Ad

வியாழன், 14 செப்டம்பர், 2023

`டீசல் கார் மேல அப்படி என்ன காண்டு?' வறுத்தெடுக்கும் கார் பிரியர்கள்; அந்தர்பல்ட்டி அடித்த அமைச்சர்!

"அமைச்சர் நிதின் கட்கரிக்குச் சுற்றுச்சூழல் மேல் அக்கறையா… இல்லை டீசல் மேல் எரிச்சலா என்று தெரியவில்லை" – இப்படித்தான் சோஷியல் மீடியாக்களைத் திறந்தால் கமென்ட்கள் வந்து விழுகின்றன. அவர் செய்வதும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு வினைக்கு எதிர்ப்பு வந்தவுடன் விஐபிகள் பல்ட்டி அடிப்பார்களே… அதேபோல் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும் டீசல் விவகாரத்தில் ஒரு பல்ட்டி அடித்திருக்கிறார்.

டீசல் கார்களை ஒழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்று ஒவ்வோர் இடத்திலும் அதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அப்படித்தான் அண்மையில் SIAM (Society of Indian Automobile Manufacturers) மாநாட்டில் அவர் பேசிய விஷயத்தால், உடனடியாகப் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகளே சரிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! 

Petrol Diesel filling

SIAM மாநாடுதான் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் முக்கியமாக முடிவு எடுக்கப்படும் முக்கியமான இடம். இங்குதான் இந்தியாவின் அத்தனை ஆட்டோமொபைல் அசுரர்களும் சந்திப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மாநாட்டில்தான் நிதின் கட்கரி டீசலுக்கு எதிராக ஒரு விஷயத்தைப் பேசியிருக்கிறார். 

Nitin Gadkari | நிதின் கட்கரி

இதன் தொடர்ச்சியாக மும்பைப் பங்குச்சந்தையில் எரிபொருள் சப்ளை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் 5.3%, இந்தியன் ஆயில் 3.78%, பாரத் பெட்ரோலியம் 4.11% என்று வரிசையாகச் சரிந்துத் தள்ளின. ஆட்டோமொபைல் நிறுவனங்களும் காலியாகின. அசோக் லேலாண்ட்டுக்கு 2.68%, டாடா மோட்டார்ஸுக்கு 2.19%, ஐஷர் மோட்டார்ஸுக்கு 1.85%, மஹிந்திரா அண்ட் மஹிந்திராவுக்கு 1.55%, டிவிஎஸ் மோட்டார்ஸுக்கு 1.17% என்று பங்குவிகிதம் சர்ரெனக் குறைந்தது. இதனால் BSE (Bombay Stock Exchange)–ல் ஆட்டோ குறியீடு, 1.77% குறைந்துவிட்டது. (நேற்று முன்தின நிலவரம்).

petrol and diesel ( Representational Image)

இதைக் கண்டு ஷாக் ஆன நிறுவனங்கள், அமைச்சகத்தை வரிசையாகச் சாட ஆரம்பித்து விட்டன. 

ஏற்கெனவே மாருதி, ரெனோ, ஸ்கோடா, நிஸான், ஃபோக்ஸ்வாகன், சிட்ரன் போன்றவையெல்லாம் டீசலைக் கைகழுவிவிட்டன. இப்போதைக்கு கார் நிறுவனங்களில் டீசல் கார்களைக் கைவிடாமல் தயாரித்து வருபவை – மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஜீப், ஹூண்டாய் போன்ற சில முக்கியமான நிறுவனங்கள்.

‘‘இப்போதைக்கு இந்தியாதான் ஆட்டோமொபைலைப் பொறுத்தவரை வரி விதிப்பு அதிகம் செலுத்தும் நாடு. டீசல் எஸ்யூவிகளுக்கு இப்போதே சுமார் 45% என்பது அதிகம்தான். இப்படி இருக்கையில் அமைச்சர் இன்னும் வரி அதிகம் விதிக்க எப்படி ஐடியா கொடுக்கிறார் என்று தெரியவில்லை!’’ என்று ஒரு மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் CEO கோபப்பட்டிருக்கிறார். 

Hyundai Exter Petrol

‘‘ஏற்கெனவே டீசல் இன்ஜின்களை BS-6 நார்ம்ஸுக்கு ஏற்ப அப்கிரடே் செய்வதற்குப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்திருக்கிறோம். இப்படி நாங்கள் அரசாங்கத்தின் நார்ம்ஸ்களுக்கு ஏற்ப கட்டுப்பட்டுத்தான் நடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் வரி ஏற்ற எப்படி மனசு வருது?’’ என்று சொல்லியிருக்கிறார் இன்னொரு கார் தயாரிப்பு நிறுவனத்தின் சேர்மன். 

கூடவே டீசல் கார் பிரியர்களும், நெட்டிசன்களும் சேர்ந்தே வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டனர். ‘‘டீசல் இல்லாமல் எப்படிப் போக்குவரத்து இயங்கும்? லாஜிஸ்ட்டிக்கில் முக்கியமே இதுதானே! இதெல்லாம் டூ மச்! அமைச்சருக்கு டீசல் மேல காண்டா… இல்லையென்றால் உண்மையாக மாசுக்கட்டுப்பாடு அக்கறையானு தெரியலை’’ என்று பொங்கிவிட்டனர்.

Petrol Diesel Station

இந்நிலையில் நிதின் கட்கரி உடனேயே இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ‘‘அப்படி விரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை!’’ என்று ‘ஆடு காணாமப் போன மாதிரி கனவு கண்டேன்’ பாணியில் அந்தர் பல்ட்டி அடித்த நிலையில்தான், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கின்றன.

நிஜமாகவே அமைச்சர் ஐயா, டீசல் வாகனங்கள் மேல அப்படி என்ன காண்டு உங்களுக்கு?


source https://www.vikatan.com/automobile/car/nitin-gadkari-withdraws-his-gst-remark-on-diesel-vehicles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக