சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இளமாறன் (23). போட்டோகிராபரான இவர் தன்னுடைய நண்பரின் திருமண போட்டோ ஷூட்டுக்காக ஆறு நண்பர்களுடன் 3.7.2022-ம் தேதி காலை 6:30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு `நம்ம சென்னை’ என்ற இடத்தின் பின்புறத்திலுள்ள மணல் பரப்பில் அமர்ந்திருந்த இளமாறனிடம் ஒருவர், `நீ எந்த ஏரியா?’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது இளமாறனுக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அந்த நபர் சிறிது நேரத்தில், தன்னுடைய நண்பர்கள் சிலரை அங்கு அழைத்து வந்து இளமாறனை கட்டை, கத்தியால் தாக்கியிருக்கிறார். அதைப் பார்த்த இளமாறனுடன் வந்திருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் காலை நேரம் என்பதால் நடைப்பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். கத்தியால் குத்தப்பட்ட இளமாறனும் இந்தக் கும்பலிடமிருந்து தப்பி, மெயின் ரோட்டுக்கு ஓடி வந்தார். பின்னர், மெரினா காவல் நிிலையத்தில் இளமாறன் புகாரளித்தார். காயமடைந்த இளமாறன், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் இளமாறனைக் கத்தியால் குத்திய சம்பவத்தை வீடியோவாக எடுத்தவர்கள், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவில், டிஜிபி அலுவலகம் அருகில் கத்தியோடு இளைஞர்கள் செல்வதை வாக்கிங் சென்றவர்கள் அதிர்ச்சியோடு பார்க்கின்றனர்.
இதையடுத்து போலீஸார், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர் இளமாறனைத் தாக்கிய வழக்கில் ஆனந்த், அவருடன் வந்த மூன்று சிறுவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு ஆனந்த், சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று சிறுவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போன் பறிப்புக்காக இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இளமாறன் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து மெரினா பகுதியில் காலை, மாலை நேரங்களில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே சென்னை மெரினாவில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதையும் மீறி இளமாறன கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தின் அருகில் சர்வ சாதாரணமாக கத்தியோடு இளைஞர், சிறுவர்கள் நடந்து செல்லும் காட்சிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
source https://www.vikatan.com/news/crime/chennai-marina-attack-on-photographer-youth-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக