Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

``தீண்டாமை தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது!” - சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி

கும்பகோணம், திருவிடைமருதுார் அருகே உள்ள ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவபுரம் ஸ்ரீ ஸ்ரீ வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த பின்னர் ஆளுநர் ரவி பேசியதாவது, ``ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோயில் என்பது நமது கலாசாரத்தின் அடையாளமாக இருக்கிறது.

கோயில் என்பது வெறும் வழிபாட்டு தலம் அல்ல. அது நமது கலாசாரத்துடனும், வாழ்க்கை முறையோடு பின்னி பிணைந்தது. நமது நாட்டின் கட்டமைப்புகள் மன்னார்களால் உருவாக்கப் படவில்லை. ரிஷி, துறவிகளால் வடிவமைக்கப்பட்டது. தர்மம் மற்றும் அறம் சார்ந்தது தான் நமது பாரத நாடு. அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது தான் ஒரே குடும்பம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒவ்வொரு விதமான காலசாரம், சம்பிரதாயம் உள்ளது. ஒரு மரத்தில் இருக்கும் கிளைகள் ஆயிரம் இருந்தாலும், அவைகள் எல்லாம் ஒரு புள்ளியில் இருக்கிறது. இந்து தத்துவத்தின் அடிப்படையில் தான் நமது பாரதம் கன்னியாகுமரி கடல் முதல் இமயமலை வரை ஒரே குடும்பமாக உருவாகியுள்ளது. பாரதத்தின் வலிமையாக இந்து தர்மம் அமைந்துள்ளது. இதில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் இல்லை.

இந்தியாவின் மீது பலரும் படையெடுத்து, பாரத தர்மத்தை பலவீனப்படுத்த, ஒழிக்க வேண்டும் என நினைத்தனர். ஆனால், நமது டி.என்.ஏ.,விலும், உடலிலும் இருந்ததால், அவர்களால் அதை அழிக்க முடியவில்லை. உலகத் தலைவராக பிரதமர் மோடி வளர்ந்துள்ளார். பொருளாரத்தில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். விரைவில் மூன்றாவது நாடாக வர உள்ளோம். உலகளவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இந்தியாவில் தான் உள்ளது. உலகத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது. சாதி, மத வேறுபாடு இருந்தாலும், நமது பாரத குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்னை என்றாலும், அது நமது நாட்டிற்கான பிரச்னையாக பார்க்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்றைக்கு இந்து தர்மத்தை அழிப்பதற்காக பேசி வருகிறார்கள். என்ன செய்தாலும் இந்து தர்மத்தை அழிக்க முடியாது. அதில் அவர்கள் வெற்றி பெற போவதும் இல்லை. இந்து தர்மம் அரசியல் அமைப்பு சட்டத்தில் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. சிலர் அரசியல் அமைப்பு சட்டத்தை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது படிக்காமல் இருப்பவர்கள் தான் இன்றைக்கு தவறாக பேசி வருகிறார்கள்.

இந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது இந்தியாவை பிளவுப்படுத்த வேண்டும் என்பது தான். தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என கூறுவதை தமிழகத்தில் தான் பார்க்கிறேன்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

சாதி அடையாளங்கள் அணிந்து கொள்ளுபவர்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். அவர்களுக்காக சாதி கட்சியினர் நிறைய பேர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன். நமக்கு தேவை சமூக மாற்றங்களும், பொது சிந்தனையும் தான். இந்த தீண்டாமை ஏற்புடையது அல்ல நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rv-ravi-speech-in-kumbakonam-event-regarding-untouchability

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக