Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

‘வன்முறையைத் தூண்டுவதாக அவதூறு; அ.தி.மு.க மீது வழக்கு!’ -துரைமுருகன் மகன் பதிலடி!

காட்பாடி தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் வி.ராமு என்பவர் களமிறங்கியிருக்கிறார். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடியிலுள்ள சட்டக்கல்லூரியில் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், ‘‘வாக்குகள் எண்ணப்படும் மையத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருக்கிறார்கள்’’ என்று துரைமுருகன் மற்றும் அவரின் மகன் கதிர் ஆனந்த் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் மனு அளித்திருந்தார்.

துரைமுருகன்

அ.தி.மு.க-வின் இந்த புகாருக்கு துரைமுருகனின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் வன்முறையைத் தூண்டி கலகம் விளைவிக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு பொய்யான தகவலைக் கொண்ட ஒரு மனுவை அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அதிர்ச்சியும் அடைந்தேன். காரணம், வாக்கு எண்ணுமிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாது என்ற அடிப்படை உண்மைக்கூட தெரியாமல் வழக்கறிஞர் மனு கொடுத்திருக்கிறார். என் தந்தை துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பத்து முறைகளுக்கு மேல் நின்றவர்.

கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுவரை எந்த தேர்தலிலும் சிறு சம்பவம் நடந்ததாக போலீஸ் நிலையத்துக்கு யாரும் போனதாக இல்லை. ஒவ்வொரு முறையும் வாக்கு எண்ணும்போது தொடக்கம் முதல் இறுதிவரை வாக்கு எண்ணும் இடத்திலேயே தான் இருந்திருக்கிறார். வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் அமைதியாகத்தான் வெளி வந்திருக்கிறார். நிலைமை இவ்வாறிருக்க, நாங்கள் வன்முறையைத் தூண்டுவோம் என்று கூறியிருப்பது சட்டப்படி குற்றம். அ.தி.மு.க வழக்கறிஞர் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன்’’ என்று கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/duraimurugans-son-kathir-anand-reaction-on-admk-complaint-against-his-father-and-himself

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக