Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

IPL 2021 : CSK தவறவிட்ட மிக உயர்ந்த வேகப்பந்து வீச்சாளர்... கவுன்ட்டி கிரிக்கெட்டும், விதிமுறைகளும்!

சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனில் அவரை சென்னை அணி பெரிதாக நம்பியிருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகுவதாக ஹேசல்வுட் அறிவித்துவிட்டார்.

சென்னை அணியில் ஹேசல்வுட், லுங்கி எங்கிடி என இரண்டே இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள்தான் இருந்தனர். ஹேசல்வுட்டின் வெளியேற்றத்தால், லுங்கி எங்கிடியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை சென்னைக்கு உண்டானது. ஆனால், இப்படி ஒரே ஒரு வீரரை மட்டுமே நம்பியிருப்பது எப்போதுமே பின்னடைவுதான் என்பதால் ஹேசல்வுட்டுக்கு மாற்றாக வேறொரு வீரரை ஒப்பந்தம் செய்ய சென்னை அணி முடிவு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரண்டாஃபை சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. ஆனால், சென்னை அணியின் முதல் சாய்ஸ் பெஹ்ரண்டாஃப் இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

Reece Topley

இங்கிலாந்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்ளேதான் சென்னை அணியின் முதல் சாய்ஸாக இருந்திருக்கிறார். சென்னை அணிக்கும் ரீஸ் டாப்ளேக்கும் இடையில் முதல்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கிறது. ஆனால், கவுன்ட்டி கிரிக்கெட்டின் சில விதிமுறைகள் காரணமாக டாப்ளேவை சென்னை அணியால் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆடிவரும் வீரர்களை ஐபிஎல் அணிகள் திடீரென ஏதாவது ஒரு வீரருக்கு மாற்றாக ஒப்பந்தம் செய்வதால், அந்த வீரர்கள் கவுன்ட்டி போட்டிகளிலிருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலை இருந்தது. இது கவுன்ட்டி அணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தவிர்க்க 2018-ம் ஆண்டிலிருந்து ஒரு புதிய விதிமுறை அமலாக்கப்பட்டது. அதன்படி, ஐபிஎல் ஏலம் முடிந்த 10 நாட்களுக்குள் மட்டுமே ஐபிஎல் அணிகளால் கவுன்ட்டி வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியும். அதற்கு மேல் எந்த அணியாலும் எந்த கவுன்ட்டி வீரரையும் ஒப்பந்தம் செய்ய முடியாது.

இந்த விதிமுறையின்படியே ரீஸ் டாப்ளேவை சென்னை அணியால் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போயிருக்கிறது. ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18-ல் முடிந்தது. அதிலிருந்து 10 நாட்கள் கணக்கிட்டு பிப்ரவரி 28-க்குள் டாப்ளேவை சென்னை அணி தொடர்பு கொண்டிருந்தால், டாப்ளே இப்போது மஞ்சள் ஜெர்சியில் தோனியின் கேப்டன்சியில் ஆடியிருப்பார். ஹேசல்வுட்டின் விலகல் முடிவு பிப்ரவரி 28-க்கு பிறகே தெரியவந்ததால் சென்னை அணியால் டாப்ளேவை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.

ஆர்ச்சருக்கு மாற்றாக ரீஸ் டாப்ளேவை ராஜஸ்தான் அணியும் முயன்றிருக்கிறது. புதிய விதிமுறையின் காரணமாக அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சன்ரைசர்ஸ் அணி மிட்செல் மார்ஷுக்கு பதில் ஜேசன் ராயை மிகவும் தாமதமாகவே ஒப்பந்தம் செய்தது. அது மட்டும் எப்படி சாத்தியமானது? கவுன்ட்டி கிரிக்கெட்டின் புதிய விதிமுறை கவுன்ட்டி அணிகளிடம் சம்பள ஒப்பந்தம் வைத்துள்ள வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டிடமே ஒப்பந்தம் வைத்துள்ளார். ஆனால், டாப்ளே கவுன்ட்டி அணியான சர்ரேவிடம் மட்டுமே ஒப்பந்தம் வைத்துள்ளார். இதனாலேயே ஜேசன் ராயை ரீப்ளேஸ்மென்ட்டாக எடுக்க சன்ரைசர்ஸுக்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை.

ரீஸ் டாப்ளேவை சென்னை அணி தவறவிட்டது ஏமாற்றமளிக்கும் விஷயமே. 6.8 அடி உயரமான டாப்ளே நல்ல வேகத்தில் வீசக்கூடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளராக சென்னை அணிக்கு பலமாக இருந்திருப்பார். இங்கிலாந்து அணிக்காக 2015-ம் ஆண்டிலேயே அறிமுகமாகிவிட்ட டாப்ளே, காயங்களினால் தொடர்ந்து அவதிப்பட்டு சமீபத்தில்தான் இங்கிலாந்து அணிக்கு கம்பேக் கொடுத்தார். இப்போது நல்ல ஃபார்மில் வேறு இருக்கிறார். நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக இரண்டு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆஷஸ் தொடருக்கான அணியிலும் டாப்ளே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற செய்திகள் உலாவுகின்றன.

''ஐபிஎல் தொடரில் ஆடுவதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், கவுன்ட்டி விதிமுறைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது துரதிஷ்டவசமானது'' என டாப்ளேவும் வருத்தப்பட்டிருக்கிறார்.



source https://sports.vikatan.com/ipl/the-england-speedster-whom-chennai-super-kings-missed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக