Ad

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

கோவை: நகையை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறிகள்! -நெகிழ வைக்கும் தம்பதியின் மனிதம்

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இன்னும் உக்கிரமாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் நாடே தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பது போல அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நிரம்பி வழியும் மருத்துவமனைகள், பிணக்குவியல்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் ரணத்தை கொடுக்கிறது.

கொரோனா வைரஸ்

Also Read: கோவை: மருத்துவமனைப் பயன்பாட்டுக்குத் தயாராகும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்! #PhotoAlbum

முதல் அலையை விட பாதிப்பு அதிகம் இருப்பதால் ஊரடங்கு, பொருளாதாரம் என்று பல விஷயங்கள் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம்? என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகளிடம் பதில் இல்லை.

ஆனால், இந்த சூழ்நிலையை முறியடிப்போம் என்ற நம்பிக்கை விதையை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாமானிய தம்பதி விதைத்துள்ளனர். அந்த விதையின் பெயர் மனிதம். மருத்துவமனைகளில் பலர் இடம் கிடைக்காமலும், போதிய வசதிகள் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை

கோவையைப் பொறுத்தவரை, இங்கு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகங்கள் கொரோனா வைரஸ்க்கு பிரதான சிகிச்சை மையங்களாக உள்ளன. அதிலும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, குளிரூட்டப்பட்ட மருத்துவமனை என்பதால், இங்கு மின்விசிறி வசதி இல்லை.

“கொரோனா காலத்தில் குளிர்சாதன வசதியையும் பயன்படுத்த முடியாது. குளிர்சாதன வசதியும் இல்லாமல், மின்விசிறியும் இல்லாமல் நோயாளிகள் சிரமப்படுவதால் அரசாங்கம் சார்பில் 300 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மேலும், மின்விசிறிகள் தேவைப்படும் என்பதால், விருப்பப்பட்டவர்கள் மின்விசிறி வழங்க முன்வரலாம்.

மின்விசிறி சம்பவம்

கொரோனா வைரஸ் காலகட்டம் முடிந்தவுடன் அவர்கள் மின்விசிறியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இந்த கொரோனா காலத்தில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை.

ஒரு தம்பதி மருத்துவமனை முதல்வரை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில் அவர்கள் கூறிய முதல் விஷயம், “எங்கள் பெயர் உள்ளிட்ட எந்த விபரங்களையும் வெளியிட வேண்டாம். நாங்கள் காலையில் முதல்வரின் அறிவிப்பை கேட்டோம். இ.எஸ்.ஐ-க்கு 100 மின்விசிறிகளை வழங்க வந்திருக்கிறோம். முதல்வர் அறிவிப்பை கேட்டவுடன் எங்கள் கையில் பணம் இல்லை.

மின்விசிறி

எனவே, எங்களது நகைகளை அடகு வைத்தோம். அதில் ரூ. 2,20,000 பணம் கிடைத்தது. அதை வைத்து 100 மின்விசிறி வாங்கி வந்துள்ளோம். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர். ஆனால், அந்த உதவியை ஏற்பதில் முதல்வருக்கு தயக்கம் இருந்தது.

“நீங்களே கஷ்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சக்திக்கு தகுந்தது போல நான்கு அல்லது ஐந்து மின்விசிறிகள் மட்டும் வாங்கிக் கொடுங்கள். அதுவே போதும்” என்று கூறினார். அதை அந்தத் தம்பதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். “நாங்கள் 100 மின்விசிறிகளை கொடுத்துவிட்டுதான் போவோம்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை

முதல்வர் இந்த விஷயத்தை கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து, ஆட்சியரும் அந்தத் தம்பதியிடம் பேசியிருக்கிறார். கடைசிவரை அந்தத் தம்பதி தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

“சரி... அவர்கள் மனது வருத்தப்பட வேண்டாம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்குவோம். மின்விசிறிகளை பெற்றுக் கொண்டு, அதைத் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குங்கள்” என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அந்தத் தம்பதிக்கு மருத்துவமனை முதல்வர், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். ஊடகங்களும், மருத்துவமனை நிர்வாகமும் அவர்களை கௌரவிப்பதற்காக பலமுறை கேட்டும், தங்களது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டனர் அந்த பெரிய மனது படைத்த தம்பதி.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்

முகமும் காட்டாமல், முகவரியும் தெரியாமல் பல பேருக்கு உதவி செய்து மறைந்த சாந்தி சமூகசேவை அறக்கட்டளை சுப்பிரமணியம் வாழ்ந்த பூமி இந்த கோவை. இங்கு அவரைப் போல இன்னும் பலர் இருக்கின்றனர் என்பதற்கு இந்த தம்பதி தான் உதாரணம். தனிமனித இடைவெளி, முகக்கவசம், கபசரக்குடிநீர் இவற்றுடன் இந்த மனிதம் என்னும் மகத்தான நம்பிக்கையுடன் கொரோனா வைரஸை வீழ்த்துவோம்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-couples-help-to-corona-patients-with-their-jewels

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக