Ad

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

காவிரிப் பிரச்னை: `கர்நாடகாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்!' - ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்?

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரைக் கொடுக்காமல், கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 26-ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அதில், 'குறுவை சாகுபடி செய்வதற்காக தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என கர்நாடக அரசுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பல்வேறு கன்னட அமைப்பினர் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து கர்நாடகவுக்குச் செல்லும் பேருந்துகள் முந்தைய நாள் இரவு 8 மணி முதல் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. மேலும் தமிழக பதிவெண்கொண்ட வாகனங்கள், அந்த மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பந்த் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் கடைகள்

இதற்கிடையில் பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார், நடிகர் சித்தார்த். அப்போது கன்னட அமைப்பினர் உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், ``காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா... உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று கூச்சலிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், "கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க மறுக்கிறது. சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டார். அதற்கு முன்பே அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். கூட்டணிக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தண்ணீர் தர மறுக்கிறது. இந்த சமயத்தில் நாம் அநீதியாக எதுவும் கேட்கவில்லை. நமக்கான உரிமையைத்தான் கேட்கிறோம். அழுத்தம் கொடுத்து தி.மு.க பெற வேண்டும். இதுவரை அதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் தன்னை டெல்டாவைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக்கொள்கிறார்.

இடும்பாவனம் கார்த்திக்

அந்த டெல்டாவில்தான் இன்று மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. ஸ்டாலினின் சொந்த ஊராக இருக்கக்கூடிய திருக்குவளைக்கு அருகில் ஒரு விவசாயி தற்கொலை செய்திருக்கிறார். ஆனால் அனைத்துக்கும் கள்ள மௌனத்தை தி.மு.க சாதித்து வருகிறது. கர்நாடகாவில் தமிழக முதல்வரின் உருவப்படத்தை வைத்து பாடைக்கட்டி அவமதிப்பு பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அதற்கும் தி.மு.க எதிர்வினையாற்றவில்லை. அதேபோல் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அந்தப் போராட்டத்தை ஒடுக்க மாட்டோம் என அறிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் மக்களின் உணர்வுகளோடு நிற்போம் என்ற உறுதிப்பாட்டையும் தரவில்லை.

இது முழுக்க, முழுக்க தி.மு.க - காங்கிரஸ் செய்யக்கூடிய அற்பத்தனமான அரசியல். இதே நிலைப்பாட்டில்தான் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் இருக்கிறது. தமிழகத்தில் காவிரி பிரச்னை மூன்று, நான்கு மாவட்டங்களின் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களின் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், திரைத்துறையும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாம் விதிகளுக்கு உட்பட்டு என்ன கொடுக்கப்பட வேண்டுமோ அதைத்தான் கேட்கிறோம். முதலில் 500 டி.எம்.சி வரைக்கும் நாம் பெற்றுக்கொண்டு வந்தோம், பிறகு 127 டி.எம்.சி-யாக குறைத்து விட்டார்கள். தற்போது அதையும் தர மறுக்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் ஜனநாயக உணர்வோடு இருப்பதை பார்க்கிறோம்.

காங்கிரஸ் - பாஜக

ஆனால் கர்நாடகாவில் நிலைமை அப்படி இல்லை. அங்கு வாழும் தமிழர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு இல்லை என்ற உணர்வுக்குத் தள்ளப்படுகிறார்கள். 1991-ல் இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். 50-க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகளை 2016-ல் தீக்கிரையாக்கினார்கள். இப்போதும் அச்சுறுத்துகிறார்கள். தமிழக நடிகரை வெளிப்படையாக மிரட்டுகிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும், தமிழக முதல்வர் வாய் மூடி மௌனம் சாதிப்பாரேயானால் தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய பச்சை துரோகம். அரசியல் லாப நட்ட கணக்குகளுக்காக, தமிழக மக்களின் உரிமைகளை காவு கொடுக்கக்கூடிய செயல் இது" எனக் கொதித்தார்.

இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ``இது இரண்டு மாநில விவசாயிகள் சம்பந்தப்பட்ட விவகாரம். அதில் நமது போராட்டங்களை எல்லாம் தாண்டி, உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை தெரிவித்துச் சொல்வதைக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் நாம் என்ன செய்ய முடியும்... சட்டரீதியாக நமது உரிமைகளைப் பாதுகாக்க ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம். அவர்கள் 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றார்கள். சூழல் இல்லாததால் 3,000 கன அடி நீர் கட்டாயம் திறக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஒருவேளை இவர்கள் எதிர்பார்ப்பதுபோல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியிருந்தாலும் இதைத்தாண்டி என்ன சாதித்திருக்க முடியும். வீணாக ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்க முடியுமா... விவசாயிகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி முதல்வர் செய்திருக்கிறார். செய்ய முடியாத சுழல் வந்தால், அவர்கள் சொல்வதைப்போல் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பார்க்கலாம். நாம் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி இப்போது கிடைக்கும் தண்ணீரும் இல்லாமல் போய்விடக் கூடாது. எனவே அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/cauvery-dispute-why-dmk-government-maintaining-silence-in-this-livelihood-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக