Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

Rachin Ravindra: `சிங்கம் மாதிரி துணிச்சலா ஒரு ஆளு!' - இங்கிலாந்தை மிரளவைத்த ரச்சினின் பின்னணி!

'உலகக்கோப்பைகளில் அதிகமாக சீனியர் வீரர்களைப் பற்றியும் அவர்களின் சாதனைகளைப் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் ஒன்றை மறந்துவிடாதீர்கள். உலகக்கோப்பைகள் புதிய புதிய ஹீரோக்கள் உருவாவதற்கான உகந்த களம்..'

இப்படியாக வர்ணனையில் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருந்த போதே மைதானத்தில் கூடியிருந்த 40000 ரசிகர்களுக்கு முன்பாக ஒரு புதிய நாயகன் அவதரித்து நின்றான். கணநேரத்தில் 'New Hero of Newzealand...' என ப்ளாக் கேப்ஸ் ரசிகர்கள் அவனுக்கு மணிமகுடம் சூட்ட தொடங்கினர்.

Rachin
'Such a Sparkling Innings...' என தனது வசீகரமான குரலில் தோரணையான ஆங்கில உச்சரிப்பில் அந்த இளம் நாயகனை இன்னும் இரண்டடி காற்றில் பறக்க வைத்தார் ரவிசாஸ்திரி.

'ரச்சின் ரவீந்திரா' எதுகை மோனையாக உச்சரிப்புக்கு லாவகமாக இருக்கும் இந்தப் பெயரைத்தான் கிரிக்கெட் உலகம் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. காரணம், உலகக்கோப்பையின் அறிமுகத்திலேயே இங்கிலாந்துக்கு எதிராக அவர் செய்திருக்கும் சம்பவம்.

Rachin

'எங்களை டிஃபண்டிங் சாம்பியன் என்று கூட சொல்லாதீர்கள். அதில் கூட டிஃபன்ஸ் இருப்பதை நாங்கள் விரும்பபில்லை. முழுக்க முழுக்க அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடவே விரும்புகிறோம்.' என ஜாஸ் பட்லர் டாஸிலேயே பேசியிருந்தார். அந்தளவுக்கு உக்கிரமான வேகத்தோடு இருந்தது இங்கிலாந்து. ஆனால், நீங்கள் பேசியதை நான் செயலாக செய்து காண்பிக்கிறேன் என இறங்கி அசத்தியிருக்கிறார் ரச்சின். நியூசிலாந்து அணி 283 ரன்கள் டார்கெட். நம்பர் 3 இல் இறங்கிய ரச்சின் ரவீந்திரா ஸ்ட்ரைக்கை நன்றாக ரொட்டேட் செய்து தேவையான சமயத்தில் பவுண்டரிகளையும் அடித்து 123 ரன்களை 96 பந்துகளிலேயே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 128.12. அவர் ஆடிய விதத்தை பார்க்கையில் உலகக்கோப்பையில் முதல் போட்டியில் ஆடுவதை போலவே இல்லை.

கிட்டத்தட்ட 2011 ஆம் ஆண்டின் யுவராஜை கருப்பு ஜெர்சியில் பார்ப்பதை போலத்தான் இருந்தது. சாம் கரன் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் வில் யங் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே ஓவரில் க்ரீஸூக்கு புதிதாக வந்த ரச்சின் அடுத்த 5 பந்துகளையும் டாட் ஆக்கினார். அடுத்த 2 மணி நேர பாயுதலுக்காக ரச்சின் பதுங்கிக் கொள்ள எடுத்த நேரம் வெறும் 5 நிமிடங்கள்தான். அதன்பிறகு, ரச்சினின் பேட் சுழன்ற விதம் அத்தனை அழகாக இருந்தது.

Rachin
சாம் கரனின் ஷார்ட் பால்களை மடக்கி புல் ஷாட் அடித்த விதம், க்றிஸ் வோக்ஸின் தலைக்கு மேலேயே அடித்த சிக்சர், ஸ்பின்னர்களுக்கு எதிரான அக்ரசன் என இங்கிலாந்தின் ஒவ்வொரு பௌலருக்கும் அழகியலுடன் கூடிய பதிலை பரிசாக அளித்தார் ரச்சின். மார்க் வுட்டின் 150 கி.மீ டெலிவரிகளுக்கு எதிராக ஆடிய ட்ரைவ்களை பார்த்து ஒருகட்டத்தில், 'மழை..இளையராஜா...' என்பது போல 'லெஃப்ட் ஹேண்டர்ஸ் & கவர் ட்ரைவ்ஸ்' என ஹைக்கூ கவிதைக்களை தட்டிவிட ஆரம்பித்தனர் வர்ணனையாளர்கள்.

முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள் 81 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. ஞாயப்படி உண்மையான அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடியது நியூசிலாந்து. அதிலும் குறிப்பாக ரச்சின் சுழன்றடித்தார். முதல் 10 ஓவர்கள் முடியும் போதே அரைசதத்தை நெருங்கியிருந்தார். 82 பந்துகளில் சதத்தையே எட்டிவிட்டார். 'இதுமட்டும் பாக்ஸிங் போட்டியாக இருந்திருந்தால், நடுவர்கள் எப்போதோ போட்டியை நிறுத்தியிருப்பார்கள்!' என ஹர்ஷா போக்லே ஒரு ட்வீட் செய்திருந்தார். ரச்சினும் கான்வேயும் இணைந்து இங்கிலாந்தை அந்தளவுக்கு எழவே முடியாதபடிக்கு அடித்திருந்தனர்.

ரச்சின் இந்த இன்னிங்ஸை ஆடியதற்கு பின்னால் பல சுவாரஸ்யங்கள் ஒழிந்திருக்கிறது. தற்போதைய நியூசிலாந்து அணியில் ரச்சினுக்கு டாப் ஆர்டரில் வேலையே இல்லை. அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடர்களில் ஆடிய போது டாப் ஆர்டரில் ஆடியிருக்கிறாரே தவிர நியூசிலாந்தின் சீனியர் அணிக்காக ஆடியபோது டாப் ஆர்டரில் ஆடியதே இல்லை. சொல்லப்போனால் இந்த ஆண்டில்தான் ரச்சின் நியூசிலாந்தின் ஓடிஐ அணிக்கே அறிமுகமாகினர். மிஞ்சிப்போனால் 10 போட்டிகளில் ஆடியிருப்பார். இந்த உலகக்கோப்பையை ஒட்டிதான் அவரை டாப் ஆர்டரில் இறக்க முடிவெடுக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் நியூசிலாந்துக்கு 340+ டார்கெட். அந்த டார்கெட்டை நியூசிலாந்து எந்த சிரமமும் இல்லாமல் எடுத்து முடித்தது. அதற்கு காரணமாக அமைந்தது ரச்சின் ஆடிய இன்னிங்ஸ்தான். ஓப்பனிங் இறங்கிய ரச்சின் 72 பந்துகளில் 97 ரன்களை எடுத்திருந்தார். அங்கே தவறவிட்ட சதத்தைதான் இங்கே இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து அசத்தியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக நம்பர் 3 இல் இறங்கப் போகிறார் எனும் செய்தியே அவருக்கு முந்தைய நாள் மாலைதான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்தின் நம்பர் 3 தாங்கியிருக்கும் கனம் ரொம்பவே அதிகம். ஏனெனில், அது கேன் வில்லியம்சனின் இடம். மேதைமையின் உச்சத்தை அவர் அங்கேதான் வெளிக்காட்டியிருக்கிறார். அப்படியொரு இடத்தில் இளம் வீரராக வந்து உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே சாதித்திருப்பது ஆச்சர்யம்தான்.

Rachin
ரச்சினின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான். கிரிக்கெட் விரும்பியான அவருடைய தந்தை சச்சின் மற்றும் டிராவிட் இருவரின் பெயரையும் இணைத்து வைத்த பெயர்தான் ரச்சின்.
Rachin

பெயருக்குள் வரலாற்றை தாங்கி நிற்கும் ரச்சின் அந்த பெயர்களின் அடையாளத்திலிருந்து மீண்டு தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள ஆடியிருக்கும் மகத்தான அறிமுக இன்னிங்ஸ்தான் இது. 'இது ஒரு அற்புதமான நாள்!' என போட்டிக்குப் பிறகு ரச்சின் கூறியிருந்தார். அவருக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இது ஒரு அற்புதமான நாள்தான்!



source https://sports.vikatan.com/cricket/worldcup-who-is-rachin-ravindra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக