Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சர்வதேச ஊடகங்களின் கொரோனா கவரேஜ்! - மோடியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டனவா?

இந்தியப் பிரதமர்களிலேயே சர்வதேச நாடுகளுக்கு அதிகம் பயணம் செய்ததும் சர்வதேச ஊடகங்களால் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானதும் பிரதமர் மோடியாகத்தான் இருப்பார். பிரதமர் மோடி பதவியேற்றது முதல் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் பிரதமர் மோடியை விமர்சித்து அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் India in Crisis என்ற தலைப்பில் கொரோனா-வால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்துகொண்டிருக்கும் சுடுகாட்டின் புகைப்படத்தை வைத்து அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. டைம் இதழ் மட்டுமல்ல வாஷிங்டன் போஸ்ட் தனது இதழில் ’கொரோனா விஷயத்தை மோடி அரசு சரியாகக் கையாளவில்லை' எனவும் தி கார்டியன் ‘மோடி அரசு மக்களைக் கைவிட்டுவிட்டது. பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைதான் இந்தியாவின் இந்தநிலைக்குக் காரணம். யாருடைய கருத்திற்கும் செவி சாய்க்காமல், தன்னிச்சையான மற்றும் திறமையற்ற பா.ஜ.க அரசின் செயல்பாடுகள்தான் இந்தியாவை இந்தநிலைக்குக் கொண்டுவந்தது என தனது எடிட்டோரியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டோம் என்ற சுயதிருப்தியும் அதற்கு அடுத்த தவறான நடவடிக்கைகளும்தான் இந்தியாவின் இந்தநிலைக்குக் காரணம் என தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நிலையை தவிர்த்திருக்க முடியும். ஊடகங்களுக்கு மட்டுமல்ல உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார். குறைந்தது இதற்கெல்லாம் குறைந்தது தான் தான் பொறுப்பு என்பதையாவது ஒப்புக்கொள்வாரா?’ எனக் கேல்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச ஊடகங்களில் மோடி

கொரோனா காரணமாக எதிர்க்கட்சிகள் கடைசி நேரத்தில் பிரசாரங்களைத் தவிர்க்க, மோடி பெரும் பொதுக் கூட்டங்களைத் தொடர்ந்தார். கொரோனா தொற்றின் முதல் அலை குறையத் தொடங்கியதுமே ஏதோ பெரிய அளவில் சாதித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்துவிட்டோம் என்ற மனநிலைக்கு இந்திய அரசு கொண்டு சென்றதும் இப்போதைய இந்த மோசமான நிலைக்குக் காரணம் என பி.பி.சி. விமர்சித்துள்ளது. ஐரோப்பிய ஊடகங்கள் மட்டுமல்லாது சீனாவிலிருந்து வெளிவரும் ஊடகங்களும் இந்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Also Read: கொரோனா:`மோடி பொறுப்பைக் கைகழுவிவிட்டார்' - சர்வதேச ஊடகங்கள் கடும் விமர்சனம்

பிரதமர் மோடி மீதான சர்வதேச ஊடகங்கள் எத்தகையைவை? இதை அவர் தவிர்த்திருக்க முடியுமா எனத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம் “இந்தியாவின் பிரதமர் மோடி மீது சர்வதேச ஊடகங்களின் வாயிலாக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே இத்தையை விமர்சனங்களை வைக்கின்றன என்று பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் ஓர் உள்நோக்க கற்பிக்கக்கூடும். பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த உலகத்திற்கே வழிகாட்ட கூடியவர் என்று சர்வதேச அளவில் நிலைநாட்டுவதற்காக இந்தியாவிற்கான வெளிநாட்டு தூதரகங்கள், இந்தியாவிற்கான வெளியுறவுத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் முயன்று பார்த்தார்கள். மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் அனைத்து நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வலிமையான தலைவர் எனத் தனக்கான சர்வதேச முகத்தை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.

விடுதலை ராஜேந்திரன்

ஆனால், மக்கள் பிரச்னைகள், பொருளாதாரம், தற்போது இது போன்ற கொள்ளை நோய் சமயத்தில் ஒன்றும் அறியாத அவரின் நிர்வாகத்திறன் வெளியே வந்துவிடுகிறது. சர்வதேச ஊடகங்களின் விமர்சனத்திற்கு ஆளாகின்றார். மோடி பிரதமராக பதவியேற்றதும் இந்தியா ஜனநாயக அமைப்பிலிருந்து விலகி மதத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதை உலகநாடுகள் விரும்பவில்லை.

பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையில் இருக்கும் அவரது சகாக்களும் பேசும் மதவாத, பிற்போக்குக் கருத்துகளை எல்லாம் பார்க்கும் உலக நாடுகள் தற்போதைய கால வளர்ச்சிக்கு ஏற்புடையதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டதோடு கேலியாகவும் பார்க்கின்றனர். பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு அதைத் தீர்க்க முயலவில்லை. கொரோனா காலத்தைப் புரிந்துகொண்டு அடுத்த அலையை எதிர்பார்த்து தங்களைத் தயார்ப்படுத்திவந்த காலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கும், கும்பமேளாக்களுக்கு அனுமதி அளிப்பதற்கும், சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதற்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருந்த இந்தியாவை அதிலிருந்து விலக்கி பழமைவாதத்தை நோக்கியும் மதவாதத்தை நோக்கியும் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டிருக்கிறார். இதை சர்வதேச ஊடகங்கள் கண்டுகொண்டு தங்கள் விமர்சனங்களை வைத்துவருகின்றன. இதில் உள்நோக்கம் ஏதுமில்லை.

விகடன் கார்ட்டூன்

ஒருவேளை அப்படி உள்நோக்கம் இருப்பதாக பா.ஜ.க நினைக்குமானால் இந்த இந்த சர்வதேச ஊடகங்கள் இன்னின்ன பிரச்னைகளில் தவறாக உள்நோக்கத்துடன் செய்தியை வெளியிட்டு வருகின்றன எனத் தரவுகளின் அடிப்படையில் விளக்கம் கொடுத்திருக்கலாமே. அப்படி எந்தத் தரவுகளும் இல்லாததால்தான் இவர்கள் அதற்கு எதிர்க்கட்சிகளின் உள்நோக்கம் என வழக்கமான புராணக்கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Also Read: பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி திருப்பதி நாராயணனிடம் பேசினோம்...

“சர்வதேச ஊடகங்கள் விமர்சனங்கள் வைக்கின்றனவோ இல்லையோ அவற்றை மேற்கோள்காட்டி புளகாங்கிதம் அடைகின்றன இந்திய எதிர்க்கட்சிகள். கொரோனா தொற்று மிக அதிகமாக இருக்கிறது, பிணங்கள் தெருக்களில் இட்டு எரிக்கப்படுகின்றன என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றன வெளிநாட்டு ஊடகங்கள். ஆனால், ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கும் அமெரிக்காவில் 1,771 பேரும், பிரேசிலில் 1,877 பேரும், இங்கிலாந்தில் 1,870 பேரும், இத்தாலியில் 1,996 பேரும் மரணமடைகிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்ட இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஊடகங்கள் இந்தியாவில் நடக்கும் 150 மரணங்களை ஊதிப் பெரிதாக்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்கு 30 கோடி தடுப்பூசிகள் போடப்படும் என உறுதி அளித்து அதன்படி மார்ச் முதல் வாரத்திலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு கொரோனா தடுப்பில் இந்திய அரசு வேகமாகச் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாடுகள் தவிரப் பிற நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சர்வதேச அளவில் இந்தியாவை அவமானப்படுத்த ஊடகங்கள் மூலமாகச் சிலர் முயன்று வருகிறார்கள். நடப்பது மிகப்பெரிய கொள்ளை நோய்த்தொற்று காலகட்டம்.

நாராயணன் திருப்பதி

உண்மையில் நமக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், மத்திய அரசு அவற்றை விரைந்து சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த முயற்சியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்து இன்பம் அடைவது ஏற்புடையதில்லை” என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-international-media-done-damage-to-pm-modis-image-with-corona-crisis-articles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக