Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஆஜராக சம்மன்; தயாராக இருந்த போலீஸார் - ஆஜராகாமல் கடிதம் வழங்கிய சீமான் - பின்னணி என்ன?!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பெயரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகும்படி செப்டம்பர் 9-ம் தேதியன்று சம்மன் வழங்கியது வளசரவாக்கம் காவல்துறை. செப்டம்பர் 12-ம் தேதி சீமான் ஆஜராவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்றும்(12-09-2023) ஆஜராகவில்லை. மாறாக சீமான் தரப்பில் இரு கடிதங்கள் வழங்கப்படிருப்பதாக தகவல்கள் வரவே அதுகுறித்து விசாரித்தோம்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாகவே வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். மேலும் சீமானை கைது செய்யும் வரை விடப் போவதில்லை எனச் சூடாக பேசியிருந்தார். பிறகு புகார் கொடுத்த விஜயலட்சுமியை பலமுறை அழைத்து விசாரித்தது காவல்துறை. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கினர் வளசரவாக்கம் காவல்துறையினர்.

செப்டம்பர் 11-ம் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திப்பில் பங்கேற்றபோது வளசரவாக்கம் காவல் நிலைய சம்மன்படி ஆஜாராவீர்களா... என்ற கேள்விக்கு ``ஆஜர் ஆவேன்” என பதிலளித்திருந்தார். மறுபுறம் வளசரவாக்கம் காவல்நிலையமும் செப்.12-ம் தேதி காலை 9 மணி முதலே பரபரப்பாக காணப்பட்டது. சீமான் வந்தால் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்களோ அவையெல்லாம் செய்யப்பட்டிருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் திரண்டனர். கட்சியின் ஊடகப்பிரிவினர், தலைமை நிர்வாகிகளும் வளசரவாக்கம் காவல்நிலைய பகுதிக்கு வந்திருந்தனர், சீமான் ஆஜராவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் வளசரவாக்கம் காவல் நிலைப் பகுதியில் தென்பட்டன. ஆனால் அவர் வரவேயில்லை.

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் என்ற தகவல் பரவியிருந்தாலும், ஆஜாராகும் திட்டமே சீமானிடம் இல்லை. சம்மன் வழங்கியதுமே அவரின் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் சீமான். அப்போதே வழக்கறிஞர்கள் மட்டும் சென்று விளக்கமளித்தால் போதுமென முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது” என்றனர்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான வழக்கறிஞர் பாசறை செயலாளர் சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சீமான் வழங்கியதாக இரு கடிதங்களை காவல் ஆய்வாளரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது

சீமான் வழங்கிய கடிதத்தில் என்ன இருந்தது என விசாரித்தோம். அது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளிகள், ``முதலில் செப்டம்பர் 12-ம் தேதி ஆஜராக முடியாத காரணத்தை முதலில் விவரித்துள்ளார் சீமான். மேலும் 2011-ம் ஆண்டு சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார். ஆனால் அதன்மீது மேல்விசாரணை வேண்டாமென விஜயலட்சுமியே கடிதம் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதே வழக்கில் சீமானை விசாரணக்கு அழைக்கிறீர்களா... அல்லது தற்போது புதிய புகார்கள் ஏதேனும் சீமான் மீது பதியப்பட்டிருக்கிறதா... புதிதாக வழக்குகள் பதியப்பட்டிருந்தால் எந்த பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளது... அவ்வாறில்லாமல் பழைய வழக்குகளை தொடர்கிறீர்கள் என்றால் நீதிமன்ற ஒப்புதலை பெற்றுள்ளீர்களா.. என்ற கேள்விகளையெல்லாம் உள்ளடிக்கிய கடிதங்களை சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்திருக்கிறார்கள்” என்றனர்

பாத்திமா பர்கானா

நம்மிடம் பேசிய இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் பார்த்திமா பர்கானா ``விசாரணைக்கு வரும்படி சம்மன் அளித்த போலீஸார், எந்தவித முறையான விளக்கத்தையும் தரவில்லை. 2011-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கா... புதிய வழக்குகள் என்ற அடிப்படை தகவல்களை கூட இல்லை. போதிய விளக்கத்தை போலீஸார் கொடுத்தப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்றார் சுருக்கமாக.



source https://www.vikatan.com/government-and-politics/governance/plan-changed-seaman-avoids-appearing-on-police-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக