Ad

வியாழன், 29 ஏப்ரல், 2021

புத்தம் புது காலை : இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்… ஆனால், அவரால் டாக்டர் ஆக முடியுமா?!

இசை என்பது கலையின் முக்கிய வடிவம். மருத்­துவமோ, அறிவியலின் அதிமுக்கியப் பிரிவு. இப்படி எதிரெதிர் திசையில் பயணிக்கும் கலையும் அறி­வி­யலும் ஒன்றுசேர்ந்து இயங்கும் தருணங்களில் இசை மருந்தாக மாறும் என்று கண்டறிந்துள்ளார்கள்.

1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, ஆறுதல் தரும் வகையில், சிகிச்சை அறைகளில் இசையையும் கசிய விட, அதன்பிறகு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்திருக்கிறது. இதைக் கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராய்ச்சி செய்தபோது உருவானது தான் ‘மியூசிக் தெரபி’.

ஆனால் 5000 வருடங்களாக இந்தியாவில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நாதயோகத்தைத் தான் அமெரிக்கர்கள் மியூசிக் தெரபி என்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது நாதயோகத்தின் அடிப்படையில் மூளையின் நிலைகளை பரநாதம், பஸ்யந்தி நாதம், மத்யமம் நாதம், வைகரி நாதம் என்று நான்காக வகைப்படுத்துவதையே, இன்று ஈ.ஈ.ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மூளையின் அதிர்வலைகளை ஆல்பா அலைகள், பீட்டா அலைகள், தீட்டா அலைகள், டெல்டா அலைகள் என்று நான்கு வகைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இசை

நமது மூளையில் ஆயிரம் கோடி நியூரான்களின் ஓய்வில்லாத மின் ரசாயன அதிர்வலை நடனத்தால் உருவாவதுதான் நம் சிந்தனை, செயல் அனைத்துமே.

இந்த மூளையை நாத யோகத்தினால் அதாவது இசையின் நேர்த்தியால் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அமைதிப்படுத்தவும் முடியும் என்பதுதான் இந்த மியூசிக் தெரபி.

ஒலி அலைகளா­ல் ஆன இசையானது, மூளையின் மின்சுழற்சி அலைகளுக்கு ஏற்ப அமையும்போது நமது எண்ணங்களில் ­பல்­வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, மெலடோனின் என்ற மூளையின் பினியல் சுரப்பியின் ஹார்மோன், தாள லயங்களுக்கேற்ப சுரந்து மன அழுத்தம், மன இறுக்கம், கோபம் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நல்லுறக்கத்தையும் அளிக்கிறது.

மேலும், இந்த ஆல்ஃபா, பீட்டா அலைவரிசைகளில் புதிய தாக்­கங்­களை இசை ஏற்­படுத்துவதுடன் பல்வேறு நோய்­களையும் குணப்படுத்துகிறது என்­கிறது மியூசிக் தெரபி. Dementia என்ற மூளைத்தேய்வு மற்றும் Alzheimer's எனப்படும் ஞாபகத்திறன் குறைபாடுகளில், மொசார்ட்டின் பியானோ இசை பெரிதும் உதவுகிறது என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு. அதேப்போல மாரடைப்பு, இருதய செயலிழப்பு, இருதய அறுவை சிகிச்சையிலும் இசை வலி நிவாரணியாக விளங்குகிறது என்கிறது மேயோ கிளினிக்.

இவை மட்டுமன்றி, மருத்துவர்களுக்கும் இசை பெரிதும் உதவுவதால், தற்போதைய மருத்துவக்கல்வியில் இசையை சேர்த்துள்ளது அமெரிக்க மருத்துவ சங்கம்.

மனதுக்கு மகிழ்வான, மென்மையான இசைக்கு மட்டுமே நோய்களைக் குணப்படுத்தி மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே பிரார்த்­தனை, கீர்த்­த­னைகள், வேத­பா­ரா­யணம், பஜனைப் பாடல்கள் போன்­றவை மன அழுத்த சிகிச்சையிலும், மருத்துவமனைகளிலும் ஒலிக்கவிடப்­ப­டு­கின்­றன!

அமைதிதரும் இசையைப் போலவே கிளர்ச்சி தரும் இசையும் உண்டு… மத்தளம், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி, உடலுக்கும் உள்ளத்திற்கும், உற்சாகமளிக்கிறது என்கிறது மற்றுமோர் ஆய்வு. போர்க்களங்களிலும், தீமிதிச் சடங்குகளிலும், கொட்டுவாத்தியங்கள், தாரை, தப்பட்டை, மேற்கத்திய நாடுகளில் டிரம்ஸ், ஜாஸ் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதன் காரணமும் இதுவே!

நோய்க்கு நேரடி மருந்தாக இசை இருக்காது என்றாலும், நோயை குணப்படுத்த பக்கபலமாக இருப்பதால், இதை ‘காம்ப்ளிமென்ட்ரி தெரபி’ என்கிறார்கள்.

ஆக… இசையும் மருத்துவமும் இணைந்து செயல்படும்போது தனிமனிதனுக்கும், அவன் மூலமாக ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நன்மைகளே நிகழ்கின்றன!

ஆம்… போட்டிகள் மிகுந்த இன்றைய உலகில் மன அழுத்தமும், பதற்றமும் அதிகம் கூடிய நிலையில், மருத்துவர்கள் நாங்கள் அளிப்பது நோய்க்கான சிகிச்சை மட்டுமே என்றிருக்க, இளையராஜா, ரஹ்மான் போன்றவர்களின் இசை அளிப்பது மன அமைதி எனும் மாமருந்தை!

ஆம்... இசை எனும் உலக மொழி, தனது கருவிகளின் மூலம் மாற்றியமைப்பது மனிதர்களின் மனம் என்ற கருவியைத் தான்!

#jaazday



source https://cinema.vikatan.com/music/how-music-therapy-helps-in-medical-patients

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக