தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குடிபோதையில் உடலில் காயங்களுடன் வந்த இளைஞர்கள் சிலர், மருத்துவர்களை தாக்க முயன்ற சம்பவம், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த ராகவன், ஒரத்தநாட்டைச் சேர்ந்த மாதேஸ்வரன் இருவரும் நேற்று முன்தினம் இரவு மதுபோதையுடன் ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூருக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகே கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்து இவர்களது நண்பர்களான ராமச்சந்திரன், ராகவன் ஆகிய இருவரும், காயமடைந்தவர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியன், காயம் அடைந்தவர்களிடம் அடிபட்டதற்கான காரணம் குறித்து கேட்டிருக்கிறார். மதுபோதையில் இருந்த மாதேஸ்வரன், ராகவன் உள்ளிட்ட 4 பேரும், மருத்துவர் அருண்பாண்டியனை, அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தபோது, குடிபோதையில் இருந்த அந்த நான்கு இளைஞர்களும், நாற்காலிகளை கையில் எடுத்து, வீசியதாக சொல்லப்படுகிறது. ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, மற்றவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்த அருண்பாண்டியன் மற்றும் சக மருத்துவர்கள், தொடர்புடைய நபர்களை கைது செய்யக் கோரி வலியுறுத்தியிருக்கிறார்கள். தகவலறிந்து வந்த தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி பாரதிராஜன், கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், நள்ளிரவு 12 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, மருத்துவர்களை சமாதானப்படுத்தினார். ``உங்களோட மன வேதனையை என்னால் உணர முடியுது. கொரோனா நேரத்துல நீங்கள் செய்யும் பணி மிகவும் உயர்வானது. இந்த சம்பவத்தால் நீங்க மனச்சோர்வு அடைஞ்சிடக்கூடாது. மக்கள் நலனுக்காக, இதை நாம சகிச்சிக்கணும். பொறுத்தக்கணும். உங்க மேல தாக்குதல் நடத்திய நபர்கள் மேல கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்படும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததுக்காக நான் உங்கக்கிட்ட வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்’' என ஆறுதலான வார்த்தைகளால் சமாதானப்படுத்தினார். இது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரிடம் பேசிய கலெக்டர், ``உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. நம்முடைய உயிரை காக்கக்கூடிய மருத்துவர்களிடம் இப்படி நடந்து கொள்வது நியாயமா’’ என எடுத்துரைத்துக் கண்டித்தார். பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியன் அளித்த புகாரைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராகவன், மாதேஸ்வரன், ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/thanjavur-gh-doctors-attacked-collector-pacifies-doctors
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக