Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

Palestine: `ஒருவேளை இறந்தால், உடலை அடையாளம் காணவேண்டும்'- குழந்தைகளின் கைகளில் பெயர் எழுதும் மக்கள்!

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கிடையே அக்டோபர் 7-ம் தேதி துவங்கிய போர், தற்போது 21 நாள்களை எட்டியிருக்கிறது. இரு நாடுகளிலும் குண்டு மழை, துப்பாக்கிச்சூடு, தரைவழித் தாக்குதல், வான்வழித் தாக்குதல் எனப் பதற்றம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மக்களின் கண்ணீர் அவலங்கள் கலைந்த பாடில்லை. போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கைகளில் பெயர் எழுதும் குழந்தைகள்

இஸ்ரேலின் தாக்குதலில் 7,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகியிருக்கின்றனர். இதில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இஸ்ரேல் தாக்குதலால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உடல் சிதைந்தும், சிதறியும் உயிரிழந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் வருகைக்குப் பிறகும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. போர் நிறுத்தத்துக்கான அறிகுறிகள் ஏதுமின்றி போர் தீவிரமடைந்து வருகிறது.

போரில் அடையாளம் தெரியாமல் உயிர் இழப்பதை விரும்பாத பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளின் கைகளிலும், உள்ளங்கால் பகுதிகளிலும் அவர்களது பெயர்களை எழுதி வருகின்றனர். இது இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டால், அவர்களை அடையாளம் காண உதவும் என அவர்கள் நம்புகிறார்கள்.

தான் பெற்ற குழந்தை எப்போது வேண்டுமானாலும் உடல் சிதறி இறக்கலாம் எனத் தெரிந்து, அவர்களின் பெற்றோர் செய்யும் இது போன்ற காரியம் கேட்போர் நெஞ்சை உலுக்கிவருகிறது. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்தச் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வலைதளப் பக்கங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்திவருகின்றன.



source https://www.vikatan.com/trending/viral/palestinian-children-write-their-names-on-their-hands-so-their-bodies-can-be-identified-if-they-are-killed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக