பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் ஸ்காட்லாந்தில், நடைபெற்று வரும் `பெல் பாட்டம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் ஹியூமா குரேஷி மற்றும் லாரா தத்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் அக்ஷய்குமார், டிஸ்கவரி சேனனில் ஒளிபரப்படும் `இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸுடன் கலந்து கொண்டார். கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சில தினங்களுக்கு முன் அதன் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. அதில் யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரை பியர் க்ரில்ஸ் கொடுக்க அதை அக்ஷய்குமார் அருந்துகிறார்.
இன்ஸ்டாகிராம் நேரலை உரையாடலின்போது, இதுகுறித்து அக்ஷய்குமாரிடம் ஹியூமா குரேஷி கேட்ட கேள்விக்கு ``எனக்கு அது பெரிய அளவில் சிரமமாக இல்லை. ஏனெனில் ஆயுர்வேத காரணங்களுக்காக நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன். எனவே யானைக் கழிவில் உருவாக்கப்பட்ட தேநீரைக் குடித்தது எனக்குச் சுலபமாகவே இருந்தது" என்று பதிலளித்துள்ளார்.
பசுவின் சிறுநீர் பஞ்சகவ்ய ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ குணமிக்க பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் பசுவின் சிறுநீரை அருந்துவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்து சுரபி கோசாலையின் நிறுவனரான சுவாமி ஆத்மானந்தாவிடம் கேட்டோம்.
``பசுவின் சிறுநீரைக் குறிக்க நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் `கோமியம் (கோமயம்)' என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் பசுவின் சாணத்தைக் குறிக்கும். `கோமூத்திரா' என்பதுதான் பசுவின் சிறுநீரைக் குறிக்கும் வார்த்தை. இதனைக் கோமூத்திரம், கோஜலம், பசுவின் சிறுநீர் என்றும் குறிப்பிடலாம். ஆனால் காலங்காலமாக `கோமியம்' என்ற வார்த்தை `பசுவின் சிறுநீர்' என்ற பொருளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உடலிலிருந்து ஒருவித ஒளிக்கற்றை வெளிவருகிறது. இதனை ஆரா (aura) அல்லது ஒளிவட்டம் என்று குறிப்பிடுவார்கள். இந்த உலகத்தில் உள்ள விலங்கினங்களிலேயே நம் இந்திய பசுவினங்களின் உடலிலிருந்துதான் மிக அதிகப்படியான ஆரா வெளிவருவதாக நம்பப்படுகிறது. ஒரு பசுவின் உடலிலிருந்து வரும் இந்த ஆரா அதனைச் சுற்றிலும் 16 மீட்டர் சுற்றளவுவரை பரவுகிறது. தாவர இனங்களில் துளசி அதிகப்படியான ஆராவை வெளியிடுகின்றது. அதன் அளவு 6 மீட்டர். துளசிச்செடியைப் பெரும்பாலானோர் வீட்டில் வளர்ப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். இந்த ஆரா எனப்படும் ஒளிக்கற்றை நமக்கு ஒருவித பாசிட்டிவ் நிலையைத் தந்து நல்லெண்ணங்களை ஏற்படுத்துகிறது.
மிக அதிகப்படியான ஆராவை கொண்டுள்ளதால் பசுவின் உடலிலிருந்து வரும் கழிவுப் பொருள்கள் கூட மருத்துவ குணங்கள் மிக்கவையாக உள்ளன. பசுவின் பால் கூட அதன் உடலிலிருந்துவரும் ஒருவித கழிவுதான். ஆனால் அதனை நாம் ஆகாரமாக உட்கொள்கிறோம். அதுபோலத்தான் பசுவின் சிறுநீரும். பசுவின் சிறுநீரை வீடுகளை சுத்தப்படுத்தப் பயன்படுத்தியிருப்போம். அதுபோல நம் உடலையும் சுத்தப்படுத்த இது உதவுகிறது. பசுவின் சிறுநீர் நம் உடலில் என்ன விதமான வேதி மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியப் பசுவின் சிறுநீரின் மருத்துவகுணங்கள் குறித்த உண்மைகள் அறிவியல்பூர்வமான நிரூபிக்கப்பட்டு நான்கு உலகளவிய காப்புரிமைகளும் (Patent) வாங்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.
Also Read: `மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மனவேதனை அளிக்கிறது!’ - முதல்வர் பழனிசாமி #NowAtVikatan
இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடன் கேட்டபோது,
``ஆயுர்வேத மருத்துவத்தில் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, எருமை, ஒட்டகம், யானை, குதிரை, கழுதை உள்ளிட்ட எட்டுவகையான உயிரினங்களின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பசுவின் சிறுநீரும் பல்வேறு வகையான தோல்வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சருமங்களுக்கான எண்ணெய்களிலும் கோமூத்திரம் சேர்க்கப்படுகிறது. மேலும் பல ஆயுர்வேத மருந்துகளில் ஒரு பகுதியாகப் பசுவின் சிறுநீர் சேர்க்கப்படுகிறது.
பசுவின் தலைமுடி தொடங்கி, சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் சொல்கிறது. இதற்கான குறிப்புகள் `அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்ற ஆயுர்வேத நூலில் இருக்கின்றன. அந்த நூலின், `கால்-கை வலிப்பு மற்றும் பைத்தியம்’ என்ற அத்தியாயத்தில் (Epilepsy and Insanity Chapter) எழுதப்பட்டிருக்கிறது.
பசுவின் சிறுநீர் அருந்த நினைப்பவர்கள், காலையில் பசு முதல் முதலாக விடக்கூடிய கோமூத்திரத்தைச் சேகரிக்க வேண்டும். அதுவும், முதலில் வரும் சிறுநீரையும், கடைசியாக வரும் சிறுநீரையும் பயன்படுத்தக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வரக்கூடிய சிறுநீரையே பயன்படுத்த வேண்டும். கோமூத்திரத்தைப் பிடிக்கக் கூடிய பாத்திரம் செம்பு, பித்தளையில் செய்ததாக இருக்கக் கூடாது. ஏனெனில் கோமூத்திரத்தில் உள்ள வேதிச் சத்துக்கள் செம்பு, பித்தளையுடன் சேர்ந்து வினை புரிய வாய்ப்புள்ளது. அதனால் இதனை மண்ணால் செய்த பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்வது நல்லது.
இப்படிச் சேகரிக்கப்பட்ட கோமூத்திரத்தை அப்படியே அருந்துவதை விட எட்டு மடிப்புகளாக மடிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நல்லது. மருந்தாகப் பயன்படுத்தப்படும் கோமூத்திரம் இரட்டை வடிகட்டுதல் (Double Distillation) முறை மூலம் சுத்திகரிக்கப்பட்டு அர்கம் (Arka) என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தப்படும் கோமூத்திரம், அதிக உஷ்ணம் (அதிக சூடு) உடையது. அதனால் வாய்ப்புண், வயிற்றுப்புண், அல்சர்போன்ற பிரச்னை உள்ளவர்கள் இதனை அருந்தக் கூடாது. உடல் சூடு அதிகம் உள்ளவர்களும் இதனை மருந்தாகப் பயன்படுத்தக்கூடாது. அதுபோல் வெயில் அதிகமாக இருக்கும் கோடைக்காலத்திலும் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது. யாருக்கெல்லாம் கபம் (சளி) மேற்பட்டிருக்கிறதோஅவர்கள் இதனை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். பசுவின் சிறுநீர் அல்லது அது சேர்க்கப்பட்ட மருந்தை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே இதனை எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்கவும்" என்றார்.
source https://www.vikatan.com/health/news/akshay-kumar-said-he-drinks-cow-urine-daily-what-ayurveda-says-about-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக