Ad

புதன், 11 அக்டோபர், 2023

கனவு - 126 | சிவகங்கை | `எனர்ஜைஸர் டிரிங்க்’ டு `மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ்’ | வளமும் வாய்ப்பும்

சிவகங்கை மாவட்டத்துக்கு 'பசுமைகளின் நிலம்' என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. தமிழ்நாட்டின் காய்கறி உற்பத்தியில் சிறப்பு வாய்ந்த இடம் இந்த மாவட்டத்துக்கு உண்டு. கத்திரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், காலிஃபிளவர், மிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட கீரைகள் இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் விளையும் காய்கறிகளைப் பயன்படுத்தி, `வெஜ்ஜீஸ் எனர்ஜைஸர் டிரிங்க்’ (Veggies Energizer Drink) எனும் புராடக்டைத் தயாரிக்கலாம்.

கிரீன் மெஷின் (Green Machine) என்பது பிரபல குளிர்பான நிறுவனத்தின் பிராண்டுகளில் ஒன்று. இது காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக்கொண்ட உருவாக்கப்பட்ட பானம் (Drink). ஊட்டச்சத்துகள் நிறைந்த பல காய்கனிகளைச் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலான மக்கள் இந்த பானத்தை விரும்பி அருந்துகிறார்கள். புத்துணர்ச்சியூட்டும் சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக இதை விளம்பரப்படுத்தப்பட்டு, சந்தைப்படுத்துகிறார்கள்.

இதே போன்றதொரு புராடக்ட் இன்னும் இந்தியாவில் பிரபலமாகவில்லை என்பதால், இதன் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, வெஜ்ஜீஸ் எனர்ஜைஸர் டிரிங்க் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை சிவகங்கை மாவட்டத்தில் நிறுவலாம்.

வெஜ்ஜீஸ் எனர்ஜைஸர் டிரிங்க்கில் வைட்டமின் ஏ மற்றும் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்டவை அடங்கியிருக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்த உதவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலராலும் விரும்பிப் பருகப்படும் உடல்நலனுக்கேற்ற பானமாக இதை விளம்பரப்படுத்தும்போது, விற்பனையை அதிகரித்து, வருவாயைப் பெருக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 2 லட்சம் டன் அளவுக்கு அறுவடை நடக்கிறது. இவற்றிலிருந்து தேவையான அளவுக்குக் காய்கறிகளைக் கொள்முதல் செய்து வெஜ்ஜீஸ் எனர்ஜைஸர் டிரிங்க்கைத் தயாரிக்கலாம். ஒரு லிட்டர் அளவுள்ள பானம் ஒன்றின் விலையை 320 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெற்று, வளம் பெறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME - Micro, Small and Medium Enterprises) :

சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் மாம்பழத்தை மதிப்புக்கூட்டல் செய்து, மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ் எனும் புராடக்டைத் தயாரிக்கலாம். மாம்பழத்தை தோல் நீக்கி, சுத்தம் செய்த பின்னர் அதன் சதைப்பற்றான பகுதியை மட்டும் தேவையான அளவுக்குத் தண்ணீர் கலந்து வேகவைக்க வேண்டும். அதனுடன் பொட்டாசியம் குளோரைடு (Potassium chloride), மக்னீசியம் (Magnesium), உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, மாம்பழக் கரைசலை உறையவைத்து, பின்னர் உறைந்த கட்டியைத் தூளாக்கி, பதப்படுத்தி, மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ் தயாரிக்கலாம்.

உடலில் நீர் வற்றிப்போகும்போது, அதாவது டிஹைட்ரேஷன் (Dehydration) ஆகும்போது, உடனடி ஆற்றல் பெற மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ் உதவுகிறது. இதில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்ஸ், நார்சத்து, வைட்டமின் சி அடங்கியிருக்கின்றன. இவை, செரிமானப் பிரச்னையைச் சரிசெய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் (Antioxidants), உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் போன்றவற்றை விரைந்து குணமாக்கத் துணைபுரிகின்றன. இந்த புராடக்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகம் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அதைப் பயன்படுத்திக்கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் இதற்கான ஒரு தொழிற்சாலையை அமைக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் இருக்கின்றன. ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 7 டன் வீதம் ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 28,000 டன் அளவுக்கு மாம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. அதிலிருந்து சுமார் 100 டன் அளவுக்குப் பெற்று, மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ் தயாரிக்கலாம்.

ஒரு கிலோ மாம்பழக் கரைசலிலிருந்து 125 கிராம் மேங்கோ எலெக்ட்ரோலைட்ஸ் உருவாக்கலாம் எனில், 100 டன்னிலிருந்து ஏறக்குறைய 12,500 கிலோ அளவுக்கு எலெக்ட்ரோலைட்ஸ் தயாரிக்கலாம். பாட்டில் ஒன்றின் விலையை, தோராயமாக 550 ரூபாய் என நிர்ணயம் செய்து விற்பனை செய்யும்போது சுமார் 3 கோடி ரூபாய் வரை ஆண்டொன்றுக்கு வருமானம் ஈட்டலாம்.

(இன்னும் காண்போம்)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/business/kanavu-series-by-suresh-sambandam-sivaganga-126

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக