Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸுக்கும் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா? ஸ்ட்ரெஸ் அதிகமானதால் ஹார்ட் அட்டாக் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோமே... அதற்கு சாத்தியமுண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி
உங்கள் மனதை பாதிக்கும்படியான ஒரு துயரமோ, பிரிவோ, இழப்போ ஏற்படும்போது அந்த உணர்வானது மூளையில் உள்ள அமிக்டலா என்கிற பகுதியைத்தான் முதலில் தாக்கும். அங்கிருந்து அந்த பாதிப்பானது மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதலாமஸ் பகுதிக்குச் செல்லும். அதிலிருந்து பிரதான சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பிக்குச் செல்லும். அதன் விளைவாக ஹார்மோன்கள் பாதிக்கப்படும்.
அதனால் தைராய்டு சுரப்பி, அட்ரீனல் சுரப்பி எல்லாம் பாதிக்கப்படும். அட்ரீனல் சுரப்பியிலிருந்து வெளியாகும் கார்ட்டிசால் ஹார்மோன்தான் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துவது. அதனால் ஸ்ட்ரெஸ் இன்னும் அதிகரிக்கும். எனவே ஆன்மா- அறிவு- உடல் என எல்லாவற்றுக்கும் ஓர் இணைப்பு உள்ளது.
இது போக மூளைக்கு ஒன்று, இதயத்துக்கு ஒன்று, குடலுக்கு ஒன்று என தனித்தனியாக நரம்பியல் இயக்கம் இருக்கும். அதனால்தான் ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது பேதியாகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது வயிற்றில் அல்சர் வருகிறது. பயப்படும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல உணர்வதும் இதனால்தான். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது ஹார்ட் அட்டாக் வருவதற்கும் இதுதான் காரணம். எனவே இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ளவை.
அந்த வகையில் ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தை பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உணர்வுரீதியாகவும் ஒருவர் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அதை 'ஸ்ட்ரெஸ்ஃபிட்' என்கிறோம்.
அப்படி இருந்தால்தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ முடியும். நெகட்டிவ் சிந்தனைகளைத் தவிர்ப்பது, பாசிட்டிவ்வான அணுகுமுறை, எதிலும் கெட்டது தவிர்த்து நல்லதைப் பார்ப்பது, நன்றியோடு இருப்பது போன்ற குணங்கள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க வைக்கும். ஆரோக்கியத்தையும் காக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/mental-health/doctor-vikatan-does-stress-cause-heart-attack
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக