Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் அஜித்?! ''நண்பர் அஜித்துக்கு'' விஜய் ரசிகரின் பிறந்தநாள் வாழ்த்து!

அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசான அன்று அஜித் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் செம ஹேப்பி. காரணம், முதல் ஷோ முடிந்தவுடனே படம் கொஞ்சம் சுமார்தான் என்ற டாக் பரவ ஆரம்பித்திருந்தது. போதாக்குறைக்கு படத்தில் பல மீம் மெட்டீரியல்கள் நிரம்பியிருந்தது. 'புலி' படத்திற்கு அஜித் ரசிகர்கள் அடித்த அடியில் நொந்து நூடுல்ஸாகியிருந்தவர்கள், ஒட்டுமொத்த பகையையும் ‘விவேகம்’ படத்தின் மீது இறக்கினார்கள். அப்படி விவேகத்தை மீம் போட்டு ஓட்டிய வெறித்தனமான விஜய் ரசிகர்களில் நானும் ஒருவன்.

‘துப்பாக்கி’ பட க்ளைமாக்ஸில் சத்யன், ஆர்மி குறித்து விஜய்யிடம் எமோஷனலாக பேசும் டெம்ப்ளேட்டை எடுத்து அதில்,

‘’2 வருஷம் கழிச்சு ரிலீஸ் ஆன விவேகமும் ஃப்ளாப்பு...

இன்னும் 2 வருசத்துக்கு எந்த படமும், ஏன் ஒரு அப்டேட் கூட வர போறதில்ல..

அடுத்த படம் வர வரைக்கும் இந்த விவேகத்தை நினைச்சுக்கிட்டே வாழணும்ல… உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் கிரேட்தான்...''

இப்படியொரு மீம் போட்டு அஜித் ரசிகர்களை கலாய்த்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. ஆனால் ஒரு நான்கு நாள்கள் கழித்து அதே ‘விவேகம்’ படத்தை தியேட்டரில் பார்த்தபோது பெரிய ஏமாற்றமெல்லாம் இல்லை. ஓவர் எதிர்பார்ப்பில் சென்ற ரசிகர்களுக்கும், ஓவர் லாஜிக் பார்க்கும் உலக சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்காமல் இருந்ததில் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் ‘’நாம கலாய்ச்ச அளவுக்கு படம் ஒன்னும் மோசமா இல்லையே’’ என ஒரு வித கில்ட்டி ஃபீலிங்கை கொடுத்த படம் ‘விவேகம்’.

அது ஸ்கூல் முடித்து காலேஜ் செல்லும் பருவம் என்பதால் ஓரளவுக்கு மெச்சூர்ட் ஆக தொடங்கியிருந்த நேரம். அந்த நேரத்தில் இந்த ‘விவேகம்’ குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டதால் அஜித் படங்களை கலாய்க்கும் மனோபாவத்திற்கு அத்தோடு டாட். ஒரு சினிமா விரும்பியாக இப்போது அஜித் படங்களையும் ஒரு பொதுப்படையான ரசிகனாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டுமே முதல் நாளே அஜித் ரசிகர்கள் நிரம்பிய ஹவுஸ்ஃபுல் தியேட்டரில் பார்த்த படங்கள்.

அஜித் - ரஜினி

‘நேர்கொண்ட பார்வை’யில் பரத் சுப்ரமணியம் என்ற வக்கீல் கேரக்டரில் அஜித்தை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. விஜய்யை ‘நண்பன்’ படத்தில் வித்தியாசமாகப் பார்த்தபோது வந்த ஒரு வாவ் ஃபீல அஜித்தை வக்கீலாக பார்த்தபோதும் வந்தது. 2019 -ம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனான ‘விஸ்வாசம்’ போன்றதொரு மாஸ் படத்தை கொடுத்துவிட்டு அடுத்த படமே இவ்வளவு சட்டிலாக அண்டர்ப்ளே செய்யும் கேரக்டருக்கு அஜித் ஒப்புக்கொண்டதே ஆச்சர்யம்தான். ‘நேர்கொண்ட பார்வை’ மட்டுமல்ல அஜித்தின் ஒட்டுமொத்த சினிமா கரியரை ஒரு பார்வை பார்த்தாலும் பல ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கும்.

படத்துக்கு சரியான ப்ரோமஷன், ஆடியோ லான்ச், பிரஸ் மீட், ரசிகர்களுடன் மீட் அப் என எதுவும் இல்லாமல் கல்லா கட்டும் அஜித் படங்கள் எல்லாமே ஒரு ஆச்சர்யம்தான். இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியை தவிர இளம் நடிகர்கள் மத்தியில் பெரிய போட்டி கிடையாது. காரணம், இப்போதைய தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் சொற்பம்தான். ஆனால் அஜித்-விஜய் அறிமுகமான காலத்தில் ரஜினி-கமல்-விஜயகாந்த் என டாப் லிஸ்ட்டில் ஒரு போட்டி இருந்தால் அடுத்து கார்த்திக்-சரத்குமார்-பிரபு என அடுத்தகட்டத்தில் ஒரு போட்டி இருக்கும். இவர்களைத் தாண்டியும் பல இரண்டாம் கட்ட ஹீரோக்கள். அவர்களுக்கும் அடுத்த லெவலில் ப்ரஷாந்த்-அருண்விஜய்-அரவிந்த் சாமி என இன்னும் பல பேர்.

அப்போது மக்களுக்கு சாய்ஸ் அதிகம் இருந்தது. மக்களுக்கான இந்த சாய்ஸ்தான் இன்றைய தமிழ் சினிமாவுக்கும் 90-களின் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான வித்தியாசம். கொஞ்சம் சறுக்கினாலும் அடுத்தவாரம் ரிலீஸ் ஆகும் ஹிட் படத்தின் ஹீரோவிடம் தன்னுடைய இடத்தை பறிகொடுக்க வேண்டியிருக்கும். இப்படியான சூழலில் திரை பின்னணி எதுவும் இல்லாமல் 90-களின் தொடக்கத்தில் அஜித் ஹீரோவாகி நிலைத்து நின்றதே ஆச்சர்யம்தான்.

இந்த ஆச்சர்யத்துக்கு பின்னால் பல வலிகளும் நெவர் எவர் கிவ் அப் எமோஷன்களும் ஒளிந்திருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் ஒருமுறை படங்கள் எதுவும் இல்லாமல் அஜித் நின்றபோது அவருடைய நண்பர் ஒருவர், ‘’அஜித் நீங்க சின்னத்திரைக்கு வந்திடுங்க… அங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கு… சம்பளமும் நல்ல முறையில் இருக்கும்’’ என ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறார். அதற்கு 'ஐ வில் மேக் இட் ஒன் டே. டோன்ட் வொர்ரி' என சிம்பிளாக அதேநேரத்தில் வலிமையான நம்பிக்கையுடன் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் அஜித்.

விஜய்யிடம் எப்போது அவருடைய 'நண்பர்' அஜித் குறித்து கேட்டாலும், 'தன்னம்பிக்கை' என ஒற்றை வார்த்தையில் யோசிக்காமல் சொல்வார். விஜய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நம்பிக்கையும்-தன்னம்பிக்கையும்தான் அஜித்தின் வின்னிங் ஃபார்முலா.

அஜித்

‘வாலி’யின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீதும், ‘மங்காத்தா’வின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மீதும் அஜித் வைத்தது நம்பிக்கையின் உச்சபட்சம். ‘வாலி’யெல்லாம் கத்தி மீது நடப்பது போன்ற சப்ஜெக்ட். அதை ஏற்றுக்கொள்வதற்கே தனி நம்பிக்கையும் தைரியமும் வேண்டும். அந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் எசகுபிசகாக போயிருந்தாலும் அது படத்தின் வெற்றி தோல்வியை தாண்டி அஜித்தின் இமேஜிற்கே பெரிய நெகட்டிவாக மாறியிருக்கும். ‘மங்காத்தா’ 50-வது படம் வேறு. ஆனால், அஜித் இயக்குநர்கள் மீது வைத்த அந்த நம்பிக்கை ஜெயித்தது. அஜித் ரசிகர்களுக்கு ‘துப்பாக்கி’ எப்படியோ அப்படித்தான் விஜய் ரசிகர்களுக்கு ‘மங்காத்தா’. இந்தப்படத்தின் அந்த இன்டர்வெல் சீன் எல்லாம் வேற லெவல் கூஸ்பம்ப் மொமன்ட்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே இந்த இரு துருவ ஹீரோ மோதல்கள் இருக்கவே செய்துள்ளது. எம்.ஜி.ஆர் வெகுஜனத்திற்காக படம் நடித்தால் சிவாஜி நடிப்புக்காகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். அடுத்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினி அப்படியே எம்.ஜி.ஆர் ஸ்டைல். கமல் அப்படியே சிவாஜி ஸ்டைல். அடுத்தத்தலைமுறையில் விஜய் அப்படியே எம்.ஜி.ஆர் - ரஜினி ஸ்டைல்களின் நீட்சியில் தன்னுடைய பாணியை சேர்த்து தனி ரூட் பிடித்தார். ஆனால், அஜித்தை கமலின் நீட்சியென்றோ ரஜினியின் நீட்சியென்றோ சொல்லிவிட முடியாது.

ரஜினி ஸ்டைல் ஹீரோவாக இருந்திருந்தால் ‘மங்காத்தா’வும் - ‘நேர்கொண்ட பார்வை’யும் சாத்தியமில்லாமல் போயிருக்கும். அதே கமலை பின்பற்றியிருந்தால் இந்த டிகேடில் வெளியான அஜித்தின் 'வீ' சீரிஸ் படங்கள் எல்லாம் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. ‘’அஜித்துக்குள்ள ஒரு ரஜினியும் இருக்காரு, கமலும் இருக்காரு. ஒரு எம்.ஜி.ஆர் - சிவாஜியும் இருக்காரு’’ இது விமர்சகர் யூகி சேது சொன்னது. இதுதான் ’வில்லன்’ கதை உருவாவதற்கு மூலமாக இருந்த ஒன்லைன். அஜித்தால் கோட் சூட் போட்டு ‘பில்லா’வாக தன்னை ஒரு வேர்ல்ட் க்ளாஸ் நடிகராகவும், வேட்டி சட்டையில் நம்மூர் தூக்குத்துரையாக மாஸ் காட்டவும் முடியும்.

அஜித்

‘நான் கடவுள்’, ‘நந்தா’, ‘கஜினி’ மாதிரியான படங்கள் அஜித்தின் கையைவிட்டு சென்ற படங்கள். இதில் எல்லாம் நடித்திருந்தால் அஜித்குமார் என்னும் நடிகர் இன்னும் அழுத்தமாக அடையாளப்பட்டிருப்பார். வெளியே இருந்து பார்ப்பதற்கு நமக்கு இப்படி தோன்றினாலும் ‘’நாம சாப்புடுற அரிசில நம்ம பெயர் எழுதியிருக்கும்’’ என்பதை நம்பும் அஜித்துக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே.

நடிகர்கள் அரசியல் சர்ச்சைகளில் அதிகம் சிக்கும் சீசன் என்பதால் அஜித்தின் அரசியல் குறித்து பேசாமல் விட்டால் தப்பாகிவிடும். தன்னுடைய அதிகபட்ச அரசியல் பங்களிப்பே சாமானியனாக வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதுதான் என்பதை அஜித் தெள்ளத்தெளிவாக்கி விட்டாலும் இன்றைக்கும் அதிமுக-வில் அம்மாவுக்குப் பிறகு அஜித்தான், கருப்பு சிவப்பு மாஸ்க் போட்டு திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார் போன்ற ஏலியன் லெவல் மீம்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் குறித்து ஒரு பேட்டியில் இப்படி கூறியிருந்தார் அஜித். ‘’சினிமா என் தொழில். அதுதான் எனக்கு நல்லா தெரியும். அரசியல் எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்துல இறங்கி நானும் குழம்பி என்னை நம்பியிருக்குறவங்களையும் குழப்ப விரும்பல.’’ இந்த நெத்தியடி பதிலும் நேர்மையான பக்குவமும்தான் அஜித் மீது பெரிய மரியாதையை உண்டாக்குகிறது. அரசியல் விஷயத்தில் இன்றைக்கு வரைக்கும் இதுதான் அஜித்தின் நிலைப்பாடு. 'வாழு வாழ விடு' இதுதான் அவரின் அரசியல் ரூட்.

விஜய் - அஜித்

இந்த கட்டுரையை விஜய் ரசிகராக எழுத ஆரம்பித்து ‘விவேகம்’ பட விவேக் ஓபராய் ஆவி உடம்புக்குள் புகுந்தது போல அஜித்தை புகழ்ந்து பேசியிருப்பேன். விஜய் ரசிகன் அஜித்தை புகழ்ந்து பேசக்கூடாதா? விஜய் இல்லையேல் அஜித்தின் மீது இவ்வளவு அன்பும், அஜித் இல்லையேல் விஜய்யின் மீது இவ்வளவு பற்றும் உண்டாகியிருக்காது. இருவரின் வெற்றிக்குப பின்னாலும் மற்றொருவர் கொடுத்த ஆரோக்கியமான போட்டி காரணமாக இருந்திருக்கிறது. விஜய்யின் வெற்றிக்கு உதவிய அஜித்தை விஜய் ரசிகனுக்கும், அஜித்தின் வெற்றிக்கு உதவிய விஜய்யை அஜித் ரசிகனுக்கும் பிடிக்காமல் இருக்குமா என்ன?

'நண்பர்' அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

ஃப்ரெண்ட்ஸா நின்னா பவர்ஃபுல் மாப்பி!



source https://cinema.vikatan.com/tamil-cinema/how-ajith-and-vijay-helped-each-other-in-film-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக