Ad

திங்கள், 30 அக்டோபர், 2023

Motivation Story: `அதை அவள் செய்யவில்லை'- சாமுவேல் ஜாக்சன் தன் இலக்கை அடைந்த கதை!

`அர்ப்பணிப்புடன்கூடிய கடின உழைப்பு இருந்தால் எதுவும் சாத்தியமே!’ - அமெரிக்க கால்பந்து வீரர் டிமோத்தி வீஹ் (Timothy Weah).

சாமுவேல் எல். ஜாக்சன் (Samuel L. Jackson)... சினிமா ரசிகர்கள் அத்தனை பேரும் அறிந்த பெயர். 1972-ல் அவர் நடித்த `டுகெதர் ஃபார் டேஸ்’ (Together for Days) தொடங்கி, கடைசியாக வெளியான `தி கில் ரூம்’ (The Kill Room) வரை அத்தனையிலும் அபாரமான நடிப்பு; கதாபாத்திரமாகவே மாறிவிடும் மாயாஜாலம். இதுவரை 163-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இவை தவிர தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார். வீடியோ கேம், அனிமேஷன் படங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். ஆஸ்கர் விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். இதற்கெல்லாம் அடிப்படை நடிப்பில் அவர் காட்டிய அக்கறை, அர்ப்பணிப்பு உணர்வு.

சில மனிதர்களுக்கு நல்ல பக்கங்களைப்போலவே எதிர்மறையான பக்கமும் இருக்கும். ஜாக்சனுக்கும் அது உண்டு. ஒருகாலத்தில் மது, கோகெய்ன், ஹெராயின் உட்பட போதை வஸ்துகளுக்கு அடிமையாகியிருந்தவர் அவர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். எல்லோருக்குமே வாழ்க்கை சறுக்கும்தான். அந்தச் சறுக்கலில் சிக்கி புதைகுழியில் புதைந்துபோய்விடாமல், அதிலிருந்து மீண்டெழுந்ததால்தான் சாமுவேல் ஜாக்சன் ரசிகர்களின் மனதில் தடம் பதித்து, நிலைத்து நிற்கிறார். ஜாக்சனுக்கு இளம் பருவத்து வாழ்க்கை அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை.

சாமுவேல் ஜாக்சன் |Samuel L. Jackson

1948-ல் வாஷிங்டனில் பிறந்தார். ஏதோ பிரச்னை... அப்பா, குடும்பத்தைவிட்டு விலகி, கான்சாஸ் நகரில் வாழ்ந்துகொண்டிருந்தார். குடிப்பழக்கம் வேறு இருந்தது. அம்மா, ஒரு ஃபேக்டரி தொழிலாளி. அம்மாவை அதிகம் பார்க்கவே முடியாது. பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தார் ஜாக்சன். அவர், `என்னுடைய வாழ்நாளில் அப்பாவை இரண்டே முறைதான் பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் இறந்துபோனார் அப்பா. வீட்டில் ஒரு பக்கம் வறுமை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. வெளியே இனவெறி அவரைப் பெரும் துயரத்துக்கு ஆளாக்கிக்கொண்டிருந்தது. அவர் `Benga People' எனப்படும் ஆப்பிரிக்கப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தப்பட்டு, பலரின் வெறுப்புக்கும், கேலிக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளானார். அத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருப்பதை சிறுவயதிலேயே கண்டுகொண்டார். எத்தனையோ இக்கட்டான சூழலில் கலை என்கிற அந்தச் சிறு பொறியை அணையவிடாமல் பத்திரமாகப் பாதுகாத்தார்.

`அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இல்லாத திறமை, ஒன்றுமில்லை. அர்ப்பணிப்பும் ஒழுக்கமுமேகூட ஒரு திறமைதான்.’ - பிரபல பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் லூக் கேம்ப்பெல் (Luke Campbell).

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சாமுவேல் ஜாக்சனுக்குள் ஒரு கலைஞன் மிளிர்ந்தான். பிரெஞ்ச் கார்ன், பிக்கோலா, ட்ரம்பட், புல்லாங்குழல் எனப் பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார் ஜாக்சன். இசையும் நடிப்பும் சிக்கல், சிடுக்குள்ள வாழ்க்கையில் பெரிய இளைப்பாறுதலைத் தந்தன. அவருடைய பாட்டி படிப்பின் அருமையை உணர்ந்திருந்தார். ஜாக்சனைப் படிக்கத் தூண்டினார். அட்லாண்டாவில் இருக்கும் மோர்ஹவுஸ் காலேஜில் அவரைச் சேர்த்துவிட்டார். மரைன் பயாலஜி மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பு. சமூகத்தின் மேல் அவருக்கு இயல்பாகவே இருந்த அக்கறை சில போராட்டங்களிலும் அவரை ஈடுபடவைத்தது. அதுவே அவருடைய படிப்புக்கு வினையாகவும் ஆனது.

சாமுவேல் ஜாக்சன் |Samuel L. Jackson

கல்லூரி அறங்காவலர் குழுவில் போதுமான எண்ணிக்கையில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொண்டார் ஜாக்சன். மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டாலும், ஜாக்சன் உள்ளிட்ட சில மாணவர்கள்மீது கடுமை காட்டியது கல்லூரி நிர்வாகம். ஜாக்சன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தக் காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் சமூக சேவகராகப் பணியாற்றினார். பிறகு, உள்ளூரில் இருந்த ஒரு நாடக்குழுவில் சேர்ந்தார். நடிக்க ஆரம்பித்தார். `ஆஹா... நமக்கு நடிக்க வருதே... இதை விட்டுடக் கூடாது’ என முடிவெடுத்தார்.

சாமுவேல் ஜாக்சன் |Samuel L. Jackson

இரண்டு ஆண்டுகள் கழித்து அதே கல்லூரியில் சேர்ந்து பி.ஏ ஆக்டிங் படிப்பில் தேர்ச்சி பெற்றார். இடையில் சில இயக்கங்களில் சேர்ந்தார். எஃப்.பி.ஐ வந்து அவரின் அம்மாவிடம் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமானது. பிரச்னைகள், கட்டுப்பாடுகள், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஏச்சு, பேச்சுகள்... எல்லாம் இருந்தாலும் நடிப்பை மட்டும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் ஜாக்சன். அவர் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபோது ஒரு புதிய நாடக்குழு உருவானது. `ஜஸ்ட் அஸ் தியேட்டர்’ என்று அதற்குப் பெயர். அதை நிறுவியவர்களில் ஜாக்சனும் ஒருவர்.

`வாழ்நாள் முழுக்க நீங்கள் பார்த்த வேலையையும், அதற்காகச் செலுத்திய அர்ப்பணிப்பையும் எப்போது நீங்கள் மதிப்பிடுகிறீர்களோ அந்த நாள், ஓர் அழகான நாள்.’ - அமெரிக்க எழுத்தாளர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் மேரி காத்தியர் (Mary Gauthier)

இசை, நடிப்பில் அவருக்கு அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருந்தாலும், குடும்பத்தில் நிலவிய வெறுப்பான சூழல் அவரை போதைப் பழக்கத்தில் தள்ளியது. மது, கோகெய்ன், ஹெராயின் என சதா விழுந்துகிடந்தார். போதை என்பது ஒரு மூடுபனி. நிரந்தரமல்ல. இது அவருக்கும் தெரிந்தே இருந்தது. ஆனாலும், அதிலிருந்து விலக முடியாமல் அல்லாடினார். உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போதைப் பழக்கம் முழுமையாக அவரை ஆக்கிரமித்திருந்தது. அவரது திறமைக்கு போதைப் பழக்கம் எந்தத் தொந்தரவும் தரவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

சாமுவேல் ஜாக்சன் |Samuel L. Jackson

சாமுவேல் ஜாக்சன் நடித்தார்... தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரங்களைக்கூட கனகச்சிதமாகச் செய்தார். பாத்திரமாகவே மாறினார். முதலில் நாடகம், பிறகு சினிமாக்களில் சின்ன ரோல் என முன்னேறினார். தனக்கான வாய்ப்பு வந்ததும் அடித்து விளையாடினார். போதைப் பழக்கம் அவருடைய வெற்றிக்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது என்பதை ரொம்ப காலத்துக்கு அவர் உணரவேயில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த பிறகு, அவருக்குப் புகழ் தேடித்தந்த படம், `ட்ரூ ரொமான்ஸ்’ (True Romance). அந்தப் படத்துக்குக் கதை எழுதியவர், உலகமே உற்று கவனித்துக்கொண்டிருந்த இயக்குநர் குவான்டின் டொரன்டினோ (Quentin Tarantino). ஜாக்சன் அந்தப் படத்தையே தன் நடிப்பால் வேறு லெவலுக்குக் கொண்டுபோயிருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள்... ஆனாலும் போதைப் பழக்கமும் பின்னாலேயே வாலை ஆட்டிக்கொண்டு வரும் நாய்போல வந்துகொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் முடிவு என்று ஒன்று இருக்குமல்லவா... அந்தக் கேவலப்பட்ட பழக்கத்துக்கும் முடிவு வந்தது.

ஒருநாள், அவருடைய மனைவி அவருடைய தடுமாறிய நிலையைப் பார்த்துச் சொன்னார்... ``ஏங்க சொன்னா கேளுங்க... இதையெல்லாம் விட்டுடுங்க. முடியலையா... ஏதாவது போதை மறுவாழ்வு மையத்துலயாவது போய்ச் சேருங்க.’’

ஜாக்சன் காது கொடுத்துக்கூட அதைக் கேட்கவில்லை. ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார் ஜாக்சன்... ``என் மனைவி அந்த அளவுக்கெல்லாம் இறங்கிவரத் தேவையேயில்லை. சாதாரணமாக `வெளியே போ’ என்று சொல்லியிருக்கலாம். அதோடு என்னை இந்த உலகில் தனியாக விட்டுவிட்டு விலகிப்போயிருக்கலாம். `நீ என்ன வேணாலும் செஞ்சு செத்துத் தொலை’ என்று விட்டிருக்கலாம். அதை அவள் செய்யவில்லை.’’

சாமுவேல் ஜாக்சன் |Samuel L. Jackson

ஜாக்சன் வாழ்க்கையில் திருப்பம் வந்த நாள் அது. நல்ல போதையில், தன் நினைவிழந்து கிச்சன் தரையில் அவர் விழுந்து கிடந்தார். மனைவியும் மகளும் வந்து பார்த்தார்கள். அவர்கள் மனது என்ன துடிதுடித்திருக்கும்... அதன் பிறகு மெல்ல அடங்கினார் ஜாக்சன். சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். தேறினார். படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். `ஸ்டார் வார்ஸ்’, `அவெஞ்சர்ஸ்’, `தி இன்கிரெடிபிள்ஸ்’... எனப் பல வெற்றிப் படங்களில் ஜொலிக்க ஆரம்பித்தார். இன்றைக்குப் பல பில்லியன் டாலர் சொத்துக்கு அவர் சொந்தக்காரர்.

மறுவாழ்வு மையத்துக்குப் போய் வந்த பிறகு சாமுவேல் ஜாக்சன் இப்படிக் குறிப்பிட்டார்... ``மறுவாழ்வு மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கும் விஷயங்களைக்கூட நான் புரிந்துகொண்டேன்.’’

நடிகர்களுக்குச் சம்பந்தமில்லாத, இயக்குநர்களின் வேலை அது. ஒழுக்கம் சிறந்த வாழ்க்கைக்கான கதவுகளைத் திறந்துவிடும் சாவி என்பதை ஜாக்சன் புரிந்துகொண்டார்... நாமும் புரிந்துகொள்வோம்!


source https://www.vikatan.com/lifestyle/motivation/motivational-story-from-the-life-of-samuel-l-jackson

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக