Ad

புதன், 25 அக்டோபர், 2023

சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் என்னென்ன? ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது?

கிரகணங்கள் மிகவும் முக்கியமான இயற்கை நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கிரகணங்களை ஒட்டியே இயற்கைப் பேரிடர்கள், போர் மற்றும் நோய் பரவல் ஆகியன நிகழும் என்கிற நம்பிக்கை உண்டு. எனவே உலகமும் முழுவதும் உள்ள ஜோதிடர்கள் கிரகணங்களை கணித்து அதற்கேற்பப் பலன் சொல்லும் வழக்கம் உள்ளது.

நம் தேசத்தின் ஜோதிட அடிப்படையில் கிரகணங்கள் நிகழக் காரணம் ராகு - கேது என்னும் நிழல் கிரகங்கள். இந்த நிழல் கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அது சூரிய கிரகண நாளாகவும் பௌர்ணமிச் சந்திரன் சேர்ந்திருந்தால் அது சந்திர கிரகணமாகவும் அமையும் என்கிறார்கள். அதன்படி கடந்த 14- ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதேபோல் வரும் 28- ம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.

சந்திரன்
அக்டோபர் 28-ம் தேதி இரவு (29-ம் தேதி அதிகாலை) 1.03 மணி முதல் 2.23 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. இது குறை சந்திர கிரகணமாகவே நம் நாட்டில் தெரியும். இந்த ஆண்டில் நம் நாட்டில் தெரியும் ஒரே கிரகணம் இதுதான். எனவே இந்த கிரகணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக கிரகணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே உணவு உட்கொண்டு விட வேண்டும். கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்ய வேண்டும். பித்ரு காரியம் செய்யும் கடமை உள்ளவர்கள் கிரகண வேளையில் தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரகண வேளையில் செய்யும் தர்ப்பணம் மிகுந்த புண்ணிய பலனைத் தரும்.

மேலும் கிரகண வேளையில் செய்யும் நாம ஜபம் நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். சந்திரன் மனோகாரகன். அவன் மீது நிழல் கிரகங்களின் தாக்கம் ஏற்படுவதால் உயிர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். எனவே மன வலிமை பெற நாம ஜபம் செய்வது மிகவும் அவசியம். அதேபோன்று கிரகண வேளையில் தானம் கொடுப்பதும் பன்மடங்கு பலனைக் கொடுக்கும். இந்தச் சந்திரகிரகணம் நள்ளிரவு நிகழ்வதால் அந்த நேரத்தில் தானம் கொடுக்க முடியாது. எனவே தானம் தர விரும்பும் பொருளை எடுத்துவைத்து மறுநாள் அதிகாலையில் தானம் கொடுக்கலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம்

இந்த கிரகணம் ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு தோஷம் தருவதாக அமையும் என்று சொல்கிறார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள், மறுநாள் காலை எழுந்து நீராடி சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வம் வாங்கி சமர்ப்பிப்பதும் வில்வ அர்ச்சனை செய்யச் சொல்லி தரிசனம் செய்வதும் கிரகண தோஷங்களை நீங்கச் செய்யும். மேலும் நவகிரக சந்நிதியில் தீபம் ஏற்றுவதும் நல்ல பரிகாரமாக அமையும். இந்த நட்சத்திரக்காரர்கள், மட்டைத் தேங்காயோடு நெல், நாணயங்கள் சேர்த்து தானம் செய்வது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் கிரகணப் பீடை விலகும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது?

ஐப்பசி பௌர்ணமி என்றாலே அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஐப்பசிப் பௌர்ணமியில் கிரகணம் ஏற்படுவதால் எப்போது அன்னாபிஷேகம் நடைபெறும் என்பது குறித்த குழப்பம் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

இதுகுறித்து சிவாசார்யர்கள் தரப்பில் பேசியபோது, "சந்திரகிரகணம் நள்ளிரவில்தான் ஏற்படுகிறது. எனவே மாலையே அன்னாபிஷேகம் முடித்து பிறகு நடையை சாத்திவிடலாம். குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் 7 மணிக்குள் அன்னாபிஷேகத்தை முடிப்பது சிறப்பு" என்றார்கள்.

சந்திரகிரகணம்

அன்னாபிஷேகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தஞ்சைப் பெருவுடையார் கோயில்தான். தஞ்சையில் அன்னாபிஷேக அலங்கார தரிசனம் மாலை 3 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இரவு 8 மணி அர்த்த ஜாம பூஜை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெரும்பாலான சிவாலயங்களில் இந்த நேரமே கடைப்பிடிக்கப்படலாம். சந்திரனைத் திருமுடியில் சூடிய அந்த ஈசனை அன்னாபிஷேகத் திருக்கோலத்தில் தரிசிப்பதே சகல விதமான கிரக தோஷங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் காக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.

சந்திர கிரகணத்தை ஒட்டித் திருமலை திருப்பதி கோயிலில் அக்டோபர் 28-ம் அக்டோபர் 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29 அதிகாலை 3.15 வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://www.vikatan.com/spiritual/astrology/must-know-astro-details-regarding-the-upcoming-lunar-eclipse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக