Ad

செவ்வாய், 10 அக்டோபர், 2023

ஸ்டாலின் குறித்து அவதூறுப் பேச்சு; பொதுக்கூட்டத்தில் மன்னிப்புக் கேட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க சார்பில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் குமரகுரு, முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியிருந்தார். அதையடுத்து கள்ளக்குறிச்சி நான்குமுனைச் சந்திப்புப் பகுதியில் கள்ளக்குறிச்சி நகர தி.மு.க சார்பில், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர் குமரகுருவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி

அப்போது அ.தி.மு.க மாவட்டச் செயலாளரின் உருவப்படம் எரிக்கப்பட்டது. அதையடுத்து கள்ளக்குறிச்சி தி.மு.க-வின் தெற்கு பகுதிச் செயலாளர் வெங்கடாசலம், குமரகுரு மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீஸார் குமரகுரு மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில் குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், `கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு பகுதிச் செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின்கீழ் கள்ளக்குறிச்சி போலீஸார் என்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் வகையில் நான் பேசிய அந்த வார்த்தைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என்று வருத்தம் தெரிவித்தார் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் குமரகுரு. அப்போது, ``முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ குமரகுரு, காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெற்று ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில், அவர் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அதை வீடியோவாகப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு

அதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று இரவு அதே இடத்தில் பொதுக்கூட்டத்தைக் கூட்டிய குமரகுரு, ``முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து நான் வாய் தவறிப் பேசிவிட்டேன். அந்தப் பேச்சு புண்படுத்தும்படி இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூக வலைதளங்கள் வாயிலாக நான் தெரிவித்திருந்தேன். இப்போதும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவ்வாறு புண்படும்படி பேசியதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-வினர் யார் ஒருவர் மனதையும் புண்படுத்தாதபடி நடந்துகொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-district-secretary-apologies-for-his-speech-against-cm-stalin-and-minister-udhayanidhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக