நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டாவது முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 55 வயதான அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குர்காவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14-ல் ட்விட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவில், மருத்துவமனையில் இருந்து தாம் வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் சில நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
Also Read: தோனி-அமித் ஷா சந்திப்பு... ஜெய் ஷா தலையீடு... - தோனி ஓய்வில் அரசியல் இருக்கிறதா?
ஆனால், திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் கடுமையான உடல் வலி ஆகியவை ஏற்படவே அமித் ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாள்களுக்கு மேல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் ஆகஸ்ட் 30-ல் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் ஏற்படும் பாதிப்புகளால் அவதியுற்று வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, குணமடைந்து விட்டதாகவும் விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 31-ல் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வீட்டிலிருந்தபடியே தனது பணிகளை அமித் ஷா மேற்கொண்டு வந்தநிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அமித் ஷா கூறிய நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்ற முடிவை குடும்பத்தினர் எடுத்ததாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கொரோனா பாதிப்பால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதால், மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதே சிறந்தது என குடும்பத்தினர் கருதியதாகவும் சொல்கிறார்கள்.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு 11 மணியளவில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விவிஐபி-க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கார்டியோ நியூரோ டவர் பகுதியில் உள்ள வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியாவின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அதேபோல், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காகவே அமித் ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒன்றிரண்டு நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து முழுமையாக உடல் பரிசோதனை செய்துகொண்ட பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan
கட்டாய முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நடைமுறைகளோடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. மொத்தமுள்ள 785 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 200-க்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டோர். தற்போதைய சூழலில், ஏழுக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில், அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/hm-amit-shah-admitted-to-delhi-aiims-after-uneasiness-in-breathing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக