Ad

செவ்வாய், 24 அக்டோபர், 2023

``இந்த பயம் காரணமா கல்யாணத்தைத் தள்ளிப்போடாதீங்க...'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 113

பிரச்னைகளைவிட பெரிய பிரச்னை, `அந்தப் பிரச்னை வந்திடுமோ, இந்தப் பிரச்னை வந்திடுமோ...' என்கிற நம்முடைய பயம்தான். `ஆண்மைக்குறைபாடு பிரச்னைகளுக்கு பெரும்பாலும் ஆண்களுடைய பயமே காரணமாக இருக்கிறது' என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், பயத்தினால் 39 வயது வரை தன் திருமணத்தைத் தள்ளிப்போட்ட ஓர் ஆணின் கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

``அந்த நபர் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்னைக்காக என்னிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அதே நேரம், 'என்ன செஞ்சாலும் நமக்கு இந்தப் பிரச்னை சரியாகாதோ...' என்கிற சந்தேகத்துடனே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். `டாக்டர், கல்யாணம் செஞ்சுகிட்டா என் வொய்ஃப் வேற யார் கூடவாவது ரிலேஷன்ஷிப் வெச்சுப்பாளோன்னு பயமா இருக்கு... எனக்கு கல்யாணமானா டைவர்ஸ் ஆகிடும் டாக்டர்...' என்றெல்லாம் பதற்றப்படுவார். எப்படிப்பட்ட சிகிச்சை கொடுத்தாலும், எவ்வளவு கவுன்சலிங் செய்தாலும் சில நாள்கள் மகிழ்ச்சியாக இருப்பார். பிறகு, `மாத்திரை சாப்பிடுறதாலதான் டாக்டர் எல்லாம் நல்லாயிருக்கு. விட்டுட்டா மறுபடியும் வந்திடும்தானே...' என்று பயப்பட ஆரம்பித்துவிடுவார்.

Sexologist Kamaraj

இந்த பயத்தை இன்றைய இளைஞர்கள் பலரிடமும் பார்க்கிறேன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தினமும் குறைந்தது 20 இளைஞர்களையாவது மேலே சொன்ன பிரச்னையுடன் சந்திக் கிறேன். இவர்களில் சிலருக்கு மட்டுமே உண்மையிலேயே பிரச்னை இருக்கும். அதுவும் சிறிய அளவில்தான் இருக்கும். சிலர், ஒருமுறை செக்ஸ் வொர்க்கரிடம் சென்று வந்திருப்பார்கள். அதனால் `தனக்கு எய்ட்ஸ் வந்திடுமோ' என்கிற பயத்தில் என்னை வந்து சந்திப்பார்கள். இவற்றிலெல்லாம் நியாயம் இருக்கிறது. ஆனால், போர்ன் படங்களைப் பார்த்தோ, நண்பர்களின் பேச்சைக் கேட்டோ, தனக்கு ஆண்மைக்குறைபாடு இருக்கிறது என்று நம்பிக்கொண்டு `நான் திருமணம் செஞ்சுக்க மாட்டேன்' என்று முடிவெடுப்பது சரியே கிடையாது.

நம்முடைய எண்ணங்கள் 99 சதவிகிதம் பயங்காட்டுவதாகவும் பயனற்றதாகவும்தான் இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். இதைச் சரிசெய்ய ஒரு வழி இருக்கிறது. முதலில், `எந்த எண்ணம் உங்க மனசுல பயத்தைக் கொடுக்குது' என்று கவனிக்கச் சொல்வோம். இரண்டாவதாக, அந்த எண்ணங்களை பயமில்லாமல் கவனிக்கச் சொல்வோம். மூன்றாவதாக, பயங்கள் எல்லாம் கற்பனையானவை. அவற்றில் 99 சதவிகிதம் நடக்கப்போவதில்லை என அறிவுபூர்வமாக யோசிக்கப் பழக்குவோம்.

Sex Education

இதற்கு தியானமெல்லாம் தேவையில்லை. `என் ஆண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று வாய்விட்டு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தால், மெள்ள மெள்ள பயம் உங்களை விட்டு விலகும். ஒருவேளை பிரச்னையிருந்தாலும், `ஆமாம், எனக்கு பிரச்னை இருக்கிறதுதான். அதற்காக டாக்டரை நான் பார்த்துவிட்டேன். சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் என் பிரச்னை சரியாகிவிடும். அதன் பிறகு நான் திருமணம் செய்துகொள்வேன்' என்று வாய்விட்டு சொல்லுங்கள். பயம் குறைய ஆரம்பிக்கும். பவர்ஃபுல் டெக்னிக் இது. நான் மேலே குறிப்பிட்ட நபருக்கு ஸ்டெம் சிகிச்சை செய்த பிறகு, விறைப்புத் தன்மை வர ஆரம்பித்துவிட்டது. திருமணத்துக்கும் ரெடியாகி விட்டார். இவரைப்போல தேவையில்லாத பயம் காரணமாக திருமணத்தைத் தள்ளிப் போடாதீர்கள் ஆண்களே'' என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.



source https://www.vikatan.com/health/sexual-wellness/dont-put-off-marriage-because-of-this-fear-says-expert

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக