தேனி மாவட்டம் பெரியகுளம் எஸ்.பி.ஐ வங்கிக் கிளை அருகே அண்ணா சிலை உள்ளது. அமர்ந்த நிலையில், கையில் உள்ள புத்தகத்தை அண்ணா படிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையானது, பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் மேத்தா முயற்சியால் 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இச்சிலையை, அப்போதையை தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் திறந்துவைத்தார். அதனைத் தொடந்து, அண்ணா பிறந்தநாளில், அனைத்துக் கட்சியினரும் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். ஆனால், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க-வினர் மட்டும் அண்ணா சிலையை கண்டுகொள்ளாமல் நகர்ந்து விடுகின்றனர்.
Also Read: ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?
தேர்தல் நேரத்தில், பிரசாரத்தை துவங்கும் போது, மாவட்டத்தின் கன்னிமூலையில் அமைந்துள்ள ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பிரசாரத்தை துவங்குவது அ.தி.மு.க-வினரின் வழக்கம். பிரசார பயணம், பெரியகுளத்துக்குள் வரும் போது, நகரத்திற்குள் இருக்கும் அம்பேத்கர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிப்பர். இந்நிலையில், கடந்த காலங்களில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அ.தி.மு.க வேட்பாளர்கள், தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவதாக கட்சியினரிடையே ஆழமாக நம்பப்படுகிறது.
அதனால், சமீபகாலமாக, குறிப்பாக கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க வேட்பாளர்கள் யாரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை.
பெரியகுளத்தைச் சேர்ந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் கூட, தனது பிரசார நாளில், பட்டாளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, பெரியகுளம் வந்தடைந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆனால், அருகே இருந்த அண்ணா சிலையைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
Also Read: மதுரை: `பசுமாட்டைப் பிரிந்து தவித்த காளை!' - சொந்த செலவில் கோயிலுக்கு வழங்கிய ஓ.பி.எஸ் மகன்
கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சரவணக்குமார், தனது பிரசாரத்தின் போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனை விமர்சித்த அ.தி.மு.க-வினரோ, `இதுவரை தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்துகட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தேர்தலில் தோற்றுவிட்டனர். இப்போது, சரவணக்குமாரும் தேர்தலில் தோல்வியடையப் போகிறார்’ என கூறிவந்தனர். ஆனால், சரவணக்குமார் தேர்தலில் வெற்றிபெற்றார்.
`சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தால் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவார்கள் என கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டிருந்த அ.தி.மு.க-வினருக்கு தக்க பதிலடியாக இந்த சம்பவம் அமைந்தது’ என்றனர் தி.மு.க தரப்பில்.
Also Read: தேனி: `சுடுகாட்டில் இருப்பதும் நல்லதுதான்!' - ஓ.பி.எஸ் சொன்ன விளக்கம்
இதுதொடர்பாக தி.மு.க நிர்வாகிகள்,``அவர்களின் கட்சிப் பெயரிலேயே அண்ணாவை வைத்துக் கொண்டு, அண்ணா சிலையைப் பார்த்து பயப்படுகிறார்கள். வேடிக்கையாக உள்ளது” என்று கமென்ட் அடிக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது அ.தி.மு.க-வினர், பெரியகுளத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பார்களா? இல்லை…. மீண்டும் அண்ணா சிலை ஆபத்து என ஒதுங்கிக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
source https://www.vikatan.com/news/politics/periyakulam-admks-anna-statue-sentiment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக