Ad

செவ்வாய், 24 அக்டோபர், 2023

அழியும் நிலையில்... Leo படத்தில் வரும் கழுதைப் புலிகள்! என்ன காரணம் தெரியுமா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் லியோ. இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஹைனா (கழுதைப்புலி)-ம் ஹைப்பைக் கூட்டியுள்ளது. விஜய்யுடன் ஹைனா சண்டையிடும் காட்சிகள் சிஜியில் மிரட்டியுள்ளன. இந்நிலையில், இந்த ஹைனாவின் உண்மையான பண்புகள் குறித்த தேடலும் அதிகமாகியுள்ளது.

கழுதைப்புலி

ஆப்பிரிக்கக் காடுகளில் அதிகமாக வாழும் விலங்காக கழுதைப்புலிகள் (ஹைனா) உள்ளன. உலகில் மொத்தம் நான்கு வகைக் கழுதைப்புலிகள் உள்ளன. அவற்றில் உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலி (ஹைனா) இனங்கள் மட்டுமே இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தக் கழுதைப்புலிகளுக்கு பின்னங்கால் குட்டையாகவும் முன்னங்கால் சற்று நீளமாகவும் இருக்கும். இதன் வலிமையான தாடைகளால் கடினமான எலும்புகளையும் அசால்ட்டாக மெல்லும் திறன் கொண்டது.

இவை சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டு மிச்சம் வைத்த மிருகங்களின் இறைச்சி, எலும்புகளை உணவாக உண்ணும். மேலும் இவை அழுகிப்போன உடல்களையும் சாப்பிடும். இவற்றின் ஜீரண மண்டலத்தில் மிக பயங்கரமான பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்கொள்ளும் சக்தி இருப்பதால் எந்த வகை உணவை இவை சாப்பிட்டாலும் இதன் உடலுக்குக் கேடு வருவதில்லை. இதனால் இவற்றை 'கானகத் தோட்டி', 'காட்டின் துப்புரவாளர்' என்றும் அழைக் கின்றனர்.

கூட்டமாக கழுதைப்புலிகள்

ஹைனாக்கள் சில சிறப்பு பண்புகளில் தனித்து விளங்குகின்றன. ஒரு பெண் ஹைனா ஒரே ஒரு குறிப்பிட்ட ஆண் ஹைனாவுடன் மட்டுமே இணையும். அதே போல் ஆண் ஹைனா கூட்டத்தில் இருக்கும் மற்ற பெண் ஹைனாவுடன் இணையாது. மேலும், இதை தனது சொந்தத்துக்குள் தனக்கான துணையை அமைத்துக் கொள்வதில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை இவையும் பின்பற்றுகின்றன. மற்ற விலங்குகளில் பெண் விலங்குகள் மட்டுமே தன் குட்டியைப் பார்த்துக்கொள்ளும். ஆனால், கழுதைப்புலிகளில் ஆணும் பெண்ணுடன் சேர்ந்து தங்கள் குட்டியைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கும். கழுதைப்புலிகளில் பெண்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை, பெண்ணின் விருப்பப்படிதான் அவற்றின் கூட்டம் செயல்படும்.

பொதுவாக, கழுதைப்புலிகள் இரவு நேரத்தில் மட்டுமே தன் உணவைத் தேடும். பொழுது விடிவதற்குள் தன் இருப்பிடத்துக்கு வந்துவிடும். இவற்றுக்கு பழிவாங்கும் குணம் அதிகம் இருப்பதால் அதை ஒருவர் தொந்தரவு செய்தால் ஞாபகம் வைத்துக்கொண்டு தாக்கும் புத்திக்கூர்மை இவற்றுக்கு உண்டு. இப்படி பல நல்ல குணங்கள் கொண்ட கழுதைப்புலிகள் அதன் உருவம் மற்றும் தோற்றத்தைக் கொண்டு மிகவும் கொடூரமான விலங்காகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கழுதைப்புலிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. தமிழகத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதிகள், முதுமலைக் காடுகள், சிகூர் சமவெளி, நீலகிரி வனச்சரகம், களக்காடு, முண்டந்துரை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இவை காணப்படுகின்றன. மேலும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், மத்திய பிரதேசத்தின் சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயம், குஜ்ராத்தின் வெலவாடார் தேசிய பூங்கா ஆகிய இடங்களில் உள்ளன.

இந்தியாவில் கழுதைப்புலிகளின் எண்ணிக்கை குறித்த சரியான கணக்குகள் எதுவும் இல்லை. கழுதைப் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களே இவற்றின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இவை வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் கால்நடைகளைத் தாக்குவதால் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. மேலும், இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையாலும் இவை அதிகமாக வேட்டையாடப் படுவதாகக் கூறப்படுகிறது. இதன் வாழ்விட சீர்க்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்க்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.

யானை, புலி, சிறுத்தைகள் போன்ற வன விலங்குகளின் உயிரிழப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுதைப்புலிகளுக்கும் நாம் கொடுப்பது அவசியம். உயிர்ச்சங்கிலியின் ஓர் அங்கமாக இருக்கும் கழுதைப்புலிகளை, பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.



source https://www.vikatan.com/environment/living-things/hyenas-in-the-movie-leo-are-endangered-what-the-reason-is

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக