Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

கனவு -129 | `மஞ்சளிலிருந்து Facial Powder, Skin Lotion...' | ஈரோடு - வளமும் வாய்ப்பும்!

தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் சுமார் 75 சதவிகிதம் அளவுக்கு விளைச்சலைப் பெற்று, முதன்மையான மாவட்டமாகத் திகழும் ஈரோட்டின் முக்கிய வளங்களில் ஒன்றான மஞ்சளை மதிப்புக்கூட்டி, டர்மரிக் ஃபேஸியல் வாக்ஸ் (Turmeric Facial Wax) எனப்படும் முகத்துக்கான மெழுகு பவுடர், தோல் அறழ்சி நோய்க்கான லோஷன் (Skin White Patches Lotion) உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்பு (Antioxidant Properties), சருமப் பொலிவு (skin-brightening), வயதாவதைத் தடுத்தல் (anti-aging) உள்ளிட்ட பல நற்பண்புகளைக் கொண்டிருக்கிறது மஞ்சள். குறிப்பாக, பீச் ஃபஸ் (Peach Fuzz) எனப்படும் சருமத்திலுள்ள சிறிய அளவிலான முடிகளை அகற்ற இது உதவுகிறது. இதுபோல் ஏராளமான பயன்களைக் கொண்டிருக்கும் மஞ்சளைக் கொண்டு, மெழுகு பவுடரை உருவாக்கலாம். இதன் தயாரிப்பு முறையும் எளிதானதே… மஞ்சளைத் தூளாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் முல்தானி பவுடர், சந்தனம், அரிசிமாவு ஆகியவற்றைத் தேவையான அளவில் கலந்து இதனைத் தயாரிக்கலாம். இதைப் பயன்படுத்துவதும் எளிதுதான்.

மஞ்சள் மெழுகு பவுடரை ஒரு பௌலில் இட்டு, அதனுடன் பன்னீர், பால், சுத்தமான நீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து, மிக்ஸ் செய்யவேண்டும். பூசும் தன்மையில் இருக்கும் இந்தக் கலவையை கண், உதடு, நாசிகளைத் தவிர்த்து, முகத்தின் பிற இடங்களில் சரிசமமாக அப்ளை செய்யவேண்டும். சுமார் 5 நிமிடங்கள் வரை காயவைத்த பிறகு, மிருதுவான துணி அல்லது ஈரமான துவலையைக் (Wet Wipes) கொண்டு மெதுவாகத் துடைத்தெடுக்க வேண்டும். இப்போது, முகத்திலிருக்கும் மிருதுவான முடிகள் அகன்றுவிடும். இதனால், முகம் பொலிவாகவும் பளபளப்புத்தன்மையையும் பெறும் என்பதால், இதைப் பெண்கள் விரும்பி, வாங்குவார்கள். இந்த புராடக்டை மகளிர் மத்தியில் பிரபலப்படுத்த முடியும் என்பதால், டர்மரிக் ஃபேசியல் வாக்ஸ் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை ஈரோடு மாவட்டத்தில் நிறுவலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி, அந்தியூர், கோபி, பவானி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 25 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து தேவையான அளவுக்கு மஞ்சளைக் கொள்முதல் செய்து, டர்மரிக் ஃபேசியல் வாக்ஸ் தயாரித்து, 100 கிராம் எடைகொண்ட ஒரு பவுடர் பாக்கெட்டின் விலையை 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறலாம்.

மஞ்சளில் பல ரகங்கள் உண்டு. குறிப்பாக, பிடிஎஸ்-8 (PTS), பிடிஎஸ்-10 போன்ற ரகங்கள் முக்கியமானவை. இத்தகைய ரகங்களே ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சலாகின்றன. இந்த மஞ்சளுடன் வேப்பிலையைக் கலந்து, தோல் அழற்சிக்கான லோஷனைத் (Skin White Patches Lotion) தயாரிக்கலாம்.

பொதுவாக, மஞ்சளில் புரதம், நார்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சி, இரும்பு, துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper), நியாசின் (Niacin) உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுகள் நிரம்பியிருக்கின்றன. பன்னெடுங்காலமாக நோய் எதிர்ப்பு மருந்தாகவும், வெட்டுக்காயம், தீக்காயங்களை ஆற்றும் மருந்தாகவும் சித்த மருத்துவத்தில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள தாமிரம் பாக்டீரியா எதிர்ப்புப் பண்பைக் கொண்டிருக்கிறது. மேலும், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, தோலுக்கு நிறத்தைக் கூட்டுவது, வீக்கம், வாதம், தோல் நோய்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதால் இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் மஞ்சளுடன் வேப்பிலையைக் கலந்து தோல் அழற்சி நோயைத் தவிர்ப்பதற்கான லோஷனைத் தயாரிக்கலாம். அதற்கான தொழிற்சாலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரோடு மாவட்டத்தில் அமைக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் விளைச்சலாகும் மஞ்சளிலிருந்து தேவையான அளவுக்குப் பெற்று, மஞ்சள் மற்றும் வேப்பலை கலந்த தோல் அழற்சிக்கான திரவத்தைத் தயாரித்து, 50 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டிலின் விலையை 175 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் வருமானம் பெற்று, வளம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)



source https://www.vikatan.com/business/kanavu-series-by-suresh-sambandam-erode-129

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக