ரசாயன உரங்களின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இது தங்களின் வயிற்றில் அடிக்கும் செயல் எனவும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ``2016-ம் வருஷம் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இன்னும் ஆறு வருஷத்துல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்னு சொன்னாரு. ஆனா இப்ப நடக்கிறதைப் பார்த்தால், அதுக்கு நேர் விரோதமா இருக்கு. விவசாயிகளுக்கான உற்பத்திச் செலவைதான் இரட்டிப்பாக்கிகிட்டு இருக்காங்க. விவசாயிகளுடைய செலவை இரட்டிப்பாக்குவேன்னு சொல்ல நினைச்சவர், வாய் தவறி வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும்னு சொல்லிட்டாரோனு நினைக்கத் தோணுது. அவருடைய உதடுகள், விவசாயிகளுக்காகப் பேசினாலும் அவரோட உள்ளம் என்னவோ பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்பட்டுட்டு இருக்கு. உரம் விலை உயர்வு மத்திய அரசின் உண்மையான எண்ண ஓட்டத்தை, அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கு. தமிழ்நாடு கேரளா, மேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல் முடியுற வரைக்கும் மத்திய அரசு இந்த விஷயத்துல அமைதியா இருந்திருக்கு. தேர்தல் முடிந்த பிறகு ரசாயன உரங்களின் விலை உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கு.
தேர்தலுக்கு முன்பே விலை உயர்த்தப்பட்டிருந்தால் விவசாயிகள் இந்தத் தேர்தல்ல தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பாங்க. அதனாலதான் தேர்தல் வரைக்கும் விலையை உயர்த்தாமல் நயவஞ்சகமாக, தேர்தல் முடிந்த பிறகு, உரங்களின் விலையை உயர்த்தியிருக்காங்க. 2021- 22-ம் வருசத்துக்கு உர மானியமாக 60,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இது பெருநிறுவனங்களுக்குத்தான் சாதகமானது.
இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. உர மானியம் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செஞ்சதுக்குப் பிறகு, எதுக்காக இந்த 50 சதவீத விலை உயர்வு? 1200 ரூபாய்க்கு விற்கப்பட்ட, ஒரு மூட்டை டிஏபி உரம் 1,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. 60 சதவீதத்துக்கு மேல் விலை உயர்த்தப்பட்டுருக்கு. இதுவரை வரலாறு காணாத விலை உயர்வு இது. 975 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை காம்ப்ளக்ஸ் இப்ப 1350 ரூபாயாக உயர்த்தப்பட்டுருக்கு. இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற செயல். அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் உள்ளிட்டவைகளுக்கான வாடகை கடந்த சில ஆண்டுகளாக பல மடங்கு உயர்த்தப்பட்டுருக்கு. விவசாய கூலித் தொழிலாளர்களுக்கான ஊதியமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிச்சிருக்கு.
அதே சமயத்தில் விளைபொருள்களுக்கு, அதற்கு ஏற்ற வகையில் விலை உயர்த்தப்படலை. இதனால் விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கிறதே கிடையாது. விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்த நிலையில் மேலும் ரசாயன உரங்களின் விலையையும் உயர்த்திக்கிட்டே போனால், விவசாயிகளால் எப்படி சமாளிக்க முடியும்? அதனாலதான் சொல்றோம், பிரதமர் நரேந்திர மோடியின் உதடுகள் விவசாயிகளுக்காக பேசினாலும் அவருடைய உள்ளம் என்னவோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகத்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. உரங்களின் விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். உர விலை உயர்வை மத்திய அரசு நியாயப்படுத்தினால், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய, பாரத பிரதமர் விவசாய வெகுமதி தொகுதியை 50 சதவீதம் அதிகப்படுத்தணும்.
இப்ப வருசத்துக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டுக்கிட்டு இருக்கு. இதை 12,000 ஆக உயர்த்தி கொடுக்கணும். நெல்லுக்கான விலையையும் அதிகப்படுத்தணும். நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் விலை கொடுக்கணும். கரும்புக்கு ஒரு டன்னுக்கு 5,000 ரூபாய் விலை கொடுக்கணும். இதெல்லாம் செஞ்சாதான், ரசாயன உரங்களின் விலை உயர்வை, விவசாயிகளால் ஓரளவுக்காவது சமாளிக்க முடியும்.’’ என்றார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``உர நிறுவனங்கள் தங்களோட விருப்பம் போல், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி விலையை நிர்ணயம் செஞ்சுக்கலாம்னு மத்திய அரசு மறைமுக அனுமதி கொடுத்ததுனாலதான், இந்தளவுக்கு விலை உயர்த்தப்பட்டுருக்கு.
விவசாயிகள் ஏற்கனவே பலவிதமான நெருக்கடிகளை சந்திச்சிக்கிட்டு இருக்கோம். உரங்களின் விலை இந்தளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டால், விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுட்டு, கூலித் தொழிலாளர்களாக போயாகணும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மத்திய அரசாங்கம் கோடிக்கணக்குல மானியம் கொடுக்குது. இதைப் பார்த்துட்டு, மத்திய அரசு விவசாயிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குதுனு பொதுமக்கள் நினைக்குறாங்க. ஆனால் இந்த மானியத்தால், பெரு நிறுவனங்கள்தான் பயன் அடைஞ்சிக்கிட்டு இருக்கு. உரம், பூச்சிக்கொல்லிக்கான மானியத்தை நேரடியா விவசாயிகளுக்கே வழங்கணும். விவசாயிகள், கடைகள்ல உரம் வாங்கும்போது, மானியத்தை கணக்கீட்டு அதுக்கேத்த மாதிரி தள்ளுபடி செய்யணும். கைத்தறி ஆடைகளுக்கான மானியம், இந்த மாதிரிதான் வழங்கப்படுது. பொதுமக்கள், கைத்தறி ஆடைகள் வாங்கும்போது, ரசீதுல, மானியத்தை குறிப்பிட்டு, விலையைக் குறைச்சிக்குறாங்க. அதுமாதிரி உரத்துக்கும் செய்யணும்’’ என வலியுறுத்தினார்.
source https://www.vikatan.com/news/agriculture/farmers-angry-on-central-govt-over-fertilizer-rate-hike
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக