Ad

ஞாயிறு, 21 மார்ச், 2021

தஞ்சை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! - கலக்கத்தில் பெற்றோர்கள்

தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவி வருவதையடுத்து 9ம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரை மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று கும்பகோணத்தில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஏற்கெனவே பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. மத்திய, மாநில அரசுகள் லாக்டெளன் நடைமுறைபடுத்தி கொரொனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் குறைந்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில வாரங்களாகவே பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் ஆகியோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர்.

குறிப்பாக அம்மாபேட்டை பள்ளியில் 9 -ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படித்த 58 மாணவிகள், ஆசிரியை, பெற்றோர் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சியினை மேற்கொண்டார். கொரோனா தொற்றுக்கு ஆளான பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளிக்கு வந்த மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா

இதையடுத்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளுக்கு உள்ளிட்ட 11 பள்ளிகள், இரண்டு கல்லூரிகள், ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகியற்றை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,பள்ளி வேன் டிரைவர்கள் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகினர். கொரோனா பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். நேற்று பட்டுக்கோட்டையில் உள்ள பள்ளிக்கு சென்றவர், ``கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் மாணவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சையும், தரமான உணவும் கொடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து தற்போது இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. முன்னர் கொரொனாவை கட்டுக்குள் கொண்டு வர மக்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தனர். அதே போல் முககவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நடைகமுறைகளை கடைபிடித்து கொரொனா பரவவதை தடுக்க வேண்டும்” என்றார்.

கலெக்டர் கோவிந்தராவ்

அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத, கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளிக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக காவல்துறை மூலம் வழக்கும் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 11 பள்ளிகளில்143 பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்படட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மொத்தம் 1,200 மாணவர்களுக்கு சோதனை செய்ப்பட்டிருந்தது. இதில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுக்கும்” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-increased-in-schools-shocked-the-parents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக