Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

'எங்க வீட்டு சிலிண்டர்ல காஸ் கசியுது; கொஞ்சம் பாருங்களேன்!' - 2 முதியவர்களுக்கு நேர்ந்த சோகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே இருக்கிறது நரசிம்மர் சன்னதி தெரு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனலட்சுமி, பார்த்தசாரதி. அருகருகே உள்ள வீடிகளில் வசிக்கும் இந்த இரண்டு முதியவர்களும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஊழியர்களாகப் பணியாற்றிவந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று காலை தனது வீட்டில் காஸ் தீர்ந்துபோனதால், காஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் மூலம், புதிய காஸ் சிலிண்டரை மாற்றியிருக்கின்றனர். அப்போது, பார்த்தசாரதி வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி, `எங்க வீட்டுல உள்ள சிலிண்டர்ல காஸ் கசிவு இருக்கிறமாதிரி தெரியுது. அதையும் கொஞ்சம் சரிபண்ணி கொடுங்க' என்று அருண்குமாரிடம் கேட்டிருக்கிறார். இதனால், தனலட்சுமி வீட்டுக்குச் சென்ற அருண்குமார், கசிவு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட காஸ் சிலிண்டரை சோதனை செய்திருக்கிறார்.

தீ விபத்து

அப்போது, அருண்குமாரின் அருகே தனலட்சுமியும் நின்றுகொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அருண்குமார் சிலிண்டரில் காஸ் கசிவைத் தடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, இன்னும் கூடுதலாக காஸ் கசிவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

வீட்டு ஜன்னல்களும் மூடப்பட்டிருந்ததால், சிலிண்டரிலிருந்து வெளியேறிய காஸ், வீட்டுக்குள் பரவியிருக்கிறது. அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு, தீ வீடு முழுக்கப் பரவியிருக்கிறது. வீட்டில் இருந்த துணிகள், ஜன்னல் கதவுகளும் தீப்பிடித்து எரிந்திருக்கின்றன. இந்த தீவிபத்தில் சிக்கி தனலட்சுமி, அருண்குமார், பார்த்தசாரதி, அவரின் மனைவி லதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள், விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து

பின்பு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நால்வரையும் மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், தனலட்சுமியும், பார்த்தசாரதியும் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். காஸ் நிறுவன ஊழியர் அருண்குமார், பார்த்தசாரதியின் மனைவி லதா ஆகியோருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஸ் கசிவை சரிசெய்ய முயன்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/accidents/two-elder-persons-died-in-a-gas-leak-accident-in-namakkal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக