Ad

திங்கள், 1 மார்ச், 2021

கோவிட்-19: பதஞ்சலி மருந்துக்கு மட்டும் அனுமதியா? கேள்வி எழுப்பும் திருத்தணிகாசலம்

பதஞ்சலி நிறுவனத்தின் `கொரோனில்' மருந்தை விற்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவிட்-19 தொற்று ஆதரவு சிகிச்சைக்கான மருந்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்ற வகையின் கீழ் இதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

`கொரோனில்' நேரடியாக கொரோனாவை குணப்படுத்தா விடினும், நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய தரக் கட்டுப்பாடு அமைப்பின் ஆயுஷ் பிரிவில் இந்த மருந்துக்கான தயாரிப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் பதஞ்சலி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

corona

பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம் தேவ், கொரோனில் செயல்திறன் பற்றிய ஆய்வறிக்கையை உள்ளடக்கிய ஆவணங்களுடன் ஒரு கையேட்டை வெளியிட்டார். இந்த நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

``நவீன அறிவியல் செயல்முறைகளைப் பின்பற்றி ஆய்வுகள் அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டு ஆயுர்வேத மருத்துவத்தை முறைப்படுத்துகிறோம்" என ராம் தேவ் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் ஹர்ஷ்வர்தன், ``பிரிட்டிஷ் காலத்திலேயே ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆயுர்வேதத்தின் திறன் வெளிப்பட்ட போதிலும் சுதந்திரத்துக்குப் பின்னர்தான் ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கியூபா, பங்களாதேஷ், சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக உள்ளது. ஆண்டுக்கு 15 முதல் 20% வரை வளர்ந்து கொண்டிருந்த ரூ.30,000 கோடி மதிப்பிலான ஆயுர்வேதத்துறை, 50 முதல் 90 சதவிகிதமாக வளர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட கொரோனில் மருந்தை உட்கொண்டால் ஏழு நாள்களில் கொரோனாவைக் குணப்படுத்தலாம் என்ற அறிக்கையுடன் மருந்தை அறிமுகப்படுத்தியது பதஞ்சலி. ஆனால், ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலியின் `கொரோனில்' நோயைக் குணப்படுத்தும் மருந்து என்று விற்பனை செய்வதைத் தடை செய்தது. மேலும், மருந்தை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியது.

COVID-19 Vaccines

Also Read: "அறமா அமைச்சர்களே?!"- பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தும், சர்ச்சைகளும்!

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கியது. அதில் ஆயுஷ் அமைச்சகத்தால் உறுதிப்படுத்தும் வரை நோயைக் குணப்படுத்தும் மருந்து என இதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியது. ஆனால், மத்திய அரசின் மத்திய தரக் கட்டுப்பாடு சான்றிதழின்படி இந்த மருந்தை 158 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்ததையும் தெரிவித்திருந்தது.

போதிய ஆதாரங்களில்லாமல் இதுபோன்ற மருந்துகளுக்கு அனுமதியளித்தது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அறிவியலுக்குப் புறம்பான மருந்துகளை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டிய அரசே, அவர்களோடு கைகோத்து அதை ஊக்குவிப்பதை நிச்சயம் ஏற்க முடியாது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக சமுக வலைதளங்களில் பேசிவந்த திருத்தணிகாசலம் தமிழக அரசால் கைது செய்யப்பட்டார். ஆனால், இப்போது அதேபோன்ற ஒரு மருந்தை விற்க மத்திய அரசே ஊக்குவிக்கிறது என்பது எத்தகைய முரண்? இதைப் பற்றி திருத்தணிகாசலத்திடம் பேசினோம்.

``பதஞ்சலியின் ஆயுர்வேத கொரோனில் மருந்துக்கு `ஆயுஷ் சான்றிதழ்' வழங்கியதை நான் வரவேற்கிறேன். சம்ஸ்கிருதத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது நல்ல செயல்தான். ஆனால், அதற்கு முன்பு தோன்றிய தமிழையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது.

திருத்தணிகாசலம்

Also Read: ஆயுள் எக்ஸ் கேப்சூல்; வெளிநோயாளிகளின் பட்டியல்! -திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்த பின்னணி

சித்தாவிலும் எண்ணற்ற மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தக்கூடிய வகையில் உள்ளன. அதை அரசு கருத்தில் கொண்டு சோதனை செய்து, பின் உபயோகத்துக்குக் கொண்டு வர வேண்டும். சித்த மருத்துவம் உலகம் முழுவதும் இதைப் பற்றிய கருத்தியலைக் கொண்டு சென்றது. ஆனால், தற்போது எனது உரிமத்தை ரத்து செய்துள்ளார்கள். எனக்கு கொடுக்காவிடினும் சித்த மருத்துவத்தை முன்வைக்கும் மற்ற மருத்துவர்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். தடுப்பூசிகளுக்கு ரூ. 35,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கபசுர குடிநீருக்கு 3 கோடிகூட ஒதுக்கவில்லை. தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் கொரோனா இன்னும் குறைந்தபாடில்லை. ஆனால், அரசே `கபசுர குடிநீர்' நோயைக் கட்டுப்படுத்தும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவத்தைப் போலி எனக் கூறுபவர்கள் ஆயுர்வேதத்தை ஆதரிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது" என்றார்.

மக்களின் நலன் என வரும்போது அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இயங்குவதே ஒரு நல்ல அரசுக்கு அடையாளம்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/medical-experts-condemn-ayush-ministry-approval-for-coronil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக