Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

''சாதியக் கண்ணோட்டத்திலேயே தமிழ்நாட்டைப் பிரிக்க நினைக்கிறது பா.ம.க.!'' - சொல்கிறார் திருமாவளவன்

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்... என்ற கேள்விக்கு விடைதெரியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் 'தி.மு.க-வே பெரும்பான்மையான இடங்களை வெல்லும்' என ஊடகம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அ.தி.மு.க தலைவர்களோ 'ஹாட்ரிக் சாதனையாக அ.தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமரும்' என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து அரசியல் பேசினேன்....

மு.க.ஸ்டாலின்

''உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச்சொல்லி, தி.மு.க. கூட்டணியில் வற்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதே?''

''வற்புறுத்தல் என்று சொல்லமுடியாது... அது ஓர் ஆலோசனை மட்டும்தான். 10 நாட்களுக்குள் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகம் செய்து, வெற்றி பெறுவதென்பது சிரமமான விஷயம். அடுத்து நாம் புதிய சின்னத்தில் போட்டியிடும்போது, 'நம்மை எளிதில் வென்றுவிடலாம்' என்ற கருத்து - நம்பிக்கை நமக்கு எதிராகப் போட்டியிடுபவர்களுக்கு ஏற்படும். அதுவேகூட நமக்கு ஒரு பலவீனமாகவும் அமையும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், எளிதாக மக்களை சென்றடையலாம் என்பதையெல்லாம் ஓர் ஆலோசனையாக சொன்னார்கள்!

அதேசமயம் 1999-ல் சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டது வி.சி.க. அதன்பிறகு 2001-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். 2004-ல் அம்பு சின்னம். அதன்பிறகு தொடர்ந்து தனிச்சினத்திலேயே போட்டியிட்டு வருகிறோம். எனவேதான் இந்த முறையும் 'பானை' சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம்!''

''கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை எதிர்க்கட்சிகள் விதைத்துவிட்டதாக பா.ஜ.க தலைவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்களே...?''

''தடுப்பூசி பற்றிய மக்கள் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை கொடுக்கத் தவறியது ஆளுங்கட்சி. 'தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்று ஒரு மருத்துவர் சொல்வதான வீடியோகூட சமூக ஊடகம் வழியே பரவின. இது பொய்யான செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் இதுபோன்ற செய்திகள் ஏற்கெனவே மக்களிடையே பரவியிருக்கிறது.

விவேக்

எனவே மக்களிடம் அப்படியொரு வெறுப்பு - கிளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதை அப்படியே கடந்துபோய்விடாமல், அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக பதில் சொல்லியாகவேண்டும். இதைத்தான் நானும் எடுத்துச்சொன்னேன்.

ஏனெனில், விவேக் மரணம் மக்களுக்கு கோபத்தை - சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தான் நான் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறேன். ஆனால், இப்போதும்கூட ஆளும் கட்சியினர் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்துகொள்ளாமல், அதற்கு வெளியே நின்றுகொண்டு பேசிவருவது அவர்களது இயலாமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது.''

''அரக்கோணம் இரட்டைப் படுகொலையில் சாதியப் பின்புலம் இல்லை என்று சொல்லப்படுகிறதே...?''

''அது சாதியப் படுகொலை இல்லை என்றால், என்ன காரணத்துக்காக அந்தப் படுகொலை நடந்தது? சாதியின் பெயரில்தானே அடித்திருக்கிறார்கள். 'ஏலேய்' என்று கூப்பிட்டதற்காகவா 2 பேரைக் கொலை செய்வார்கள்?''

சிவகாமி ஐ.ஏ.எஸ்.

''வி.சி.க-வுக்கு வாக்கு சேகரித்ததற்காக நடைபெற்ற கொலை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், சிவகாமி ஐ.ஏ.எஸ் உங்களுக்கு எதிரான கருத்தை சொல்கிறாரே?''

''எனக்கு எதிராகவெல்லாம் அவர் கருத்து சொல்லவில்லை... சொல்லத்தெரியாமல் சொல்லியிருக்கிறார். 'எல்லா ஊர்களிலும்தான் பானை சின்னத்தில் ஓட்டு கேட்டார்கள். அங்கேயெல்லாம் தாக்குதல் நடந்ததா' என்று அபத்தமான ஒரு கேள்வியை சிவகாமி கேட்டிருக்கிறார். என்.ஜி.ஓ டீம் சார்பில் அவர் போயிருந்திருக்கிறார். அந்த என்.ஜி.ஓ டீம் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்... அவ்வளவுதான்!''

''தமிழக அளவில், ஒடுக்கப்பட்டோருக்கு இணையாக பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிப்புகளை யாரும் பேசுவதில்லை என்ற குரல்கள் அண்மைக்காலமாக கேட்க ஆரம்பித்திருக்கிறதே...?''

''சில இடங்களில், பெண்களும் ஆண்களை அடிக்கிறார்கள்தான். அப்போதெல்லாம் 'ஆண்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள்' என்று யாராவது பேசுகிறார்களா? எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பலவீனமான சக்திகள் அல்லது பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற ஒரு பிரிவு சட்டத்திலேயே இருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அதாவது, ஒரு வன்முறை சம்பவத்தின்போது, 'ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் இவர்' என்ற விவரம் தெரியாமலேயேகூட எதிரி தாக்கியிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மை விசாரணையின்போது தெரியவந்தால், உடனே அந்த வழக்கானது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டமே சொல்கிறது.

திருமாவளவன்

காரணம்.... ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பட்டியல் சாதியினர் பாதிக்கப்படக்கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்; அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சமுதாயத்தில் மிக மோசமாக நடத்தப்படக்கூடிய நிலையே தொடர்கிறது. எனவே, இவர்களைப் பாதுகாப்பதற்கு இதுபோன்ற சட்டங்கள் தேவையாக இருக்கின்றன என்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுத்தான் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உதாரணமாக, தமிழ்நாட்டளவில் நடைபெறுகிற சம்பவங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன்... கலவரங்களின்போது கொல்லப்படுகிறவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்த மக்களாகத்தானே இருக்கிறார்கள். ஆக, ஆதிக்க சாதியினரால், எப்போதும் பாதிக்கப்படக்கூடிய மக்களாகவே பட்டியல் சாதியினர் இருந்துவருகிறார்கள். எனவே, தலித்துகள் பாதிக்கப்பட்டால், அதன் பின்னணியில் இருப்பது சாதியம் மட்டுமே... இதுதான் அடிப்படை உண்மை!''

''வாக்குப்பதிவுக்குப் பிந்தைய சூழலில், மீண்டும் அ.தி.மு.க-வே 125 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று அ.தி.மு.க-வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனரே..?''

''இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிற கருத்து... வதந்தி! நான் எந்தக் கருத்துக் கணிப்பையும் நம்புவதில்லை. அதேசமயம் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்தவகையில், தி.மு.க கூட்டணி அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.''

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.

''அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு அறிவிப்புக்கும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பின்மைக்கும் இடையே சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா?''

''இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்துவருகிறது. இப்போது டெல்லியில் தேர்தல் கிடையாது. ஆனால், அங்கேயும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. எனவே, ஊரடங்கு அறிவிப்பை, வாக்குப்பெட்டியின் பாதுகாப்போடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா விஷயமாக அரசு எந்தவொரு நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதுதான் வி.சி.க-வின் நிலைப்பாடு!''

Also Read: மகாராஷ்டிரா: `3-வது நாளாக 10,000-ஐ தாண்டிய கொரோனா’ - `மக்களிடம் பயமில்லை’ என்கிறது மத்திய அரசு

''சமூக அளவில் நிறைய விவாதங்களை கிளப்பிய 'கர்ணன்' படம் குறித்து நீங்கள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லையே?''

''அடிப்படையில், அரச வன்கொடுமைக்கு எதிராக மக்கள் போராடக்கூடிய கதையாக அந்தப் படம் இருக்கிறது. அப்படி அதிகார வர்க்கத்தை எதிர்த்து மக்கள் திருப்பித் தாக்குவது என்பது எதார்த்தத்தில் ரொம்பவும் அபூர்வம். அப்படி நிகழ்ந்தால், என்னவாகும் என்ற கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கொடியன்குளம் சம்பவத்தின் அடிப்படை என்பது சாதியப் பிரச்னைதான். ஆனால், அது அரச பயங்கரவாதத்தில் போய் முடிகிறது. எப்போதும் கொதிநிலையிலேயே இருந்துவரக்கூடிய அந்த வட்டாரம், ஒரு சின்ன பிரச்னை என்றாலும்கூட 'தலித், தலித் அல்லாதோர்' என இரண்டாகப் பிரிந்துவிடும். அதாவது ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவருமே தலித்துகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள்.

'கர்ணன்' தனுஷ்

படத்தில், ஒரு தனிநபர் அந்த எஸ்.பி-யைப் பழிவாங்குவது மாதிரியாக கதையை வடிவமைத்திருக்கின்றனர். இது சினிமாவுக்காக சொல்லப்படக் கூடியது. எதார்த்தத்தில் இது சாத்தியம் இல்லை.

பொதுவாக சாதிய வன்கொடுமைகளே அரச பயங்கரவாதத்தால்தான் பாதுகாக்கப்படுகிறது, தக்கவைக்கப்படுகிறது. தொடர்ந்து நீடித்து வருவதற்கும்கூட அரச பயங்கரவாதமே காரணம். காவல்துறையும் வருவாய் துறையும் கைகோத்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதையும், அவர்களை ஒரு சக்தியாக திரளவிடாமல் தடுப்பதையும் தொடர்ந்து செய்துவருகிறது. பரமக்குடியில் நடைபெற்ற சம்பவம், ஜான் தாமஸ் - ஏழுமலையை சுட்டுக்கொன்றது என கொடியன்குளம் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் நடந்தேறியுள்ளன.''

Also Read: கரூர்: `போதையில் இருக்குற, தகராறு செய்யாத!' - அறிவுரை சொன்ன தாய்க்கு மகனால் நேர்ந்த துயரம்

''அண்மையில் பிரிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களும் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி 'தமிழ்நாட்டையும் மூன்றாகப் பிரிக்கவேண்டும்' என்கிறார்களே...?''

''அவர்கள் உதாரணம் காட்டுகிற மாநிலங்களைவிடவும் முன்னேறிய மாநிலமாகத்தான் ஏற்கெனவே தமிழ்நாடு இருந்துவருகிறது. வட மாநிலங்களின் கல்வி, பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது பன்மடங்கு வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழ்நாடு.

தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பகுதி தனித் தேசமாக இருந்தால், நாம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தமுடியும்; ஆட்சிக்கு வரமுடியும் என்ற சாதியக் கண்ணோட்டத்திலேயே இப்படியொரு கோரிக்கை பா.ம.க தரப்பில் வைக்கப்படுகிறது. ஏனெனில், பா.ம.க-வின் தலைமையை குறிப்பிட்ட சாதியைத் தவிர வேறெந்த சாதியும் ஏற்றுக்கொள்ளவில்லை; அங்கீகரிக்கவில்லை. ஆறேழு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பா.ம.க-வுக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கின்றனர். எனவேதான் இப்படியொரு கனவுடன் பா.ம.க கோரிக்கை வைக்கிறது. இதை மக்கள் இலகுவாக தூக்கியெறிந்துவிடுவார்கள்.''

மருத்துவர் ராமதாஸ்

''திருமாவளவன் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொள்வதில், இன்னமும் என்ன தயக்கம் நீடிக்கிறது?''

''ஒரு தயக்கமும் கிடையாது... இதையெல்லாம் மக்கள்தான் சொல்லவேண்டும். ஒருவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து, 'ஏன் இவரை முதல்வராக்கக்கூடாது...' என்று மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். மாறாக, நானே என்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நானும் செய்யவேண்டும் என்பது இல்லை. அதேசமயம் அப்படியொரு தேவையிருந்தால், காலம் கனிந்தால்... உரிய நேரத்தில் அந்த அறிவிப்பையும் நாங்கள் செய்வோம்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-pmk-wants-to-divide-tamil-nadu-from-a-caste-point-of-view-says-thirumavalavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக