Ad

சனி, 20 மார்ச், 2021

கரூர்: `நிர்வாணமாகத்தான் வேட்புமனுத் தாக்கல் செய்வோம்!’ - நூதனமாக எதிர்ப்பைப் பதிவுசெய்த விவசாயிகள்

விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், அரவக்குறிச்சி தொகுதியில் விவசாயி ஒருவர் முழுநிர்வாண கோலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கைதான அய்யாக்கண்ணு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில், அரை நிர்வாணமாக, வேட்பு மனுத் தாக்கல் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தனர். இந்தநிலையில், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் வந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், வேட்புமனுத் தாக்கல் செய்யத் தயாராகினர். அப்போது, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விவசாய சங்க வேட்பாளர், பள்ளப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு, முழு நிர்வாணமாக நிற்க, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை உடை அணிந்து உள்ளே செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு அய்யாக்கண்ணு மறுப்பு தெரிவிக்க, ராஜேந்திரன், அய்யாக்கண்ணு உள்ளிட்டவர்களை கைதுசெய்த போலீஸார், வாகனத்தில் ஏற்றி, தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கைதான அய்யாக்கண்ணு

இது குறித்து பேசிய அய்யாக்கண்ணு, ``கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அமித் ஷா, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் எங்கள் மக்கள் பத்து பேரை டெல்லிக்கு அழைச்சுட்டுபோய் பேசினாங்க. 'எல்லா விவசாயிகளுக்கும் வருடம் ரூ. 6,000 பென்ஷன் தர்றோம். 5 லட்சம் ஏக்கர்ல சாகுபடி செய்த கர்நாடகா, இப்போது 35 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி பண்ணுது. அதனால், காவிரியில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அதனால், கோதாவரியில் வீணாகப் போகிற 2,000 டி.எம்.சி தண்ணீரைத் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கிறோம். அதற்குப் பணம் ஒதுக்குறோம்னு சொன்னாங்க. ஆனா, இதுவரை பணம் ஒதுக்கலை. `இரண்டு மடங்கு லாபம் தரும் விலையை விவசாயிகளுக்குத் தருவேன்னு’ மோடி சொன்னார். அன்னிக்கு நெல் கிலோ ரூ. 18 வித்துச்சு. இரண்டு மடங்குன்னா, கிலோவுக்கு ரூ. 54 தந்திருக்கணும். ஆனால், இன்னைய வரைக்கும் வெறும் 88 பைசாதான் ஏத்திக் கொடுத்திருக்கிறார்.

அதேபோல், கரும்பு அன்று டன் ரூ.2,700-னு இருந்துச்சு. இரண்டு மடங்குன்னா, ரூ.8,100 தந்திருக்கணும். ஆனா, வெறும் ரூ.150-தான் ஏத்தியிருக்கிறார். அதேபோல், நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. `விவசாயிகளுக்கு 3-ல் இருந்து 5 லட்சம் வரை வட்டியில்லாத கடன் தருகிறோம், அதை அஞ்சு வருஷம் கழிச்சுக் கட்டினால் போதும்னு சொன்னார். 'சரி'னு சொன்னோம். ஆனால், செய்யலை. 'மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய மாட்டோம்'னு சொன்னார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் விளைந்த கத்திரிக்காயைச் சாப்பிட்டால், மலட்டுத்தன்மை ஏற்படும். ஆனால், அந்த விதைகளை இறக்குமதி பண்ணிட்டாங்க. மூன்று சட்ட மசோதாக்களை ரத்து செய்யச் சொன்னா, செய்யவில்லை. விவசாயிகளுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றலை.

கைதான அய்யாக்கண்ணு

விவசாயிகள் என்றால், இந்த நாட்டின் அடிமைகளா இல்லை பிச்சைக்காரர்களா?. எங்களை வாழவிடுங்கள். விவசாயிகள் நல்லா இருந்தாத்தான், வருங்கால சந்ததி நல்லா இருக்கும். அப்படி, எல்லாரும் நல்லா இருக்கணும்னுதான் போராடுறோம். எங்களுடைய எதிர்ப்பைக் காட்டத்தான், அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட, அரை நிர்வாணத்தோடு வேட்புமனுத் தாக்கல் செய்யப்போறோம்னு பத்து நாளா சொல்லிக்கிட்டு இருக்கிறோம். முதல்ல, வேட்டி சட்டை இல்லாமல், கோவணத்தோடு வேட்புமனுத் தாக்கல் செய்யறதாச் சொன்னோம். பிறகு கோவணத்தையும் உருவிக்கிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய இருந்தோம். ஆனால், அதற்குள் காவல்துறை எங்களைக் கைதுசெய்துட்டாங்க.

Also Read: மணல் அள்ள அனுமதி; கமலின் விமர்சனம் `அரைவேக்காட்டு பேச்சு’ என செந்தில் பாலாஜி பதிலடி

60 கிலோ நெல் மூட்டை ரூ.40-க்கு விக்கும்போது, எம்.எல்.ஏ சம்பளம் ரூ.70. ஆனால், இன்னிக்கு நெல் ரூ.1,100-தான். அதுலயும் 100 ரூபாயை லஞ்சமா எடுத்துக்குறாங்க. இப்போ ஒரு எம்.எல்.ஏ-வுக்கு சம்பளம் ரூ.1,05,000. அன்னிக்கு பேங்க் மேனேஜருக்கு ரூ.150 சம்பளம். இன்னிக்கு ரூ.1,20,000 சம்பளம். ஆனா, விவசாயிகளைத்தான் கண்டுக்க மாட்டேங்குறாங்க. எங்களைத் தேர்தலில் போட்டியிடக்கூட அனுமதிக்க மறுக்கிறாங்க.

கைதான அய்யாக்கண்ணு

நாங்க யாருக்கும் எதிரானவங்க இல்லை. எங்க பிரச்னைக்காக நாங்க போராடுறோம். எங்க உரிமைக்காக, எங்களை நாங்களே பாதுகாக்க வீதியில் இறங்குறோம். அதற்கு அனுமதி தர மறுத்தா, ஊர் ஊராகப் போய் ரோடு ரோடாக நிர்வாணமாக உருள்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/election/farmers-try-to-file-nomination-in-nude

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக