Ad

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

மண் கடத்தல் விவகாரத்தில் காவலர் மீது தாக்குதல்?! - திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு!

திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க சிறப்பு போலீஸ் டீம் போடப்பட்டுள்ளது. அந்த டீமில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கிங்சிலி என்ற காவலரும் உள்ளார். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் நெல்லை மாவட்டம் பழவூரில் ஒரு குளத்தை குத்தகைக்கு எடுத்து மண் எடுத்து வந்துள்ளார். குளத்தில் இருந்து மண் எடுக்கும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட ஓவர் லோடு மண் ஏற்றிச் சென்றதாக மணல் கடத்தல் தடுப்புப்பிரிவினர் சிவபெருமானின் 5 டெம்போக்களை மடக்கி பிடித்துள்ளார். இந்த விவகாரம் சம்பந்தமாக சிவபெருமான் தன்னை ஆரல்வாய்மொழி-யில் வீட்டுக்கு அருகே வைத்து தாக்கியதாகவும், பின்னர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார்கொடுக்கச் சென்ற சமயத்தில் அங்குவைத்து சிவபெருமான், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு உள்ளிட்ட மூவர் தன்னை தாக்கியதாக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் காவலர் கிங்சிலி.

அதேநேரம், மண் கொண்டுசென்ற டெம்போக்களை விடுவிக்க காவலர் கிங்ஸிலி மற்றும் அவரது அண்ணன் உள்ளிட்டோர் ஆகியோர் சேர்ந்து தன்னிடம் பேரம் பேசியதாகவும். அந்த சமயத்தில் ஏற்பட்ட பிரச்னையில் காவலர் கிங்சிலி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும் சிவபெருமான் தரப்பு போலீஸில் புகார் அளித்துள்ளது. இதில் போலீஸ் கிங்சிலி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவபெருமான் மீதும், தி.மு.க ஒன்றிய செயலாளர் பாபு மீதும், மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் பாபு

இதுகுறித்து சிவபெருமான் கூறுகையில், "லாரி, டெம்போக்களில் பாடிமட்டத்துக்குத்தான் அனுமதி பெற்று மண் கொண்டுசென்று செங்கல் சூளைகளுக்கு கொடுப்பது வழக்கம். மணல் கடத்தல் தடுப்பு ஸ்பெஷல் டீமில் உள்ள கிங்ஸிலி எப்போதும், எங்கள் வண்டியை மட்டுமே பிடிப்பார். இப்போதும் மண் எடுக்கும் வண்டியை பிடித்தது சம்பந்தமாக பேசியவர் 'என்னை பெரிய அளவில் கவனிக்கணும்', ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தரவேண்டும் என்றார். அதற்காக அவர் பணி முடிந்தபிறகு இரவு 8 மணிக்கு வாட்ஸ்அப் காலில் அழைத்து ஆரல்வாய்மொழில்கு வரும்படி அழைத்தார். அங்கு சென்று வாட்ஸ் அப் காலில் மீண்டும் அழைத்தபோது அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வரும்படி சொன்னார். அங்குசென்றபோது கிங்சிலி அவரது சகோதரர் மற்றும் சிலர் நின்றிருந்தனர்.

அப்போது, லாரிகளில் கேரளாவுக்கு ஜல்லி உள்ளிட்ட கனிமவளங்களை கொண்டுசெல்லும் லாரிகளை காட்டி இவ்வளவு லாரிகளில் கனிமவளங்களை கொண்டு செல்வதை கண்டுகொள்ளமாட்டீர்களா எனக்கேட்டேன். அதற்கு, இனி உன் வண்டி ஓடுவதை பார்க்கலாம் என அவர்கள் அடிக்கவந்து தள்ளிவிட்டார்கள். அங்குள்ள வேறு சிலர் சமாதானப்படுத்தினர். இதுபற்றி புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு கிங்சிலியின் அண்ணன் உள்ளிட்டவர்கள் வந்து என் சட்டையை பிடித்து இழுத்து அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திலும் 'நீ எதற்கு கிங்சிலியின் வீட்டுப்பக்கம் வந்தாய்' என போலீஸார் கேட்டனர். அவர் வாட்ஸ் அப் காலில் அழைத்ததை போலீஸிடம் சொன்னேன். அதை போலீஸ் கண்டுகொள்ளவில்லை. அந்த சமயத்தில் நான் உதவிக்கு ஒன்றிய செயலாளர் பாபுவை அழைத்தேன். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட எங்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். சிவபெருமான் உதவிக்கு அழைத்ததால் அங்கு சென்றதாகவும், யாரையும் தாக்கவில்லை என எனவும் தி.மு.க ஒன்றியச் செயலாளர் பாபு தெரிவித்துள்ளார்.

மண் கடத்தல்

அதே சமயம் போலீஸ் தரப்பில் கூறும்போது, "தி.மு.க-வைச் சேர்ந்த சிவபெருமான் தரப்பு மண் கடத்தல் விவகாரத்தில் கிங்சிலியை தாக்கியதுடன், காவல் நிலையத்தில் வைத்தும் தகராறு செய்தனர். அதனால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர். அதே சமயம் அடிதடி நடந்ததாக கூறப்படும் பேக்கரி மற்றும் காவல்நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. மண் கடத்தல் விவகாரத்தில் தி.மு.க, நிர்வாகிகளும், போலீஸும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/dmk-police-fight-in-sand-taking-issue-in-kanniyakumari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக