நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் இன்றைய நாளின் விசேஷம் குறித்த செய்திகள் பரவி வருகின்றன. அனைத்துகிரகங்களும் தங்களின் சொந்த வீட்டில் இருக்கும் மங்களகரமான முகூர்த்தம் அமைவதாகவும் இந்த வேளையில் இறைவழிபாடு செய்வது மிகவும் விசேஷம் என்று அந்த செய்திகள் சொல்கின்றன. பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாகச் சொல்லப்படும் இந்த அபூர்வ நிகழ்வு குறித்து வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகளிடம் கேட்டோம்.
“அந்தத் தகவல் உண்மைதான். இன்று தனகாரகனான குருபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவான் மகரராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவான் மேஷராசியில் சஞ்சரிக்கிறார். புதபகவான் கன்னி ராசியிலும் சந்திரபகவான் கடகராசியிலும் சஞ்சரிக்க இருக்கிறார். சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் சுக்கிரனைத் தவிர மற்ற 6 கிரகங்களும் தங்கள் சொந்தவீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். சுக்கிரன் சொந்தவீட்டில் இல்லை என்றாலும் சனிபகவானின் பார்வையைப் பெறுவதால் அவரும் வலிமை மிக்கவராகவே அமர்கிறார். ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடுகள் இல்லை.
இன்று தனுசுலக்னம் 12 மணி முதல் 1.30 வரை அமைகிறது. இந்த வேளையில் குறிப்பாக 13.09 மணிக்கு நல்லநேரம் வாய்க்கிறது. இந்த நேரம் மிகவும் சுபமுகூர்த்த நேரமாகக் கணக்கிடப்படுகிறது. இந்த வேளையில் செய்யும் இறைவழிபாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக சூரியபகவான் ஆட்சிபலம் பெற்று அமர்ந்திருக்கும் இந்த வேளையில் இறைவழிபாடு செய்வதன்மூலம் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடலாம். மேலும் எதிரிகளால் தொல்லை, கடன் பிரச்னை, வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களின் நோய்தொடர்பான தொந்தரவுகள் ஆகியனவும் விலகும். இந்த வேளையில் அவரவர் வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடும் நாராயண வழிபாடும் செய்வது நல்லது. கோளறுபதிகம், சிவபுராணம், ஸ்ரீ ருத்ர ஜபம், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியன பாடி இறைவனை இந்த நேரத்தில் வழிபட்டால் தடைகள் யாவும் அகலும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்” என்று சொன்னார் வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
சமூக ஊடகங்களில் சில ஜோதிடர்கள் விருச்சிக லக்னமான 10.45 முதல் 12 மணி வரையிலான நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அதுவும் வீட்டில் இருந்தபடியே செய்யும் வழிபாடுகள் என்பதால் இரண்டு லக்னங்களிலும் இறைவனை வழிபாடு செய்து திருவருளும் குருவருளும் வாய்க்கப்பெறுவோம்.
source https://www.vikatan.com/spiritual/astrology/a-very-rare-auspicious-time-to-worship-the-gods-today
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக