திருச்சி தெற்கு மாவட்ட திருவெறும்பூர் ஒன்றிய அ.ம.மு.க., செயலாளராக இருப்பவர் ஆனந்தராஜ். இவருடைய சகோதரர் சதீஷ்குமாரின் மனைவி திவ்யா கடந்த வாரம் காலமானார். திவ்யாவின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக, திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் கிராமத்திற்கு வந்த அ.ம.மு.க., பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திவ்யாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்திந்துப் பேசியவர், ``வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக அரசியலில் ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ மாதிரி செயல்படக்கூடியவர்கள் (எடப்பாடி பழனிசாமி) வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். ஜாதி, மத பேதமில்லாத அ.தி.மு.க.,வில் ஜாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி. பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “அ.தி.மு.க., இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீயவர்களோடு பயணிக்கக்கூடாது என்பதற்காவும், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமெனவும் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை’ அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உருவாக்கியுள்ளோம். ஜனநாயக முறைப்படி நாங்கள் வெற்றி பெற்று உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார் என்பதை வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார். அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம்.
ஏன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக வந்துவிட முடியும். எனக்கு எடப்பாடி பழனிசாமி மேல் எதிர்ப்பு உணர்வு கூட கிடையாது. அவர்களுடைய செய்கையை கண்டிக்கிறோம் அவ்வளவு தான். எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி சிலோனை விட்டு ஓடினார்களோ, அதேநிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும். இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/edappadi-palanisamy-is-a-tamilnadu-rajapakse-told-ttv-dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக