Ad

சனி, 8 ஏப்ரல், 2023

கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்!

சமீப காலமாக, மாரடைப்பால் இளம் வயதினர் இறக்கும் செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பின்னர் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இத்தகைய மரணங்களுக்கான காரணம் புதிராகவே உள்ளது.

கடந்த மாதம் சென்னையில்‌ பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், ``கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4- 5% அதிகரித்துள்ளது" என்றார்.

COVID -19 Vaccine

மாரடைப்பு ஏற்படுவதற்கு கோவிட் தடுப்பூசி காரணமாக இருக்கலாமா என்று கோணத்திலும் பல்வேறு கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டன. ஆனால் இதுபற்றிய எந்த ஆய்வோ, தகவலோ முறையாக இல்லை என்ற பதிலே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவிட் தொற்றுக்கு பிறகு அதிகரித்துள்ள மாரடைப்பு குறித்த ஆய்வை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய மன்சுக் மாண்ட்வியா, ``சமீப காலத்தில் இளம் வயதினர் நிறைய பேர் இறந்து போவதைப் பார்த்தோம். இளம் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இது போன்ற பல நிகழ்வுகள் நாட்டின் பல இடங்களில் நிகழ்ந்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா

இந்த ஆய்விற்காக அரசு சார்பில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். கோவிட் 19 தொற்று ஏற்படுவதற்கும் மாரடைப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள் இரண்டு, மூன்று மாதங்களில் வெளியாகலாம்" என்றார்.

ஏற்கெனவே, அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட் தொற்று ஏற்பட்ட பின் இதயத்தில் உள்ள தசைகள் பாதிப்படையலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிட் தொற்று ஏற்படும் போது, அது இதயத்தில் உள்ள‌ தசைகளை பாதிக்கும். ரத்தக்குழாய்களின் உட்பகுதியில் வீக்கங்களை‌ ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது இதயத்தில் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவிட் தொற்றுக்கு பிறகு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என, மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்...

``கோவிட் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு மாரடைப்பு ஏற்படும் விகிதம் உயர்ந்திருப்பது உண்மை‌தான். இதற்கு இரண்டு வகையான காரணங்களைக் கூறலாம். ஒன்று கோவிட் தொற்று ஏற்பட்ட பின் சிலருக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக நாள்கள் தேவைப்படும். இதை `லாங் கோவிட்' எனக் கூறுவோம். நோய்‌ பாதிப்பில் இருந்து மீண்டு வர அதிக நாள்கள் எடுத்து கொண்டவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு போன்ற இன்னும்‌ சில பிரச்னைகள் ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் வெளியான ஆய்வு முடிவுகள் இந்த "லாங் கோவிட்" நினைத்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறியுள்ளன. கோவிட் தொற்று ஏற்பட்ட 5% மக்களுக்கு மட்டுமே லாங் கோவிட் பிரச்னை இருப்பதாகவும் மீதமுள்ள 95% பேர் ஆரோக்கியமாக இருப்பதாகவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மருத்துவர் அஷ்வின் கருப்பன்

இன்னொன்று, கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களும், அதிகரிக்கும் மாரடைப்பு எண்ணிக்கைக்கு காரணமாக உள்ளன. Work from home முறையில் வேலை செய்யத் தொடங்கிய பின், உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. பலருக்கு அதிக நேரம் வேலை பார்க்கும் சூழல் உருவானது. இதன் காரணமாக முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான சாப்பாடு எதுவும் இல்லாமல் உடல் பருமன் பிரச்னை அதிகமாகி விட்டது. இதுவும் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட ஒரு காரணமாகும்" என்றார்.

மாரடைப்பு ஏற்பட தடுப்பூசி காரணமாக இருக்கலாமா என்பது குறித்து கேட்டதற்கு, ``தடுப்பூசி பற்றி பேசுவதற்கு முன், மக்கள் மாரடைப்பு பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மாரடைப்பு என்பது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் 100% அடைபடும் போது ஏற்படுவது. இது ஒரேநாளில் திடீரென நடப்பது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக ரத்தக்குழாய்கள் அடைத்து, ரத்த ஓட்டம் தடைப்படும். நம் நாட்டில் தற்போது வரை 120 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. தடுப்பூசி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், தற்போது வரை நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Heart attack

தடுப்பூசி செலுத்திய பின் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டதாக சிலர் கூறி இருக்கிறார்கள். சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதற்கு தடுப்பூசி மட்டும் தான் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. தடுப்பூசி செலுத்திய பின் சிலருக்கு Multiple inflammatory syndrome ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகளிடம் அதிகம் பார்க்க முடிந்தது. ஆனால் இது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு மொத்த விகிதத்தை ஒப்பிடுகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானது ஆகும். இந்த ஒரு சதவிகிதம் பேருக்கு பக்க விளைவுகள் கோவிட் 19 தடுப்பூசி செலுத்தியதால் மட்டுமல்லாமல் வேறு எந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கூட ஏற்படலாம். எனவே மாரடைப்பு ஏற்பட கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.

இது பற்றி விஞ்ஞானி மாரியப்பனிடம் கேட்டோம்... ``கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் சமயத்தில் Covishield மற்றும் Covaxin இரண்டு தடுப்பூசிகளும் பெரிதும் உதவியாக இருந்தன‌. முதலில், முன்களப் பணியாளர்களிடம் தொடங்கி பிறகு கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு, தேவைப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் அதில் குறிப்பிட்ட சில வயதினருக்கு இதயப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. இதன் அர்த்தம், தடுப்பூசிகள் பாதுகாப்பானவையல்ல என்பது கிடையாது.

விஞ்ஞானி தி. மாரியப்பன்

கோவிட் தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு மிகவும் அவசியம் மற்றும் அவை பாதுகாப்பானவை தான். ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் பதிமூன்று வயதுக்கு குறைவான சிலருக்கும், வயதானவர்களில் சிலருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிலருக்கு வலிப்பு போன்ற பிரச்னைகள் உண்டானதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எதையுமே பொதுவான கருத்தாக, அனைவருக்கும் ஏற்படும் எனச் சொல்ல முடியாது. இது எல்லாமே விதிவிலக்காக நடக்கக்கூடிய நிகழ்வுகள் ஆகும். இன்னொன்று, இப்படி பிரச்சனை ஏற்பட்டவர்கள் அனைவரும் ஏற்கெனவே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம். எனவே பொதுவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும் என்று சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.



source https://www.vikatan.com/health/disease/are-heart-attacks-on-the-rise-after-covid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக