெச்சிருந்ததால, அவங்க இழப்பை என்னால சுலபமா ஏத்துக்க முடியல. அவங்களோட மறைவு என் தலையில விழுந்த பெரிய இடியா அமைஞ்சது. மன அழுத்தத்துல உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. சிகிச்சைக்காக அமெரிக்கா போனேன். பிறகு, கடவுள் நம்பிக்கை, ஜெயலலிதா அம்மாவின் போராட்ட வாழ்க்கை, பாரதியாரின் கவிதைகள்னு மூணு விஷயங்களாலதான் மறுபடியும் இயல்புநிலைக்குத் திருப்பினேன். இனி அரசியல் வேண்டாம்னு நினைச்சு ஒரு வருஷமா மீடியா வெளிச்சமே படாம இருந்த நிலையில, ஜெயலலிதா அம்மாவுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாதுனு எடப்பாடி பழனிசாமி அண்ணன் முன்னிலையில மறுபடியும் அ.தி.மு.க-வுல இணைஞ்சேன். என் மேல எங்க கட்சித் தலைமை வெச்சிருக்கிற நம்பிக்கையின்படி வேலை செய்றேன்” என்பவர், சினிமா அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்தார்.

ஜெயலலிதாவுடன் விந்தியா

``` `சங்கமம்’ படம் மூலமா சினிமாவுக்கு அறிமுகமானப்போ, என்னோட முதல் பேட்டி ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வெளியாச்சு. அந்தப் படமும் பாடல்களும் ஹிட்டாகவே, பாசிட்டிவ்வான தொடக்கத்துடன் எனக்குப் பிடிச்ச ரோல்கள்ல ஓரளவுக்கு நடிச்சேன். சினிமாவுல பெரிசா எதிர்பார்ப்புகள் இல்லாம இருந்ததால, இதுல கிடைச்ச ஏற்றத்தாழ்வுகள் என்னைப் பாதிக்கல. அலர்ஜி பிரச்னையால உடல்நிலை பாதிக்கப்பட்டு என் உடல் எடை கூடிடுச்சு. அதுக்கு காரணமா சில தவறான தகவல்களைப் பரப்பினாங்க. அதையும் நான் கண்டுக்கல. இப்பவும் சினிமா வாய்ப்புகள் வருது. ஆனா, அரசியல் பயணம் மட்டுமே எனக்குப் போதும்னு தோணுது. இதன் மூலமாவே மக்கள்கிட்ட எளிதா போக முடியுது; கருத்துகளைச் சொல்ல முடியுது. அதனாலயே, பத்து வருஷத்துக்கும் மேல சினிமால நடிக்காம இருக்கேன்” என்று புன்னகையுடன் முடித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/actress-vindhya-speaks-about-her-political-journey-and-recent-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக