Ad

சனி, 28 அக்டோபர், 2023

விருதுநகர்: வழக்கறிஞர் போர்வையில், புகையிலைப் பொருள்கள் கடத்தல் - இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - மதுரை சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. காரை நிறுத்துமாறு‌ போலீஸார் சைகை காண்பித்தும், காரை நிறுத்தாமல் காவலரை இடித்து தள்ளிவிட்டு சோதனை சாவடியை கடந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த காரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர்.

பறிமுதல்

தொடர்ந்து, காருக்குள் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகம்மது அப்துல் சலீம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைத்தன் சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெற்றுக்கொண்டு சேலத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், சோதனைச்சாவடி மற்றும் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக காரின் முன்பக்க கண்ணாடியில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் 'ஸ்டிக்கர்' ஒட்டி கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 60 மூட்டைகளில் இருந்த ரூ.12 லட்சம் சந்தை மதிப்புள்ள 610 கிலோ புகையிலைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, முகம்மது அப்துல் சலீம், சைத்தன் சிங் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



source https://www.vikatan.com/crime/police-arrested-two-youngsters-for-smuggling-tobacco-near-rajapalayam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக