Ad

புதன், 5 ஏப்ரல், 2023

Doctor Vikatan: சர்க்கரையை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரிதானா?

Doctor Vikatan: எந்த இனிப்பும் சாப்பிடாமல் அல்லது மிகக் குறைவான அளவிலேயே உணவில் இனிப்புகளைச் சேர்த்துக்கொண்டு, தினசரி ஏதாவது ஒருவகை பழத்தைச் சாப்பிடும்பட்சத்தில், உடலுக்குத் தேவையான இனிப்புச்சத்துக் கிடைத்துவிடுமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நம் உடலில் இனிப்புச்சத்து என தனியே ஒன்று கிடையாது. நம் உடலானது முழுமையாக ஆயில் போடப்பட்ட மெஷின் போன்றது. மாவுச்சத்துள்ள உணவுகள் உடலுக்கு என்ன செய்யும், புரதச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும், கொழுப்புச்சத்துள்ள உணவுகள் என்ன செய்யும் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வேலைகள் உள்ளன.

நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது செரிமானமாகி, கடைசியில் குளுக்கோஸாகவே மாறும். குளுக்கோஸ் இல்லாமல் மூளையால் இயங்கவே முடியாது. அதற்காக வெறும் குளுக்கோஸை வாயில் மென்றுகொண்டே இருந்தால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று அர்த்தபடுத்திக் கொள்ளக்கூடாது. அதே மாதிரிதான் இனிப்புச்சத்தும். இனிப்பாகச் சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும் என்று எதுவும் கிடையாது.

கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது அரிசி, கோதுமை உணவுகளில், சிறுதானியங்களில், கிழங்கில் இருக்கிறது. கார்போஹைட்ரேட் என்பது எனர்ஜி கொடுக்கும் எரிபொருள் போன்றது. புரதச்சத்தானது திசுக்களைப் பழுதுபார்க்கும். தசைகளின் கட்டுமானத்துக்கும் செல்கள் பெருகவும் உதவும். எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றில் உள்ள கொழுப்புச்சத்து ஆற்றல் செறிவூட்டப்பட்ட ஆதாரம் போன்றது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் 4 கலோரி என்றால் ஒரு கிராம் கொழுப்புச்சத்து 9 கலோரிகளாக இருக்கும்.

கொழுப்பு

நம்முடைய உடல் என்பது ஒரு பரிசோதனைக்கூடம் போன்றது. அதிக அளவு கார்போஹைட்ரேட் சாப்பிடும்போது அது கொழுப்பாக மாறி நம் இடுப்பிலோ, தொப்பையிலோ சேர்ந்துவிடும். உடலுக்கு எனர்ஜி வேண்டும் என்ற எண்ணத்தில் கார்போஹைட்ரேட்டே எடுத்துக்கொள்ளாமல் அதிக அளவு புரதமாக எடுத்துக்கொள்ளும்போது, உடலானது புரதச்சத்தையே ஆற்றலுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்.

பிறந்த குழந்தைக்கு ஒருவயது வரை தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறோம். 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து கஞ்சி உள்ளிட்ட இதர உணவுகளையும் ஆரம்பிக்கச் சொல்கிறோம். இந்த உணவுகளிலும் உப்போ, சர்க்கரையோ சேர்த்துப் பழக்காதீர்கள் என்றே அறிவுறுத்துவோம். சர்க்கரையே சேர்க்காததால் குழந்தைக்கு எனர்ஜியே இருக்காது என நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான அம்மாக்களும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதுமே பிஸ்கட்டை பாலில் நனைத்தோ, தண்ணீரில் தோய்த்தோ கொடுக்கிறார்கள். அதனால் குழந்தை இனிப்புச்சுவைக்குப் பழக்கமாகிறது. ஒரு கட்டத்தில் இனிப்புக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறுமே இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல நாம் என்ன சாப்பிட்டாலும் அது இறுதியில் குளுக்கோஸாகத்தான் மாறப் போகிறது. உடலுக்கு என்ன சத்து தேவை என்பது சரியாகத் தெரியும்.

உணவு

எனவே உங்கள் வயது, எடை, உடல் உழைப்புக்கேற்ப அளவாக கார்போஹைட்ரேட், பழங்கள், சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமாகச் சாப்பிட வேண்டியதுதான் அவசியம். பாக்கெட் உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்... அதில் Added Sugar, Total Sugar என இரண்டு இருக்கும். இதில் Added Sugar துளியும் இல்லை என்று தெரிந்தால்தான் அதைச் சாப்பிட வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே சர்க்கரைச் சத்து இருக்கும். இதே விதி உப்புக்கும் பொருந்தும்.

எனவே சர்க்கரையே இல்லாமல் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. நம் உணவில் இயற்கையாகவே உள்ள சர்க்கரைச் சத்தே உடலுக்குப் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/diet/doctor-vikatan-is-a-sugar-free-diet-right

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக