Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

குமரி: `இப்போதும் அரசு காரை பயன்படுத்துகிறார்!' - அதிமுக கூட்டுறவு ஒன்றிய தலைவர் தகுதி நீக்க சர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளரான கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும் உள்ளார். கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர் தனியாக பைனான்ஸ் நடத்தக்கூடாது என விதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகுமார், பாலாஜி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருவதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆரல்வாய்மொழி பேரூராட்சி ம.தி.மு.க செயலாளர் முருகேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த் முருகேசன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்படும் கூடுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு கடன் சங்க தலைவரான கிருஷ்ணகுமார் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் பாலாஜி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். எனவே இவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என புகார் அளித்திருந்தேன்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீங்கள் அவரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார்

இதுகுறித்து முருகேசன் நம்மிடம் கூறுகையில், ``அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார். அவர் சங்க சட்ட திட்டங்களுக்கு எதிராக பாலாஜி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்துகிறார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை புதிதாக சேர்த்துள்ளார். உண்மையான விவசாயிகள் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து மதுரை கோர்ட்டில் நான் வழக்குத் தொடர்ந்தேன்.

அந்த வழக்கில் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்து கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 03.09.2020 அன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இப்போதும் அரசு காரை பயன்படுத்துகிறார். கூட்டுறவு வங்கிக்கு வழக்கம்போல வந்து செல்கிறார்.

கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் புகார்

எனவே அவரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இனியும் அவரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவேன். நானும் ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். அந்த கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளை சரிபார்க்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகளுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் முறையாக சென்று சேரவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/complaint-against-cooperative-head-in-kumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக