சென்னையை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவரின் மனைவி கீர்த்திகா (18). கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற அஜித்குமார், பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கோலடியை அடுத்த ஸ்ரீ அபிராமிநகர் அருகில் உள்ள முட்புதரில் அஜித்குமார் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக திருவேற்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார், அஜித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமார் மரணம் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அஜித்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் நண்பர்தான் லால். திருவேற்காடு காவல் நிலையத்தில் லால் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் லாலுடன் சேர்ந்து அஜித்குமார் கஞ்சா விற்று வந்துள்ளார். லாலுவை எதிர்த்து அஜித்குமார், தனியாக கஞ்சா விற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதில், ஏற்பட்ட தகராறில் அஜித்குமாரைக் கொலை செய்ய லால் திட்டமிட்டுள்ளார். அதன்படி மது அருந்த அஜித்குமாரை அழைத்துச் சென்று இளநீர் வெட்டப் பயன்படுத்தப்படும் அரிவாளால் அவரைக் வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக லால் (என்ற) பிரகாஷ் (24), ஆகாஷ்(22), குணசேகரன்(20), காத்தவராயன் (27) ஆகியோரைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.
அஜித்குமாரின் மனைவி கீர்த்திகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என் கணவர் அஜித்குமார் கூலி வேலை செய்து வந்தார். நாங்கள் இருவரும் காதலித்து ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். நான் எனது கணவருக்கு 2-வது மனைவி. தற்போது நான் 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். என் கணவர் மீது பல கேஸ்கள் உள்ளன. அதனால் ஜெயிலுக்கு அடிக்கடி சென்று வருவார். சிறையிலிருக்கும் போது லாலுடன் என் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. `சமீபகாலமாக லால் அடிக்கடி என்னிடம் பிரச்னை செய்கிறான்’ என என் கணவர் என்னிடம் சொல்லிவந்தார்.
Also Read: சென்னை: ஆயிரம் ரூபாய்க்காக நடந்த கொலை! - துப்பு துலங்கிய பின்னணி
கடந்த 12-ம் தேதி, `லால் என்னைக் கூப்பிடுகிறான். ஏதோ வேலை இருக்கிறது’ என சொல்லிவிட்டு காலை 7.30 மணிக்கு வீட்டை விட்டு சென்றார். பின்னர் ஸ்ரீஅபிராமி நகரில் லால் மற்றும் சிலருடன் என் கணவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு நடந்த தகராறில் என் கணவரை லால் மற்றும் சிலர் வெட்டி கொலை செய்து விட்டதாக கிடைத்த தகவலின்பேரில் நான் என் மாமியாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றேன். அங்கு என் கணவரின் தலை முகம், கை, கால் ஆகிய இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். எனவே, என் கணவரை வெட்டி கொலை செய்த லால் மற்றும் அவரின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகிகேறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவேற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் யார் பெரிய ஆள் என்ற மோதலில் இந்தக் கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/youth-murdered-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக